Friday, May 1, 2020

தடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்!!


Share/Bookmarkஉலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட தனித்திறமைகள் நிறைய இடங்களில் நிறைய நேரங்களில் பல வழக்குகள துப்பறிய காவல்துறைக்குப் பயன்பட்டிருக்கிறது. மிகச் சிறிய ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால் படம் வரையும் கலைஞர்கள். இன்று கண்கானிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியின் முகத்தை எதோ ஒரு கோணத்தில் பிடித்து குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை காட்டிவிடுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன் குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை அறிய படம் வரைபவர்கள் உதவி நிறையவே தேவைப்பட்டிருக்கிறது.

குற்றவாளியை பார்த்த ஒருவரை வைத்து அவர் எப்படி இருப்பார், அவரின் கண்கள் எப்படி இருக்கும், மூக்கு,  வாய் எப்படி இருக்கும் என்ற குறிப்புகளையெல்லாம் கேட்டு, குற்றவாளியின் முகத்தை வரைந்து கொடுத்தார்கள் இந்த கலைஞர்கள். இன்றும் அது தொடர்கிறது என்றாலும், கணிணி வந்தபிறகு கையால் வரைவதில்லை. அத்தனை வகையான கண்களும், காதுகளும், மூக்குகளும் கணிணியில் இருக்க, ஒவ்வொன்றாக எடுத்து பொருத்திக் காட்டி சில நிமிடங்களில் வேலையை முடித்து விடுகிறார்கள்.

இன்று நாம் பார்க்கப்போவதும் அதே போன்ற ஒரு தனித்திறமை கொண்ட ஒருவரால் முடித்துவைக்கப்பட்ட ஒரு வழக்கைப் பற்றித்தான். முற்றிலும் அழுகிய நிலையிலோ அல்லது எலும்புக்கூடுகள் மட்டுமோ கிடைக்கும் பட்சத்தில் அந்த கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதை காவல்துறையால் கண்டறிய இயலாது. ஃப்ராங்க் பெண்டர் என்பவர் தடவியல் துறைக்கு  உதவி வரும் ஒரு சிற்பி. அவரின் வேலை சிதைவுற்ற நிலையில் இருக்கும் ஒரு முகத்தை வைத்தோ, அல்லது வெறும் மண்டை ஓடுகளை வைத்தோ ஒருவரின் முகம் எப்படி இருக்கும் என்பதை களிமண் சிலையாக வடித்துக் கொடுப்பவர். இதனை Forensic Sculpting என்கிறார்கள். ஒருவரின் மண்டை ஓடு மட்டும் கிடைக்கும் பட்சத்தில் அவருடைய முகத்தில் எவ்வளவு தடிமனில் சதை இருக்கும் என்பதை கணக்கிட இறந்தவரின் வயது, பாலினம், கருப்பரா வெள்ளையரா போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ப்ரத்யேகமான ஒரு அட்டவணையை பயன்படுத்துகிறார்.

ஒருமுறை போலீஸாருக்கு முற்றிலும் சிதைவுற்ற நிலையில் ஒரு எலும்புக்கூடு மட்டும் கிடைக்கிறது. அது யார் என்று தெரியவில்லை. போலீஸ் ஃப்ராங்க் பெண்டரின் உதவியை நாடுகிறார்கள். பெண்டர் அந்த மண்டை ஓட்டை வைத்து, அவரிடம் இருக்கும் அட்டவணையின் உதவியுடன் , அதற்கு  ஒரு உருவம் கொடுக்கிறார். அது சில மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன் ஒத்துப்போக, சோதனை செய்து பார்க்கையின் அது அந்தப் பெண்ணின் மண்டை ஓடுதான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது. பெண்டர் உருவாக்கிய களி மண் சிலையும், காணாமல் போன பெண்ணின் புகைப்படமும் இதோ.

சரி இப்பொழுது நம்முடைய சம்பவத்திற்கு வருவோம். அமெரிக்காவின் நியூஜெர்சி மாஹானத்தில் ஜான் லிஸ்ட் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜான் லிஸ்டிற்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஜான் லிஸ்ட் ஒரு மிகப்பெரிய பங்களாவில் வசித்து வந்தார். ஜான் லிஸ்ட் வங்கி கணக்காளராக பணிபுரிய, அவரின் குழந்தைகள் அதே பகுதியில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து வர லிஸ்ட் குடும்பம் ஓரளவிற்கு ஆடம்பர வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தனர்.

1971ம் வருடம், சில நாட்கள் ஜான் லிஸ்ட் பங்களாவில் நடமாட்டம் ஏதுமில்லாமல் இருக்க, அவர்கள் எதோ ஒரு உறவினரைப் பார்க்கச் சென்றிருப்பதாக செய்தி பரவியிருந்தது. நாட்கள் கடந்தன. ஒருமாதமாகியும் லிஸ்ட் குடும்பம் திரும்பியதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் எதோ அழுகிய வாடை அடிப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவிக்க  காவல்துறை ஜான் லிஸ்ட் வீட்டிற்குள் சென்று பார்க்க முடிவெடுத்தது.

வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜான் லிஸ்டின் மனைவி, மகள், இரண்டு மகன் ஆகிய நால்வரும் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நால்வரது சடலமும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சோதனையின் போது வீட்டின் வெவ்வேறு இடங்களி அவர்கள் சுடப்பட்டு அங்கிருந்து இழுத்து வரப்பட்டு இங்கு போடப்பட்டிருப்பதாக ரத்தத் சுவடுகள் கூறின.

போலீஸ் வீடு முழுவதையும் அலசியது. மூன்றாவது மாடிக்கு சென்ற போது அவர்களுக்கு  இன்னுமொரு அதிர்ச்சி. ஜான் லிஸ்டின் வயதான தாயும் அதே போல தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அனைவரும் கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் என்பது சடலங்களின் சிதைவிலிருந்து தெரிந்தது.

மேலும் வீட்டைச் சோதனை போடும்போது கிடைத்தது அந்தக் கடிதம். ஜான் லிஸ்ட் அவர் கைப்பட எழுதிய கடிதம். “தனக்கு வேலை போய் விட்டதாகவும், செல்வச் செழிப்பிலிருந்த குடும்பம் இனி வறுமைக்கு தள்ளப்படும் எனவும், தன்னுடைய குடும்பத்தை தன்னால் இனி சரி வர பார்த்துக்கொள்ள முடியாது எனவும், அதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களைக் கொன்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் எப்படிக் கொன்றார் என்பதைப் பற்றிய விளக்கத்தையும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார். முதலில் மனைவியை சமையலறையில் சுட்டுக்கொன்று விட்டு, மகன் மகளுக்காக காத்திருந்ததாகவும், அவர்கள் பள்ளியிலிருந்து வந்த பின்பு அவர்களையும் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் மூன்றாவது மாடிக்குச் சென்று தாயையும் கொன்றதாகவும் எழுதியிருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து தாயின் சடலத்தை இழுத்து வர முடியவில்லை என்பதால் அதனை அங்கேயே விட்டுவிட்டேன் எனவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது எனவும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு டேப் ரெக்கார்டரில் ஒரு பாடலை நல்ல சத்துடன் ஒலிக்க விட்டுவிட்டு ஜான் லிஸ்ட் வீட்டை விட்டு கிளம்பிப் போயிருக்கிறார். ஜான் லிஸ்ட் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். வாரம் தவறாமல் அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு குடும்பத்துடன் செல்பவர்.

காவல்துறை ஜான் லிஸ்டை தேட ஆரம்பித்தது. ஆனால் அவர் கிடைத்த பாடில்லை. சில நாட்கள் கழித்து லிஸ்டின் காரை ஒரு விமான நிலையத்திற்கு அருகில் கண்டுபிடித்தனர். ஆனால் ஜான் லிஸ்ட் எந்த ஒரு விமானத்திலும் சென்றதாக தகவல் எதுவும் இல்லை. போலீஸ் தேடுதலை ஆரம்பிப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்னர், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத சமயத்திலேயே ஜான் லிஸ்ட் வெளிக்கிளம்பியிருந்ததால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரைத் தேடுவதில் போலீஸிற்கு மிகுந்த சிரமமாக இருந்தது. 

நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. ஜான் லிஸ்ட் தொடர்பான எந்த ஒரு தகவலும் போலீஸிற்குக் கிடைக்கவில்லை. குடும்பத்தை கொன்றுவிட்டு அதே விரக்தியில் தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று போலீஸ் தரப்பில் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அதனை உறுதிப்படுத்த எந்த ஒரு சடலமும் இதுவரை கிடைக்கவில்ல.

மாதங்கள் வருடங்கள் ஆகியது. இருந்தாலும் போலீஸ் வருடா வரும் செய்தித்தாளில் ஜான் லிஸ்டைப் பற்றி விளம்பரம் கொடுப்பது, தேடப்படுபவர்கள் பட்டியலில் அவரை சேர்ப்பது என காவல்துறை ஜான் லிஸ்ட் வழக்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

பதினெட்டு வருடங்கள் உருண்டோடியது. ஜான் லிஸ்ட் வழக்கு இன்னுமும் விடை தெரியாத கேள்வியாகத்தான் இருந்தது. அப்பொழுது அமெரிக்காவில்  “America’s Most Wanted” என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் தேடப்படும் குற்றவாளிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பையும், அவர்களது புகைப்படத்தையும் வெளியிடுவார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அவர்களுக்கு எதாவது துப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். FBI நிறைய குற்றவாளிகளை இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி பிடித்திருந்தனர். இறுதியாக ஜான் லிஸ்டைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் வெளியிட வேண்டுமானால் ஜான் லிஸ்டின் சமீபத்தைய புகைப்படம் வேண்டும். ஆனால் காவல்துறையிடம் இருப்பதோ 18 வருட பழைய புகைப்படம். அப்பொழுதுதான் காவல்துறை ஃப்ராங்க் பெண்டரை அனுக முடிவெடுக்கிறது.

