Wednesday, April 29, 2020

தடயவியல் – Case 1 மாயமான பெண்!!


Share/Bookmark



எந்த ஒரு குற்றாவாளியும் அவனுக்கே தெரியாமல் எதாவது ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்பது காவல்துறை வழக்கமாகச் சொல்லும் ஒரு வாக்கியம். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட.  ஆனால் குற்றவாளிகள் விட்டுச்செல்லும் தடயங்களை காவல் துறையால் மட்டுமே முழுவதும் கண்டுபிடித்து விட முடிவதில்லை. அவர்களுக்கு தடயவியல் துறையின் உதவி தேவைப்படுகிறது.

தமிழ் மட்டும் தெரிந்த ஒருவனிடம் வேறு மொழியில் பேசும்போது நாம் நினைப்பதை அவனுக்குப் புரிய வைக்க முடியாது. அவன் கூற நினைப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.  ஒரு இடத்தில்  தகவல் பரிமாற்றம்  நடைபெற வேண்டுமென்றால் இருவரும் ஒரே தகவல் பரிமாற்ற முறையை பயன்படுத்த வேண்டும். மனிதர்களுக்குள்ளான தகவல் பரிமாற்ற முறை என்பது எதேனும் ஒரு மொழியாக இருக்கலாம் அல்லது இருவருக்கும் தெரிந்த சைகையாகக் கூட இருக்கலாம். அதே  போல மனிதன் எதேனும் இயந்திரத்துடன் தகவல் தொடர்பு செய்வதற்கோ, அல்லது இரண்டு இயந்திரங்குள்ளான தொடர்புக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறையை பின்பற்ற வேண்டும். அதை Communication protocol என்பார்கள்

ஒரு குற்றம் நடக்கும் போது, அந்த இடத்திலுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அத்தனையுமே சாட்சிகள் தான். அந்த உயிருள்ள பொருள் மனிதனாயின் வாய்வழியே அவனிடம் கேட்டு நடந்ததை தெரிந்து கொள்ள முடியும். ஒரு வேளை அவை வேறு உயிரோ அல்லது  உயிரற்ற பொருட்களாகவோ இருப்பின் அவர்களிடமிருந்து செய்திகளைப் பெற பிரத்தியேகமான தகவல் தொடர்பை கையாள வேண்டியிருக்கிறது. அந்த மொழி அனைவருக்கும் தெரிவதில்லை. அதைப் பேசத் தெரிந்தவர்கள்தான் இந்த தடயவியல் துறையினர்.

தடயவியல் துறையினரின் உதவியுடன்  கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களின் வரிசையத்தான் இந்த தொடர் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம். இதில் கூறப்போகும் அனைத்துமே என்பது, தொண்ணூறுகளில் நடந்த உண்மைச் சம்பவங்கள்.  Forensic Files என்கிற பெயரில் ஒரு ஆங்கில டாக்குமெண்டரி வெளிவந்திருக்கிறது. அதில் நிறைய குற்றங்களையும், அவை எவ்வாறு துப்பறிப்பட்டன என்பதையும் இருபது இருபது நிமிட தொகுப்புகளாக வெளியிட்டிருக்கின்றனர். அவற்றின் தமிழாக்கமே வரப்போகும் இந்த தொடர் பதிவுகள்.  

முதலில் மாயமான பெண்ணைப் பற்றிய ஒரு வழக்கைப் பார்ப்போம்.  1986 இல் ஹெல்லே க்ராஃப்ட்ஸ் எனும் பெண் தன் கணவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு கணவனின் நடத்தையைக் கண்காணிக்கச் சொல்கிறாள். சில நாட்களுக்குப்பின் மழை பெய்யும் ஒரு மாலை வேளையில் அந்த தனியார் டிடெக்டிவ்,  ஹெல்லாவை  சந்தித்து அவனுடைய ரிப்போர்ட்டைக் கொடுக்கிறான்.  அதிலிருக்கும் சில புகைப்படங்களைப் பார்த்து ஹெல்லா அதிர்ச்சியடைகிறாள். ஆம். அவளது கணவனுக்கும் மற்றுமொரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தான் அந்த புகைப்படங்கள். சில நிமிடங்கள் காருக்குள்ளேயே அழுது தீர்த்துவிட்டு பின் இறங்கிச்செல்கிறாள். இந்த சந்திப்பிற்றுப் பிறகு ஹெல்லா காணாமல் போகிறாள்.  



