Monday, September 4, 2017

பாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு? யாருக்கோ!!!


Share/Bookmark
த்தனையோ இளம் இயக்குனர்கள் எவ்வளவோ நல்ல நல்ல கதைகளையெல்லாம் கையில் வைத்து வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களை அணுகும்போது, அது சரியில்லை இது சரியில்லை என ஆயிரம் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சில காட்டு மொக்கை படங்களப் பார்க்கும்போது இந்தக் கதையையெல்லாம் எப்படி தயாரிப்பாளரிடம் கூறி ஒப்புதல் வாங்கியிருப்பார்கள் என்று நினைத்து வியப்படையாமல் இருக்க முடிவதில்லை.

ஒருவேளை பெரிய ஹீரோவும், ஒரு பெரிய இயக்குனரும் சேரும்போது கதைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லையோ என்னவோ? அவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இவ்வாறு அலட்சியப்போக்கில் எடுக்கப்படும் சினிமாக்களுக்கு மக்கள் அவ்வப்போது தக்க பாடம் புகட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  பாலகிருஷ்ணா, பூரி ஜகன்நாத் கூட்டணியில் உருவான பைசா வசூல் திரைப்படமும் அப்படித்தான்.

பாலகிருணாவைப் பற்றி நமக்கு அவ்வளவு அறிமுகம் தேவையில்லை. அவருடைய நடன அசைவுகளும், அதீத சக்திகளும் ரொம்பவே பிரபலம். “போக்கிரி” புகழ் பூரி ஜெகன்னாத் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பொழுதெல்லாம் ஒரு இயக்குனர் ரெண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்து முடிக்கவே போராடிக் கொண்டிருக்கும் போது 2017 களில் கூட வருடத்திற்கு இரண்டு முதல் மூண்று படங்கள் வரை இயக்கும் ஒரே இயக்குனர் பூரி ஜகந்நாத் மட்டுமே. 2000 த்தில் முதல் படத்தை இயக்கிய பூரி, இந்தப் பதினேழு வருடத்தில் இதுவரை 32 படங்களை இயக்கியுள்ளார். அனைத்து முண்ணனி நடிகர்களையும் இயக்கியிருக்கிறார். இவரின் ஒரு படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும் அதே சமயத்தில் அடுத்த படம் தரை லெவலில் அட்டர் ஃப்ளாப் ஆகும். கணிக்க முடியாத ஒரு முன்ணனி இயக்குனர் இயக்குனர்.

இப்பொழுது பாலைய்யாவின் 101வது படமான பைசா வசூலை பூரி ஜகன்னாத் இயக்க, எதிர்பார்ப்பு எகிரியிருந்தது. ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக. இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் சொல்கிறேன். இதை இதுவரை எத்தனை படத்தில் இதற்கு முன்பாக  பார்த்திருக்கிறீர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

பாப் மார்லி எனும் மிகப்பெரிய கேங்ஸ்டரை அழிக்க முடியாமல் தவிக்கிறது உளவுத்துறை. எனவே அவனைப் போலவே இன்னொரு ரவுடியை வைத்து பாப் மார்லியின் கதையை முடிக்க திட்டமிடுகிறார்கள். அதற்கு சரியான ஆள் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 25 கொலை, 35 வெட்டு என்ற ரெக்கார்டுகளுடன் திகார் ஜெயிலிலிருந்து வெளிவந்திருப்பவர் தேடா சிங் (பாலகிருஷ்ணா). அவரையே இந்த ஸ்பெஷல் ஆப்ரேஷனுக்கு தேர்வு செய்கிறார்கள். அவரது வேலை பாப் மார்லேயின் ரவுடி கும்பலில் இணைந்து அங்கிருந்தே அவனை தீர்த்துக்கட்டுவது.

