Wednesday, April 29, 2020

தடயவியல் – Case 1 மாயமான பெண்!! – பகுதி 2


Share/Bookmark


முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்!!

ஹெல்லா காணாமல் போன சம்பவத்தில் ஹெல்லாவின் கணவர் ரிச்சர்ட் Lie detector test இல் நிரபராதி என நிரூபனமானதும் காவல்துறை வேறு ஏதேனும் ஒரு துப்பிற்காக காத்திருந்தனர்.  அவர்கள்  எதிர்பார்த்ததும் விரைவிலேயே கிடைத்தது.

ஹெல்லா காணாமல் போன வாரத்தில் நல்ல பனிப்பொழிவு இருந்திருக்கிறது. சாலைகளில் பனியை அகற்றும் Snow Plow எனும் வாகன ஓட்டி ஒருவர், ஹெல்லா காணாமல் போன மறுநாள் அதிகாலை 3.30 க்கு சாலையின் ஒரு இடத்தில் Wood Chipper ஒன்று நின்றிருந்ததாகவும், ஆரஞ்சு வண்ண  மேலாடை உடுத்தியிருந்த ஒருவர் அதன் அருகில் இருந்ததாகவும், அதெ Wood chipper அடுத்த ஒரு மணி நேரத்தில் சற்று தொலைவிலுள்ள ஆற்றங்கரை ஓரமாக இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறார்.  உடனே காவல்துறை தகவல் தெரிவித்த ஓட்டுனரிடம், அந்த Wood chipper ஐ எந்த இடத்தில் பார்த்தாரோ அங்கு தங்களை அழைத்துச்செல்ல சொல்கின்றனர். ஓட்டுனரும் அழைத்துச் செல்கிறார். அவர் அழைத்துச் சென்ற இடம் ஹவுசடானிக் ( Housatanic River) எனும் நதியின் கரை.

காவல் துறையினர் அந்த நதிக்கரையினை அங்குலம் அங்குலமாகத் தேட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் கண்ணுக்குக் கிடைத்ததெல்லாம் வெறும் மரத் துணுக்குகள் மட்டுமே. தேடுதல் வேட்டை நாட்கணக்கில் நீடித்தது. கடைசில் இத்தனை நாள் தேடுதலின் பலனாக அவர்களுக்குக் கிடைத்தது ஒரு லெட்டர் கவர். ஆம்.. அதன் பெறுநர் முகவரியில் இருந்தது  ஹெல்லாவின் பெயர்.

இன்னும் நதிக்கரையின் மரத்துணுக்குகளுக்கிடையே கூர்ந்து கவனித்து தேடும்பொழுது போலீஸாருக்கு கிடைத்தது, நீல நிற ஃபைபர் இழைகள் மற்றும் சிறிய வெண்மை நிற துணுக்குகள். அந்த வெண்மை நிற துணுக்குகளை ஆய்வுக்குட்படுத்திய பொழுது அவை மனித எழும்பின் பகுதிகள் என்பது தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் சிறிய உலோக குப்பி போன்ற ஒன்றும், நிறைய மயிரிழைகளும் நதிக்கரையோரம் மரத் துணுக்குகளுக்கிடையே கிடைத்தது. மேலும் Nail Polish போடப்பட்ட ஒரு கட்டை விரல் நகமும் போலீஸாருக்குக் கிடைத்தது.

எதோ ஒரு வகையில் ஹெல்லாவிற்கும் இந்த நதிக்கரைக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிவிட, சோதனையை தீவிரப்படுத்தினர் காவல்துறை. நீரில் மூழ்கித் தேடும் diver கள் வரவழைக்கப்பட்டு, ஆற்றுக்குள் தேட ஆரம்பித்தனர். அந்த முயற்சியும் வீண் போகவில்லை.  சேதாரமடைந்த ஒரு Chain Saw ஆற்றுக்குள்ளிருந்து அவர்களுக்கு கிடைத்தது. சேதமடைந்த, அந்த Chain Saw வின் சீரியல் நம்பர் பகுதி வலுக்கட்டாயமாக சேதாரப் படுத்தப்பட்டிருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை உண்டாக்கியது.


