Sunday, June 26, 2022

மாயோன் - Maayon !!


Share/Bookmark


 

மாயோன் மலையை ஒட்டி இருக்கும் ஒரு பள்ளி கொண்ட பெருமாள் கோவில். அக்கோவிலில் இருக்கும் ஒரு ரகசிய அறை. ஆறு மணிக்கு மேல் கோவிலுக்குள் சென்றால் சித்தபிரம்மை பிடிக்கும் அல்லது மரணம் நேரிடும் என்ற மர்மதேசப் பாணி நம்பிக்கை. இந்நிலையில் ரகசிய அறையின் செல்வங்களை கொள்ளையடிக்க முயலும் ஒரு கும்பல். இதைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் கதை தான் இந்த மாயோன். 

இந்தப் படத்தின் ட்ரெயிலரே ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் வண்ணம் இருந்தது. ஓரளவிற்கு அதை படத்திலும் தக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இது போன்ற Mythological thriller, treasure hunt திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து படமாக்கியதற்கு முதலில் வாழ்த்துக்களைக் கூறலாம். 

முதல் பாதி உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வைக் கொடுத்தது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலில் அந்த கதைக் களத்திற்கு ஏற்ற மாதிரியான அருமையான visuals.  நிறைய அனிமேஷன்கள். தேவையில்லாமல் நிறைய அனிமேஷன்கள் இருக்கிறது என்றாலும் அது படத்தின் மதிப்பை கொஞ்சம் கூட்டிக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. 

அடுத்தது பள்ளி கொண்ட பெருமாள் ஆலயமும், அதிலிருக்கும் பிரம்மாண்ட பெருமாள் சிலையும் அதற்கு இளையராஜாவின் இரண்டு பாடல்களும். நிஜத்தில் தரிசித்த ஒரு உணர்வைத் தருகிறது. பள்ளி கொண்ட பெருமாள் ஆலயத்திற்கான முன் கதை, அதற்கான அனிமேஷன், கந்தர்வ இசை என அனைத்து விஷயங்களும் சேர்ந்து ஒரு நல்ல படத்திற்கான முதல் பாதியை உருவாக்கியிருந்தது.

ஆனால் அது அப்படியே இரண்டாவது பாதியில் சறுக்கிவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் திரைக்கதை. ஆயிரம் வருடங்களாக இருக்கும் ஒரு மர்மத்தை துப்பறிய வேண்டும். அதற்கு சரியான கால அவகாசம் கொடுத்து மெதுவாக எடுத்துச் செல்லும் போதுதான் அந்த ஆயிரம் வருட மர்மத்திற்கே ஒரு மரியாதை இருக்கும். ஆனால் அப்படியில்லாமல் உள்ளே என்ன இருக்கிறது எப்படி இருக்கப்போகிறது என்றெல்லாம் தெரியாமலேயே ஒரே இரவில் அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும் என ப்ளான் போட்டு உள்ளே செல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சமாக இருந்தது. 

முதல் பாதியில் சுமாராக இருந்த கிராஃபிக்ஸ் இரண்டாவது பாதியில் படுசுமாராகிவிட்டது. இரண்டாவது பாதியில் ஒரு கால் மணி நேரம் மாயோன் படம் பார்க்கிறோமா இல்லை அனகோண்டா பார்க்கிறோமா என்கிற குழப்பம் வந்துவிட்டது. 

சிபிராஜ் மற்ற எல்லா படங்களையும் விட இதில் ஆள் பார்க்க நன்றாக இருந்தார்.  அவரால் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ரொமான்ஸே வராத முகத்தை வைத்து ரொமான்ஸ் காட்சிகளையெல்லாம் வைத்து நம்மை சோதிக்கிறார்கள். ரவிக்குமாரெல்லாம் இருக்கிறார். ஆனால் பெரிய வேலையில்லை. ஒரு சண்டை வைக்க வேண்டுமே என்பதற்காக வலுக்கட்டாயமாக ஒரு ஃபாரின் வில்லன் திணிக்கப்பட்டிருக்கிறார். 

கதையாக ஒரு நல்ல ஒன்லைன். ஆனால் அதன் திரைக்கதை வடிவம் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் வித்யாசமான கதைக்களத்தில் வந்த, நன்றாக வந்திருக்க வேண்டிய ஒரு சுமாரான திரைப்படம். 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...