ஆனால் தற்பொழுது ஃப்ராங் பெண்டருக்கான வேலை சற்று கடினம். ஒருவரின் புகைப்படத்தை மட்டும் வைத்து அவர் பதினெட்டு வருடம் கழித்து எப்படி இருப்பார் என்பதை கொண்டு வரவேண்டும். தற்பொழுது ஃப்ராங்க் பெண்டருக்கு அவரிடமிருக்கும் அட்டவணை மட்டும் போதவில்லை. இன்னும் நிறைய தகவல்கள் தேவைப்படுகிறது. ஜான் லிஸ்ட் தொடர்பான அனைத்து விபரங்களையும் படிக்கிறார். அவரின் உறவினர்களுடன் விவாதிக்கிறார். ஜான் லிஸ்ட் எப்படிப்பட்டவர், அவரின் குணம் என்ன, அவர் தன்னை மற்றவர்கள் முன்னால் எப்படி வெளிப்படுத்திக்கொள்வார் என பல தகவலகளை திரட்டுகிறார்.

ஜான் லிஸ்டின் அப்பா, தாத்தாவின் புகைப்படங்களைப் அடிப்படையாக வைத்து ஜான் லிஸ்டிற்கு எந்த அளவு முடி , எந்த பேட்டர்னில் கொட்டி இருக்கும், ஜான் லிஸ்டின் வலது காதுக்கு கீழே இருந்த அறுவை சிகிச்சை தழும்பு எப்படி இருக்கும் என்கிற தகவல்களையெல்லாம் சேகரித்து ஜான் லிஸ்டின் 18 வருடத்திற்கு பிறகான தோற்றத்தை உருவாக்குகிறார் பெண்டர்.அடுத்து பெண்டருக்கு இன்னொரு சவால். ஜான் லிஸ்ட் கண்ணாடி அணிபவர். அவர் தற்பொழுது என்ன மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடி அணிந்திருப்பார் என்பதை நிறைய காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார் பெண்டர். இறுதியாக தன்னுடைய கடந்த கால கறுப்புப் பக்கங்களை மறைக்க தடிமனான ஃப்ரேம் கொண்ட  கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு கண்ணாடியத் தெரிவு செய்கிறார். பதினெட்டு வருடம் வயதான ஜான் லிஸ்ட் ரெடி.America’s Most Wanted நிகழ்ச்சியில் அஞ்சு கொலை ஆறுமுகமாக ஜான் லிஸ்ட்டைப் பற்றிய செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிறது. இறுதியில் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்டின் உருவமும் ஒளிபரப்பப் படுகிறது. காவல்துறையின் இத்தனை முயற்சியும், கடின உழைப்பும் வீண் போகவில்லை.  டென்வர் நகரில் நிகழ்ச்சியை பார்த்த ஒரு குடும்பம் ஜான் லிஸ்டின் முகத்தைப்  பார்த்து அவர்களுக்கு தெரிந்த ஒருவரைப் போல இருப்பதாக நினைக்கிறார்கள். உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டு அது சில மாதங்களுக்கு முன்னர் தங்களுடைய அண்டை வீட்டில் வசித்த பாப் க்ளார்க் என தெரிவிக்கிறார்கள். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட உருவத்தின் கண்ணாடியும், காதுக்கு கீழே இருந்த தழும்புமே தங்களை அவ்வாறு நினைக்க வைத்தது எனவும் கூறுகின்றனர்.

காவல் துறை விசாரணையில் பாப் க்ளார்க் நியூ விர்ஜினியாவிற்கு இடம் பெயர்ந்து விட்டதாகத் தெரிகிறது. நியூ விர்ஜினியாவில் பாப் க்ளார்க்கை தேடிச் சென்று , கண்டும் பிடித்துவிட்டனர். அவரின் “நீங்கள்தான் பாப் க்ளார்கா ?” என்றிருக்கிறார்கள் . அவர் ஆம் என்றிருக்கிறார். நீங்கள் தானே ஜான் லிஸ்ட் எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்றிருக்கிறார்.

அவரை அலேக்காகத் தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ஜான் லிஸ்டின் கைரேகையை பாப் க்ளார்க்கின் கைரேகையுடன் ஒப்பிட அது 100% ஒத்துப்போனது. லிஸ்ட் சிறையில் தள்ளப்பட்டார். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று என்னவென்றால் ஜான் பெண்டர் என்ன மாதிரியான கண்ணாடியைத் தெரிவு செய்தாரோ அதே மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஃப்ராங்க் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்ட் உருவத்தையும், கைது செய்யப்பட்ட ஜான் லிஸ்ட் புகைப்படத்தையும் அருகருகே போட்டு முதல் பக்கத்தில் ஃப்ராங்க் பெண்டரைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
ஜான் லிஸ்ட் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. அவரின் இரண்டாவது மனைவியால் அவர்தான் ஐந்து கொலைகளைச் செய்த குற்றவாளி என்பதை நம்பவே முடியவில்லை

1989, வழக்கு விசாரனையில் ஜான் லிஸ்ட் 5 கொலைகளை செய்த குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தி, அவரை ஆயுள் முழுவதும் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Peraveen said...

Nanbaa... Sema... Please write more like this series 👌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...