தேடா சிங் தங்கியிருக்கும் அதே ஏரியாவில் வசிக்கும் ஹாரிகா தனது அக்காவைக் இரண்டு மாதங்களாகக் காணவில்லை என பெரிய பெரிய அதிகாரிகளைப் பார்த்து விசாரித்து வருகிறார். அதே சமயம் பாலைய்யா தலைநகரம் வடிவேலு போல முகத்தை அருகில் காட்டிக் காட்டி ஹாரிகாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாப் மார்லியின் ரவுடி கும்பலால் ஹாரிகாவின் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் தடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஹாரிகாவின் அக்கா இறந்துவிட்டதும் அதற்கு காரணமான கொலையாளி தேடா சிங் எனவும் தெரியவர, தேடா சிங்கை இதயத்திற்கு சற்று அருகில் சுடுகிறார் ஹாரிகா. (இதயத்துல சுட்டாதான் செத்துருவாரே) அத்துடன் இடைவேளை.

இதன்பிறகு இரண்டாவது பாதியில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது இரண்டு வயது குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும். கொசுவர்த்தியைச் சுற்றி ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்.  போர்ச்சுக்கல் நாட்டில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருப்பர் தேடா சிங். (அத நம்ம ஊர்ல ஓட்டுனா ஆகாதான்னு நீங்க கேக்குறது புரியிது) டூரிஸ்ட் போல வரும் ஃஹாரிகாவின் அக்கா சாரிகாவை (ஷ்ரேயா) தேடா சிங் லவ்வுகிறார். (என்னய்யா பேரு அங்கவை சங்கவை மாதிரி இருக்கு) சாரிகா ஒரு நியூஸ் சேனலில் வேலை செய்பவர். பாப் மார்லேயைப் பற்றி ரகசியமாக ஒரு டாக்குமெண்டரி தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட பாப் மார்லே குழு சாரிகாவைத் தாக்க, டாக்சி ட்ரைவர் தேடா சிங் குறுக்கால புகுந்து காப்பாற்றுகிறார். அதன்பிறகு தான் தேடா சிங் உண்மையில் டாக்ஸி ட்ரைவர் அல்ல. பாப் மார்லேவைப் பிடிக்க மாறு வேடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ”ரா ஏஜெண்ட்” எனும் ரத்ததத்தை உரைய வைக்கும் அந்த ரகசியத்தை வெளியிடுகிறார்கள்.

இப்படி ஒரு கேவலாமான ட்விஸ்டால் கடுப்பாகும் பாப் மார்லே சாரிகாவை போட்டுத்தள்ளுகிறார். ஒருவேளை சாரிகா எடுத்த வீடியோ அவள் தங்கை ஹாரிகாவிடம் இருந்தாலும் இருக்கும் என்ற நோக்கில் அவளையும் டார்ச்சர் செய்ய அவர்களைக் காப்பாற்றவே தேடா சிங் ரவுடி அவதாரம் எடுக்கிறார். பிறகு க்ளைமாக்ஸில் அனைவரயும் போட்டுத்தள்ளுகிறார். இப்படி ஒரு கண்றாவியான கதையைக் கண்டதுண்ணா யுவர்ஹானர்?

இப்போது நான் சொன்ன கதையில் உங்களுக்கு என்னென்ன படங்கள் ஞாபகம் வருகின்றன? விஜய்யின் போக்கிரி மற்றும் மதுர, அர்ஜூன் நடித்த கிரி, சரத்குமாரின் ஏய்… மற்றும் பல.  அதுமட்டுமல்லாமல் இதே கதையை இதே இயக்குனர் “இத்தர் அம்மாயில்தோ” (ரெண்டு பொண்ணுங்களோட) என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் அல்லு அர்ஜூனை வைத்து எடுத்திருக்கிறார்.

மொத்தப் படமுமே எதோ ஏனோதானோ என்று எடுத்தது போல இருக்கிறது. பாலைய்யாவை எனர்ஜிடிக்காக காட்டுவதாக நினைத்துக் கொண்டு அனைத்து வசனங்களையுமே ஹை பிட்சில் பேச வைத்து காது ஜவ்வுகளைக் கிழிக்கிறார்கள். விவேகத்தில் விவேக் ஓபராய் அஜித்துக்கு கொடுப்பதைப் போல பல மடங்கு பில்ட் அப் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறார். மற்ற படங்களை விட டான்ஸ் மூவ்மெண்ட் இந்த படத்தில் கொஞ்சம் குறைவுதான்.