அந்த Chain Saw தடயவியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு மேலும் சில தகவல்கள் கிடைக்கின்றன. அந்த Chain saw வின் பற்களுக்கிடையே மிக நுண்ணிய தசைத் துணுக்குகளும், ஒரு சில துண்டு துண்டான மயிரிழைகளும், நீல நிற ஃபைபர் இழைகளும் கிடைக்கின்றன. அந்த நீல நிற ஃபைபர் இழைகள் ஏற்கனவே கரையோரம் கிடைத்த நீல நிற ஃபைபர் இழைகளுடம் ஒத்துப்பொகிறது.

ஆனால் அந்த Chain Saw யாருடையது எனத் தெரியவில்லை. தெரியவேண்டுமெனில் அதன் சீரியல் நம்பர் தெரியவேண்டும். ஆனால் சீரியல் நம்பர் பகுதி சேதமடைந்திருக்கிறது. தடயவியல் துறையினர் விடுவதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட  ரசாயனக் கரைசல் மூலம் சேதாரமாக்கப்பட்ட மேல் பகுதியை நீக்குகிறார்கள். இப்போது அவர்களால் அச்சிடப்பட்டிருக்கும் சீரியல் நம்பரை ஓரளவு தெளிவாக க் காணமுடிகிறது. அந்த எண் 5921616. அந்த சீரியல் நம்பரை வைத்து விசாரிக்கும் போது , அது ஒருவரின் வாரண்டி கார்டுடன் ஒத்துப் போகிறது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட்டே தான்.

ஆனாலும் போலீசாரால் ரிச்சர்ட்டை நெருங்க முடியவில்லை. காரணம் ஹெல்லாவிற்கு என்ன ஆயிற்று என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேளை ஹெல்லா இறந்திருந்தால் அவரது சடலம் எங்கே? சடலமில்லாமல் அவர் கொலையானார் என்பதை எப்படி நிரூபிப்பது? அதற்கு தடயவியல் துறையின் உதவி இன்னும் நிறையவே தேவைப்படுகிறது.

அடுத்து நதிக்கரையில் கிடைத்த நகத்தில் இருக்கும் நக பாலிஷின் ரசாயன கலவையும், ஹெல்லாவின் வீட்டிலிருந்த நக பாலிஷின் ரசயானக் கலவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். இரண்டும் ஒத்துப்போகிறது. அந்த Chain Saw வில் கிடைத்த மயிரிழைகளையும், ஹெல்லாவின் சீப்பில் இருந்து எடுத்த மயிரிழைககளையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒண்றுதான் என்பதைக் கண்டறிகின்றனர். மேலும் கிடைத்த மயிரிழைகள் முன் தலையில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர்.

நதிக்கரையில் கிடைத்த எலும்புத் துணுக்குகளை மேலும் ஆய்வு செய்ய டாக்டர் லீ என்பவர் அழைக்கப்படுகிறார். டாக்டர் லீ அந்த மிகச் சிறிய எலும்புத் துண்டுகளை பார்த்து, ஒரு வேளை அவை wood chipper இன் வழியே வந்திருக்கலாம் என முடிவுச்செய்கிறார்.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள, ரிச்சர்ட் வாடகைக்கு எடுத்த அதே Wood chipper இல் டாக்டர் லீ  ஒரு சோதனை செய்கிறார். அந்த Wood chipper இன் உள்ளே ஒரு பன்றியை செலுத்துகின்றனர். காரணம் பன்றியின் தோல் மற்றும் எலும்பு அமைப்புகள் கிட்டத்தட்ட மனிதனை ஒத்து இருக்கும் என்கிற காரணத்தால். உள்ள சென்ற பன்றி Wood Chipper ஆல் சிறு சிறு துகள்களாக்கப்பட்டு வெளிவந்தது. வெளிவந்த எலும்புத் துகள்களை டாக்டர் லீ ஆய்வு செய்கிறார். அந்த Wood chipper ஆல் வெட்டப்பட்ட துணுக்குகளில் ஒரு தனித்தன்மையான கோடுகள் இருப்பதை கண்டறிகிறார். அந்த எலும்புத் துணுக்குகள் வெட்டப்பட்டிருக்கும் அதே முறையில் தான் நதிக்கரையில் கிடைத்த எலும்புத் துணுக்குகளும் வெட்டப்பட்டிருப்பது உறுதியாகிறது.