ஹெல்லாவுக்கும், அவளது கணவன் ரிச்சர்ட்டுக்கும் மூண்று குழந்தைகள். இருவருமே ஒரே ஏர்லைன்ஸில் வேறு வேறு துறையில் பணிபுரிந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் பகுதி நேர காவல்துறை அதிகாரியாகவும் இருந்து வந்திருக்கிறார்.

திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து ஹெல்லாவிற்கு ரிச்சர்ட்டின் மேல் சந்தேகம் வர அது பல சமயம் சண்டையாக மாறி ரிச்சர்ட் ஹெல்லாவை தாக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஹெல்லா விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறாள். அதுமட்டுமல்லாமல் ஹெல்லா தன்னுடைய விவாகரத்து வழக்கை நடத்தும் வக்கீலிடம் ,  ஒரு வேளை தனக்கு எதாவது நேர்ந்தால் அது இயற்கையானது அல்ல என ஒரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 18 , 1989ம் தேதி ஹெல்லா பணியை முடித்து வரும்பொது அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுருக்கிறார். அதுதான் வெளியுலகம் ஹெல்லாவை கடைசியாகப் பார்த்த தருணம். அதன் பிறகு ஹெல்லா எங்கு சென்றாள் என்பது எவருக்கும் தெரியவில்லை.
 
இரண்டு நாட்கள் கழித்து ஹெல்லா பணிக்கு வராத காரணத்தல் ஹெல்லா பணிபுரியும் ஏர்லைன்ஸில் இருந்து வீட்டில் தொடர்பு கொண்டு கேட்கும்போது ஹெல்லா டென்மார்க்கிற்கு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதாக ரிச்சர்ட் தெரிவித்திருக்கிறார். மேலும் சிலரிடம் ஹெல்லா விடுப்பில் இருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கொடுத்திருக்கிறார்.

ஹெல்லாவிடமிருந்து சில நாட்கள் எந்த தகவல் தொடர்பும் இல்லை என்பதால் ஹெல்லாவின் வழக்கறிஞர் காவல்துறைக்குச் செல்ல, விசாரணை தொடங்கியது.

ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் தொடர்ந்து ஹெல்லா எங்கு சென்றார் என்பதைப் பற்றி தனக்குத் தெரியாது என்கிற பதிலையே கூறி வந்தார்.
காவல்துறையினர் ஹெல்லாவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். நவம்பர் 18ம் தேதி தனக்கு விடுப்பு எனவும் , அன்று இரவு இரண்டு மணிக்குத்தான் ஹெல்லாவின் வீட்டுக்கு வந்ததாகவும், வந்தவுடன் நேரடியாக உறங்கச் சென்றதாகவும் கூறினாள். ஆனால் அவள் கூறிய மற்றொரு தகவல்தான் ஹெல்லா பற்றிய விசாரணையை துரிதப்படுத்த, சரியான பாதையில் செல்ல உதவியது.

அதாவது மறுநாள் காலை ஹெல்லா வீட்டின் தரை விரிப்புகளில் கருப்பு வண்ணத்தில் புதிதாக சில கறைகள் இருந்ததாகவும், ரிச்சர்ட்டிடம் அதைப் பற்றி கேட்ட பொழுது சரியான பதில் எதுவும் இல்லை எனவும் மறுநாளே அந்த தரை விரிப்புகளை ரிச்சர்ட் அகற்றி விட்டதாகவும் பணிப்பெண் கூறினாள்.  காவல்துறை ஒருசில மாதிரி ரத்தக் கறைகளை அந்தப் பணிப்பெண்ணிடம் காண்பித்து, அவள் அந்த தரை விரிப்புகளில் பார்த்தது ரத்தக் கறைதான் என்பதை உறுதி செய்துகொண்டனர்.

மேலும் ஹெல்லா அறையின் மெத்தை விரிப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும், வீட்டிலிருந்த ஒரு மிகப்பெரிய ஃப்ரீசர் (Freezer) காணாமல் போயிருப்பதையும் பணிப்பெண் காவல்துறைக்கு தெரிவிக்க, காவல்துறையின் கவனம் முழுவதும் இப்பொழுது ரிச்சர்ட்டின் மேல் திரும்பியது.

