பொறியியல் மூன்றாமாண்டு விடுதி. இரவு எட்டு மணி. மாலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காமன் ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் 8 to a8:30 தான் எங்களுடைய இரவு உணவுக்கான நேரம். ஏனென்றால் அப்பொழுதுதான் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கும். “அத யாருப்பா அசிங்கமா பாத்துகிட்டு” என கும்பலாக எழுந்து சென்றுவிடுவோம். நியூஸ் பார்ப்பதற்காக மட்டுமே காமன் ஹாலிற்கு வருபவர்களும் உண்டு.
அப்படி சிலர் மட்டும்காமன் ஹாலில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவிற்காக உட்கார்ந்திருந்தோம்.
ஒரு வாய் எடுத்து வைக்கவில்லை.. ”ஹோஓஓஓஓ” என காமன் ஹாலிலிருந்து பயங்கர சத்தம் பின்னாலிருந்த
மெஸ்ஸில் கேட்டது. “வழக்கமா சச்சின் அடிக்கும் போது தான் இந்த மாதிரில்லாம் கத்துவாய்ங்க. இன்னிக்கு மேட்ச் கூட இல்லையே..என்னாச்சு?” என சாப்பிட்டத்தை அப்படியே வைத்துவிட்டு அனைவரும் காமல் ஹாலை நோக்கி ஓடினோம்.
”என்னாச்சு.. என்னாச்சு” என பதற்றமாக உள்ளே நுழைய, உள்ளே இருந்தவர்கள் அத்தனை உற்சாகத்துடன் “டேய் ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாரம்டா.. ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாராம்டா” உள்ளே
சென்றவர்களும் ”ஹோஓ”வென கூச்சல் போட காமன் ஹாலே திருவிழாக் கோலமானது. அப்படியே உட்கார்ந்து
விளம்பரத்திற்குப் பிறகு வந்த ஷங்கர்-ரஜினி கூட்டணியைப் பற்றிய முழு செய்தியைப் பார்த்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றோம். செய்தியில் படத்தின் பெயர் என்ன என்பதயெல்லாம் யாரும் குறிப்பிடவில்லை. நாங்களே டைட்டில் எப்படி இருக்கப்போகிறது என பல யூகங்களை உருவாக்கியிருந்தோம்.
அடுத்த இரண்டாவது நாளில் கல்லூரி டீக்கடையில் ஒரு பேப்பர் செய்தி. ”ஷங்கர்-ரஜினி இணையும் திரைப்படத்திற்கு சிவாஜி என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்” என இருந்தது.
“எலே என்னது? சிவாஜியா? என்னலே இத எப்டிப் படிச்சாலும் மாஸா இல்லையேலே” என மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான்.
“அருணாச்சலம் டைட்டில மொதல்ல கேக்கும்போது என்னடா இது அருணாச்சலம், வேதாச்சலம்னு ரொம்ப சுமாரான டைட்டிலா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா அதயே ரஜினிசார் “அருணாச்சலம்”ன்னு கணீர்னு சொன்னப்போ அந்த டைட்டிலே பயங்கர பவர்ஃபுல்லா தெரிஞ்சிது.. அப்டியே ஒத்துக்கிட்டேன்” என சுந்தர்.சி கூறியிருப்பார். அதேபோல சில நாட்களிலேயே சுமாரான சிவாஜி, சூப்பரான டைட்டிலாக மாறிப்போனது.
இரண்டு மூன்று வாரம் கழித்து ஒருநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் ரூம் மேட் பிரபு ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை “யோவ்.. எந்திரிய்யா.. யோவ் எந்திரிய்யா” என வேக வேகமாக எழுப்பினான்.