அதுமட்டுமல்லாமல் நதிக்கரையில் கிடைத்த மற்ற சில எலும்புத் துண்டுகளை மைராஸ்கோப்பில் ஆய்வு செய்யும் போது டாக்டர் லீ மற்றொரு விஷயத்தை கண்டறிகிறார். அவர் ஆய்வு செய்த அந்த எலும்புத் துணுக்கு மனித மண்டை ஓட்டின் நடு மண்டையின் உட்புறம் இருக்கும் எலும்பின் அமைப்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு எலும்பின் அமைப்பு.

மேலும் சில எலும்புத் துணுக்குகளை ஆய்வு செய்து அவை மண்டை ஓட்டின் பக்கவாட்டில் இருக்கும் எலும்பு அமைப்பு என்பதையும்  உறுதிசெய்தார். ஆனால் இந்த எலும்புத் துணுக்குகள் ஒருவர் உயிரோடு இருந்த போது எடுக்கப்பட்டதா அல்லது இறந்த பின்னர் உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாகவில்லை. யாரோ ஒருவர் இறந்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. யார் ? யாரால்? என்பதுதான் இப்பொழுது கேள்வி!!நதிக்கரையில் கிடைத்த சிறு சிறு எலும்புத் துணூக்குகளை திரவ நைட்ரஜனில் உறைய வைத்து அதனை பொடியாக்கி சோதனைக்கு உட்படுத்துகிறார் டாக்டர் ஹென்றி. அது ஓ பாசிடிவ் வைகையைச் சேர்ந்த ஒருவரின் எலும்பு என்பதைக் கண்டறிகிறார். அது ஹெல்லாவின் ரத்த வகையாகும்.

அடுத்து தேடுதலின் போது நதிக்கரையில் கிடைத்த அந்த சிறிய மெட்டர் குப்பியை பார்க்கிறார்கள். அது பற்களில் உபயோகிக்கப்பட்டதாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகின்றனர். ஆனாலும் அந்த குப்பியில் மனித திசுக்கள் எதும் இல்லாததால் அது ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.  தடவியலுக்கு மேலும் ஆதாரங்கள் தேவைப்பட்டன.
டாக்டர் லீயால் நியமிக்கப்பட்ட ஒருவர் மறுபடியும் நதிக்கரைக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டார். முழுமையாக 5 நாட்கள் தேடிய பின்னர் தேடுதலின் பலனாக அவர் கண்ணில் பட்டது ஒரு மனிதப் பல்.

சோதனைக் கூடத்தில் அந்தப் பல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. சில வருடங்கள் முன்பு ஹெல்லா பற்களை எடுத்த ஒரு X- Ray படத்தை அடிப்படையாக வைத்து தற்பொழுது  கிடைத்த பல் ஒப்பிடப்பட்டது. ஆய்வில் அந்தப் பல் ஹெல்லாவின் பல் என்பது நிரூபனமானது.

இறுதியாக கிடைத்த ஆதாரங்களை வைத்து ஹெல்லா இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார். ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் ஹெல்லாவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான்.