ஆனால் ரிச்சர்ட்டோ தனக்கு எதுவும் தெரியாது என்கிற பதிலையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார். காவல்துறை ரிச்சர்ட் தொடர்பான தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்களுக்கு கிடைத்த ஒரு தகவல் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. ஹெல்லா காணாமல் போன இரண்டாவது நாள் ரிச்சர்ட் தனது க்ரெடிட் கார்டை பயன்படுத்தி, ஒரு கமர்ஷியல் Wood Chipper ஐ வாடகைக்கு எடுத்திருக்கிறார். Wood chipper எனப்படுவது மரத்துண்டுகளை சிறு தூள்களாக மாற்றும் ஒரு  இயந்திரமாகும்.

கிடைத்த தகவல்களைக் கொண்டு, ரிச்சர்ட்டிற்கும் ஹெல்லா காணாமல் போனதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த காவல்துறை ரிச்சர்ட்-ஹெல்லாவின் வீட்டை சோதனையிட முடிவு செய்தது.
இப்பொழுதுதான் தடயவியலின் உதவி தேவைப்படுகிறது காவல்துறைக்கு. டாக்டர் ஹென்றி இந்த வழக்கிற்காக அழைக்கப்படுகிறார். டாக்டர் ஹென்றி ஹெல்லாவின் அறையை அங்குலம் அங்குலமாக அலசுகிறார். கடைசியில் ஒரு தடயம் கிடைக்கிறது.  அந்த அறையில் இருந்த மெத்தையில், வெற்றுக்கண்களால் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத அளவு மிகச்சிறிய சிவப்புப் புள்ளிகளை ஹென்றி கண்டறிகிறார்.



ஆய்விற்கு உட்படுத்தும்போது அவை ரத்தப்புள்ளிகள் என்பது தெரிகிறது. வெறும் ரத்தம் என்பது மட்டும் நமக்கு விடை கொடுக்காது. அது மனித ரத்தமா அல்லது எதேனும் ஒரு விலங்கு அல்லது பூச்சிகளின் ரத்தமா? ஒருவேளை மனிதரத்தமாக இருந்தால், ஒரு வேளை பெண்களின் மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தமாகக் கூட இருக்கலாம்.  இந்த ரத்தப்புள்ளிகள் புதிதா அல்லது சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதா என பல கேள்விகளை கேட்க வேண்டியிருந்தது.

ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு சோதனைகள். இறுதியின் அது ஓ பாசிடிவ் வகையைச் சேர்ந்த மனித ரத்தம் தான் என்பதையும், அது மாதவிடாய் ரத்தம் இல்லை , ரத்த நாளங்களில் பாயும் ரத்தம் என்பதையும் டாக்டர் ஹென்றி உறுதிப்படுத்தினார். ஹெல்லாவின் ரத்தமும் ஓ பாசிடிவ் வகையைச் சேர்ந்ததாகும்.

அது புதிய ரத்தமா அல்லது நீண்ட நாள் முன்பிலிருந்து இருக்கும் ரத்தமா என்பதை அறிய PGM எனப்படும் ஒரு சோதனையை செய்தனர். இந்த PGM மூலக்கூறு எனப்படுவது, உறைந்த ரத்தத்தில் கூட 12- 13 வாரங்கள் உயிர்ப்புடன் இருக்கும். மெத்தையிலிருக்கும் ரத்தக் கறைகளை PGM மூலக்கூறு சோதனைக்கு உட்படுத்திய பொழுது , அந்த ரத்தக்கறைகளில் PGM மூலக்கூறு உயிர்ப்புடம் இருப்பது தெரிந்தது. எனவே இந்த ரத்தக் கறை சமீபத்தில் ஏற்பட்டது தான்.

டாக்டர் ஹென்றி அந்த ரத்தப்புள்ளிகளின் அடர்த்தி, அவை மெத்தையில் தெறித்த விதம் இவற்றை வைத்து, அந்த ரத்தப்புள்ளிகள் 10 டிகிரி கோணத்தில், மிதமான வேகத்தில் வந்து விழுந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அந்த மெத்தையின் பக்கவாட்டில் சுமார் ஆறு அங்குலம் அளவிற்கு ஒரு ரத்தக் கோடு இருப்பதையும் ஹென்றி கண்டறிந்தார். இவற்றையெல்லாம் ஆராய்ந்து அந்த ரத்தப்புள்ளிகளும் இந்த ரத்தக்க்கோடும் மெதைக்கும் அருகில் ஒருவர் மண்டியிட்டு விழும் போது ஏற்பட்டதாக இருக்கவேண்டும் எனபதை உறுதிசெய்தார்.