முன்பெல்லாம் ஹீரோ சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக நடிப்பார்கள். அடுத்து போகப் போக ACP, DCP என்று ப்ரோமோஷன் ஆகி இப்பொழுதெல்லாம் நடித்தால் “ரா ஏஜெண்டு சார்.. நா வெய்ட் பன்றேன் சார்” என்கிறார்கள்.

பாலைய்யா ரா ஏஜெண்ட் என்பது ஒரே ஒருவரைத் தவிற யாருக்குமே தெரியாது. (யாருக்குமே தெரியாம வேலை பாக்குறதுக்கு எதுக்குடா வேலை பாக்குறீங்க). அந்த உண்மை தெரிந்த ஒருவரையும் எதிரிகள் சுட்டுவிட, இவர் ரா ஏஜெண்ட் என எப்படி உறுதிப்படுத்துவது என அனைவரும் குழம்புகிறார்கள். உடனே ஒரு வழி.. அவரை முதலில் நேர்காணல் செய்த போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகளை மீண்டும் கேட்டு அதே பதிலை அவர் சொல்லும் பட்சத்தில் இவர் தான் அந்த ஏஜெண்டு என உறுப்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். மறுக்கா இண்டர்வியூ. கேள்விகள் கேட்க கேட்க பாலைய்யா பிரித்து மேய்கிறார். இண்டர்வியூ முடியும் போது மொத்த போலீஸ் படையும் எழுந்து அவருக்கு சல்யூட் அடிக்க, இதுக்கு எங்கள நாலு அடி செருப்பாலயே அடிச்சிருக்கலாம் என்று தோன்றியது நமக்கு. 

இடைவேளையில் நெஞ்சுக்கு அருகில் குண்டு பாய்ந்ததும், அதைப்பற்றி கவலைப்படாமல் ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்து பஞ்ச் டயலாக் பேசிய காட்சியில் திரையரங்கில் இருந்த அனைவரும் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டனர்.

படத்தில் உருப்படியாக இருந்த ஒரே விஷயம் பாடல்கள். அனூப் ரூபன்ஸ் அனைத்து பாடல்களையுமே சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதுவும் முதல் பாடலில் க்ரியா தத் போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிற்கிறது. கொடுத்த காசு அது ஒண்றுக்கு மட்டும்தான் தகும். 

மொத்தத்தில் பைசா வசூல் யாருக்கு என்றால் யாருக்கோ என்றுதான் சொல்ல வேண்டும்… நிச்சயம் தயாரிப்பாளருக்கு இல்லை.

படம் முடிந்து வெளியில் வரும்போது அருகில் வந்தவரிடம் “என்னங்க படம் இவ்வளவு கேவலமா இருக்கு?” என்றேன். ”54 வயசுலயும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறாரு. அந்த ஹார்டு ஒர்க்குக்காக படத்த பாருங்க.. பாலைய்யாடா… ஹார்டு ஒர்க்குடா” என அவர் கூறியதும் ”ஆத்தாடி அந்த குரூப்பு இங்கயும் வந்துட்டானுகடோவ்” என பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுத்தேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Anonymous said...

Boss...
how is Kurangu bommai? More over, would like to read your reviews, than watch them on you tube. Please do consider this. Reading has become a rare habit and dont want to discontinue..

Thanks,

ஜீவி said...

பாலய்யா ஒஸ்தாவய்யா ன்னு சொன்னது மாறி பாலய்யா ஒத்துய்யா ன்னு ரசிகர்கள் சொல்ற நிலைமை வந்தாச்சு

Anonymous said...

y bro thirumbavum pure tamil la eludhirukinga ??
unga blog padika varadhuku reason eh andha nakkal pechu kaga dhan .
vivegam padathuku eludhuna maariye eludhunga inime

Anonymous said...

உங்கள் தைரியம் உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது. பாலையா படம் எல்லாம் பாக்குற அளவுக்கு உங்க இதயம் ஸ்ராங்கா இருக்கு!!

அப்புறம் ஒரு கேள்வி, மூண்று சரியா அல்லது மூன்று சரியா? முன்ணனியா அல்லது முன்னணியா??

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...