காவல்துறையினரின் பார்வையில் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்கிற யூகம் இதோ:நவம்பர் 18 அன்று இரவு ஹெல்லா வீட்டிற்கு வந்து அவளுக்கு பிடித்த நீல நிற இரவு உடைக்கு மாறுகிறாள். அப்போது தனக்கு வந்திருந்த லெட்டர் ஒன்றை எடுத்து பாக்கெட்டில் வைக்க, சற்று நேரத்தில் ரிச்சர்ட்டுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. வாக்குவாதம் முற்றி ரிச்சர்ட் போலீஸ் வேலைக்கு உபயோகிக்கும் ப்ளாஷ் லைட்டை எடுத்து ஹெல்லாவின் தலையில் அடிக்கிறான். ஹெல்லா சரிந்து முட்டி போட்ட படி கீழே விழுகிறாள். இரண்டாவது முறையும் அடிக்க, ரத்தம் தெரிந்து மெத்தையில் படுகிறது.

சிறிது நேரத்தில் ஹெல்லா இறந்துவிட, அவளை ஒரு போர்வையில் சுற்றி, வீட்டிலிருந்த ஒரு பெரிய ஃபீரீசருக்குள் வைக்கிறான். மறுநாள் காலை குழந்தைகளிடம் அம்மா இன்று முன்னதாகவே வேலைக்கு கிளம்பியதாகச் சொல்லி அவர்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பிகிறான். ரத்தம் படிந்த கார்ப்பெட்டை கிழித்து அப்புறப்படுத்துகிறான்.

அன்றே ஒரு மிகப்பெரிய Wood chipper ஐ தன்னுடைய கிரெடிட் கார்டை உபயோகித்து வாடகைக்கு எடுக்கிறான். அன்று இரவு ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த ஹெல்லாவின் உடலையும், அவனுடைய Chain Saw வையும் எடுத்துக்கொண்டு Wood chipper உடன் நதிக்கரைக்கு செல்கிறான். அவ்வாறு செல்லும்போது தான் Snow plow ஓட்டுனர் ரிச்சர்ட்டை இரண்டு இடங்களில் பார்க்கிறான்.

நதிக்கரையில் Wood chipper ஐ பொறுத்தி, ஹெல்லாவின் உடலை Chain saw மூலம் துண்டு துண்டாக வெட்டி ஒருசில மரத்துண்டுகளுடன் Wood Chipper ற்க்குள் செலுத்த, அது சிறு சிறு துணுக்குகளாக வெளியேற்றுகிறது. பெரும்பாலான துணுக்குகள் நதியின் உள்ளே விழுந்து  அடித்துச் செல்லப்படுகின்றன. ஒருசில துண்டுக்கள் கரையில் விழுகிறது. ஹெல்லாவின் பாக்கெட்டில் இருந்த லெட்டர் மட்டும் மிகக் குறைந்த சேதாரத்துடன் அப்படியே வெளியில் வந்து விழுகிறது. அவைதான் சோதனையின் போது தடயவியல் துறைக்கு கிடைத்தவை.

ஒரு நாள் முழுவதும் ஹெல்லாவின் உடல் ஃப்ரீசருக்குள் இருந்ததால் Chain Saw வால் அறுக்கும் போது ரத்தம் எதுவும் வெளிப்படவில்லை.  பிறகு சீரியல் நம்பர் பகுதியை சேதப்படுத்தி அதனை ஆற்றுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குச் செல்கிறான் ரிச்சர்ட்.

ஹெல்லாவின் வழக்கில் தடயவியல் துறையின் பங்கு அளப்பறியது. 47 பேர் கொண்டு குழு, இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் செய்த சோதனைகள் 50,000 க்கும் மேல் என்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து 50 வருட சிறை தண்டனை விதித்தது. இறந்தவரின் உடல் இல்லாமல் கொலையாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டது அந்த மாஹானத்தில் அதுவே முதல் முறை.

ஆனால் இன்று வரை ரிச்சர்ட் தான் ஹெல்லாவைக் கொன்றதாக ஒப்புக்கொள்ளவில்லை.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Unknown said...

Super ji sema thrilling and twist

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...