அதுமட்டுமல்லாமல் ரிச்சர்ட்டின் வீட்டின் குளியளறையில் இருந்த துண்டுகள் அனைத்தும் சமீபத்தில் துவைக்கப்பட்டவையாக இருந்தது..  ஆர்த்தோடாலடின்  கரைசலில் சோதனையிட்ட பொழுது அந்த துண்டுகளின் பெரும்பாலான பகுதிகள் நீல நிறமாக மாறியது. அப்படியென்றால் அந்தத் துண்டுகள் ரத்தத்தை துடைக்க உபயோகப்பட்டிருப்பது தெரிந்தது.
காவல்துறைக்கு ரிச்சர்ட்டின் மீதான சந்தேகம் வலுக்கிறது. ஆனால் அவரை கைது செய்யவோ அவர் மீது குற்றம் சாட்டவோ போதுமான ஆதாரங்கள் இல்லை. ஹெல்லா காணாமல் போயிருக்கிறாரே தவிற,  அவருக்கு எதேனும் நிகழ்ந்தது என்பதை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. இந்த சூழலில் ரிச்சர்ட்டை Lie Detector Test ற்கு உட்படுத்த முடிவெடுக்கிறது காவல்துறை.

PolyGraph சோதனை எனப்படும் Lie detector test எனப்படுவது, நிறைய திரைப்படங்களில் காண்பிப்பது போல, சோதனைக்குட்படுத்தப் படுபவரின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, மூச்சு, தோலில் ஏற்படும் ஒருவித மின் மாற்றங்கள்  போன்றவை கண்காணிக்கப்படும். கேள்விகளுக்கு பதில் அளிக்கும்பொழுது இவற்றில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் பட்சத்தில் அவர் கூறுவது உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகும்.

ரிச்சர்ட்டின் சம்மதத்துடன், ஹெல்லாவைப் பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு பாலிகிராஃப் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 

“ஹெல்லா எங்கிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

”ஹெல்லாவை நீங்கள் தாக்கினீர்களா?”

”ஹெல்லாவை நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்கள?” என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அனைத்திற்கும் ரிச்சர்ட் ”தெரியாது”, ”இல்லை” என்றே பதிலளித்தார்.

பாலிகிராஃப் சோதனையின் முடிவு காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.  பாலிகிராஃப் சோதனை முடிவில் ரிச்சர்ட் பொய் எதுவும் கூறவில்லை என நிரூபனமானது.  ரிச்சர்ட் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை அடுத்து எந்தக் கோணத்தில் விசாரணையைத் துவக்கலாம் என்று தயங்கி நின்ற பொழுது, அவர்களுக்குத் தீணி போடும் விதமாக கிடைத்தது ஒரு தகவல்..

அடுத்த பதிவில் …



அடுத்த பதிவைப் படிக்க இங்கே க்ளிக்கவும்

Tuesday, March 3, 2020

தமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்!!!


Share/Bookmark

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் பிடித்த அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தில் கலந்து கொடுப்படும் படங்கள் மசலா படங்கள் எனப்பட்டன.  காலப்போக்கில் உலக சினிமா ரசிகர்களின் ஊடுருவலில் அதே படங்கள் மருகி C செண்டர் ஆடியன்ஸுகளுக்கான படங்கள் எனவும் , ”நாலு ஃபைட்டு அஞ்சு பாட்டு” படங்கள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நாலு பாட்டு அஞ்சு ஃபைட்டு படங்களின் ரசிகனின் புலம்பல்தான் இந்தப் பதிவு


இப்போதும் தொலைக்காட்சியில் சின்னக்கவுண்டர், நாட்டாமை , சூரியவம்சம் வரிசையிலான  சில படங்களைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. இத்தனை முறை பார்த்த பின்னரும் மறுபடி மறுபடி சலிக்காமல் பார்க்க வைக்கின்றன. இப்பொழுது வெளியாகும் திரைப்படங்களை ஒரு முறை பார்த்து விட்டு இரண்டாவது முறை கூட பார்க்க முடியவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. முக்கியமாக மேற்கூறிய வரிசையிலான படங்களைப் பார்த்தால் ஆரம்பத்திலுருந்து கடைசி வரை நாமும் அந்தக் கதையுடனேயே பயணித்திருப்போம். படம் முடியும் போது கிட்டத்தட்ட படத்தில் ஹீரோ எத்தனை காலம் பயணித்திருந்தாரோ அதே காலகட்டம் நாமும் பயணித்திருப்பதாக உணர்வோம். உதாரணமாக அண்ணாமலை இறுதிக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, பழைய பால்கார அண்ணாமலையை நினைத்துப் பார்த்தால் அவர் எதோ ரொம்ப நாளுக்கு முன்னால அப்டி ஒருத்தர் இருந்தார் என்பதைப் போல தோன்றும். அதே போலத்தால் பல திரைப்படங்களுக்கும்.