என்ன இவன் விடியக்காலமே எழுப்பி விடுறான் என அலுத்துக்கொண்டே எழுந்தால் மடியில் அந்த ஹிந்து பேப்பரைப் வீசினான். பேப்பரில் சிவாஜியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அதுவரை பார்த்திராத வித்யாசமான, சந்திரமுகியைக் காட்டிலும் இளமையான ரஜினி. ச்ச.. செம்மடா... அன்று மட்டும் கிட்டத்தட்ட பத்து பேராவது என்னிடம் பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள், அந்தப் போஸ்டரை வெட்டி வைத்துக்கொள்வதற்காக. அந்த போஸ்டர்தான் ஃபைனர் இயர் முடியும் வரை என்னுடைய ரூம் சுவற்றில் முருகனுக்கு அருகில் ஒட்டப்பட்டிருந்தது. இன்னும் பத்திரமாக உள்ளது.
நான்காமாண்டு முடியும் தருவாயில் கல்சுரல்ஸிற்கு நான்கு நாட்களே இருந்த சமயம். சிவாஜியின் மூன்று பாடல்கள் லீக் ஆனது. அதில் ஒன்றை கல்லூரி ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்து விடுவோமா என்று கூட யோசித்தோம். ஆனால் ஏற்கனவே பாடல்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டதால், மீண்டும் கேட்டால் orchestra co-ordinator ரவிக்குமார் கடித்து வைத்து விடுவார் என அதை அப்படியே விட்டுவிட்டோம்.
மற்ற பாடல்கள் ரிலீஸான பொழுது ஊருக்குச் சென்றதால் உடனடியாகக் கேட்க முடியவில்லை. ஆனால் SPB பாடிய பாடல் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம். நண்பர் Karthick Chandrasekar ற்கு கால் செய்ய, ஹாஸ்டலில் இருந்த அவருடைய டேப்பில் முழு சத்தத்துடன் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டு ஃபோனில் கேட்க வைத்தார்.
கல்லூரி முடிவதற்குள் படம் வந்துவிட்டும், ஒன்றாகப் பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் ரீலீஸ் தள்ளிப் போய், அது நிறைவேறாமல் போனது. ஊருக்குச் சென்றோம்.
கம்பெனியில் சேர்வதற்கான தேதியைக் கொடுத்துவிட்டார்கள். சிவாஜியின் ரிலீஸ் தேதியும் வந்தது. ஜூன் பதினைந்து. பட்டுக்கோட்டை அருண் திரையரங்கில் காலை ஏழு மணிக்காட்சி. அதற்குள் முதல் நாள் இரவு படம் பார்த்த சென்னை நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க அன்றைய இரவு ரொம்பவே மெதுவாகக் கடந்துகொண்டிருந்தது.
காலை ஏழுமணிக்கு காட்சி ஆரம்பம். One of the best thalaivar movies. மன நிறைவுடன் மறுநாள் இரவு சென்னைக்கு கிளம்பினேன் முதன் முதலாக வேலையில் சேர்வதற்காக.
நேற்று நடந்தது போல இருக்கிறது. பதினைந்து ஆண்டுகள் ஒடிவிட்டது. சிவாஜி வந்தும், நான் வேலைக்கு சேர்ந்தும். நாளை மறுநாளுடன் L&T யில் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறேன்.
-
3 comments:
Arumai Nanbaa.
சிவாஜி படம் மொக்கை தான். அன்றைய தினம் அதை பற்றி ஏகப்பட்ட ஹைப் இருந்தது.சாப்ட் வேர் ஊழியர்கள் மொத்தமா புக் செய்து பார்த்தார்கள். சுமணிடம் பழி தீர்ப்பதோடு படம் முடிந்து விடும். அதன் பின்னர் சும்மா கருப்பு பணம் பிளாஸ்டிக் நோட்டு என்று பம்மாத்து பண்ணுவார்கள். வாங்க பழகலாம் என்று பாப்பையா கண்றாவி காட்சிகள் வேறு...
ஆனால் படத்தை விட உங்கள் பதிவு சூப்பர்
You are really good in writing. Visited your blog nearly after 3-4 years. Keep it up
Post a Comment