ஆனால் இன்று அதுபோன்ற ஒரு உணர்வை தமிழ்திரைப்படங்கள் தருவதில்லை. இன்றும் ஒருசில படங்களைத் தவிற மற்ற அனைத்து படங்களுமே இரண்டரை மணி நேரத்திற்கு குறையாமல் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த இரண்டரை மணி நேரத்தில் நமக்கு கிடைத்த அனுபவம் இன்றைக்கு எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் நிச்சயம் இல்லை. என்ன காரணம்? 

இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு தெலுங்குப் படங்களான ”Sarileru Neekkevvaru” வயும், “Ala Vaikundapuramlo”வயும் பார்க்கும்போது அதற்கான விடை கிடைத்தது.  இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு படங்களில் அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுண்டபுரம்லோ சூப்பர் டூப்பர் ஹிட். ”சரிலேரு நீக்கெவ்வரு” சுமாரான ஹிட். இந்த இரண்டு படங்களையும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். 




மெயின் மேட்டருக்கு செல்வதற்கு முன்னர் இந்த இரண்டு படங்களையும் பற்றி சிறியதாக ஒரு முன்னோட்டம். முதலில் அலா வைகுண்டபுரம்லோ... சில வருடங்களுக்கு முன்னர் அத்தாரிண்டிக்கி தாரெதி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதை அடுத்து அதன் இயக்குனர் திரிவிக்ரம் , அவரின் அடுத்தடுத்த படங்களையும் அதே கதைக்கு லேசாக மரு மாத்திரம் வைத்து எடுத்துவந்தார். அதுவும் ஒரு படத்தில் மூக்கில் மரு வைத்தால் அடுத்த படத்தில் கன்னத்தில் வைப்பார். இவ்வளவுதான் வித்யாசம். இப்படி “அ.. ஆ” என்ற படத்தையும்  மறுபடி பவனை வைத்து “அக்ஞாதவாசி” என்ற படத்தையும் எடுக்க இரண்டு அந்த அளவு சிறப்பாக செல்லவில்லை. சற்றும் தளராத திரிவிக்ரம் மறுபடி அதே கதைக்கு மருவை நெற்றியில் வைத்து எடுத்திருப்பதுதான் இந்த அலா வைகுண்டபுரம்லோ. பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

அடுத்தது மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு.. இதே ஒன் லைனிலும் ஏற்கனவே எண்ணிலடங்காத படங்கள். ஆனாலும் சலிப்பு தட்டாதபடி எடுத்திருக்கிறார்கள். முகத்தில் மூவ்மெண்ட் எதுவும் இல்லையென்றாலும் மகேஷ்பாபு மகேஷ்பாபுதான். டயலாக் டெலிவரியாகட்டும், ஸ்டண் சீவன்ஸாக  இருக்கட்டும்... ஒது ஒக்க ரகம்...  மகேஷ்பாபுவுடன் ராஷ்மிகா, விஜய் சாந்தி, ப்ரகாஷ்ராஜ், உயிர் சங்கீதா மற்றும் தெலுங்கின் முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்தப் படமும் ஒரு அருமையான கமர்ஷியல் எண்டர்டெய்ணர். 

சரி தற்போது மேட்டருக்கு வருவோம். தமிழ் சினிமாவில் அழிந்து போய்கொண்டிருக்கும் அந்த கதையுடன் பயணிக்கும் உணர்வு தெலுங்கு சினிமாக்களில் அப்படியே இருக்கிறது. சொல்லப்போனால் டெக்னாலஜி வளர வளர அதை இன்னும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான முக்கியக் காரணம் ஒரு திரைப்படத்தில் வெறும் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வசனத்திற்கும், கதாப்பாத்திர அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் எடுக்கப்பட்ட கடைசி தமிழ் கமர்ஷியல் படம் எது என்று யோசித்தால் நிச்சயம் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தெலுங்கில் இந்த பத்து வருடத்திலேயே அத்தனை படங்களைக் கூறலாம். குறிப்பாக இந்த திரிவிக்ரம், சுகுமார், கொரட்டலா சிவா படங்களிலெல்லாம் வசனங்கள் சிறப்பாக இருக்கும்.

தமிழில் வசனத்திற்காக மெனக்கெடுவதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஹரி ஒரு காலத்தில் மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருந்தார். சூர்யா கேட்டுக்குள் வந்த பிறகு அது வெறும் லவுடு ஸ்பீக்கர் சப்தமாக மட்டும் மாறிப்போனது வருத்தத்திற்குறியது. 

அதே போல கதாப்பாத்திர அமைப்பு. தமிழில் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். நமக்கு ஹீரோ  மட்டும்தான் முக்கியம். மற்ற அனைவரும் வெறுமனே வந்து எதோ ஒரு வசனத்தை உச்சரித்துவிட்டு செல்வது. அவ்வளவுதான். சமீபத்திய உதாரணம் தர்பார். படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை தலைவரைத் தவிற பெரும்பாலானோருக்கு characterisation ற்கு மெனக்கெடவே இல்லை. வள்ளிக்கு மட்டும் பர்ஃபார்ம் செய்ய ஒரு காட்சி இருந்தது. மற்றவர்களுக்கு பெரிதாக எதுவும் இல்லை. தலைவரின் கூடவே நான்கு போலீஸ் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. என்னடா ரஜினி ஃபேனா இருந்துட்டு ரஜினி படத்தையே குறை சொல்கிறேனே என சிலர் யோசிக்கலாம். சில தலைவர் ரசிகர்களுக்கு கோபமும் வரலாம். 

நான் சொல்ல வருவது புரியவில்லையென்றால் உதாரணத்திற்கு படையப்பா திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். படையப்பா, நீலாம்பரி இந்த இரண்டு கேரக்டர்களின் தன்மை அனைவருக்கும் தெரியும்.  மற்ற கேரக்டர்களுக்கு வருவோம். சிவாஜி - ஊருக்கு நியாயம் சொல்பவர். மகனை வெளியே கண்டித்தாலும் உள்ளே ரசிக்கும் பாசமுள்ள அப்பா. லக்‌ஷ்மி - கணவனுக்கு மரியாதை கொடுக்கும், தன் பிள்ளையின் மனதை நன்கு புரிந்து வைத்திருக்கும் அம்மா.   நாசர்.. அரசியல்வாதி.. அடிக்கடி கட்சி மாறுபவர். ரமேஷ்கன்னா.. படையப்பாவின் நண்பர்.. படையப்பா எழுதிய லெட்டரை வசுந்தராவிடம் பல முறை கொடுக்க முயல்பவர். அனு மோகன்... படையப்பா பாம்பு புற்றில் கைவைக்கும் போது ஏன் பாம்பு கடிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். படையப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் அதைக் கேட்பவர்.  மணிவண்ணன்.. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். மணிவண்ணனின் மகன்கள் - செய்யக்கூடாத தவறுகளை செய்பவர்கள். அண்ணனுக்கு பணிந்தவர்கள். இன்னும் அப்பாஸ், சித்தாரா, ப்ரீதா என படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் தனித்தன்மையான ஒரு கதாப்பாத்திர அமைப்பை சொல்லலாம். 

இதே அளவு டீட்டெய்லான கதாப்பாத்திர அமைப்பு தர்பாரில் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே யூகித்துகொள்ளுங்கள். இப்பொழுது மகேஷ்பாவுவின் சரிலேரு நீக்கெவ்வருவிற்கு வருவோம். படையப்பாவில் சொன்னது போல படத்தில் இருக்கும் அத்தனை கேரக்டர்களுக்கும் , தனித்தன்மையுடைய கதாப்பாத்திர அமைப்பு, ஓவ்வொருவருக்கான மேனரிசம் மற்றும் வசங்களை எழுதியிருக்கிறார்கள். ஹீரோயின், ஹீரோயினுடைய அம்மா, ஹீரோயினுடைய அக்கா இருவர், ஹிரோயினின் அக்கா குழந்தைகள், ஹீரோயினின் அப்பா, ஹீரோயினை திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொல்லப்படும் ஒரு காமெடியன், ஹீரோயின் பயணிக்கும் ரயிலின் டிடிஆர், வில்லன், வில்லனுடைய அப்பா,  வில்லனுக்கு துணைபோகும் ஒரு போலீஸ், வில்லனுடைய அள்ளக்கை, இரண்டே இரண்டு சின்ன காட்சிகளில் வரும் ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர், ஒரே ஒரு ஃபைட்டில் வரும் ஒரு அடியாள் இப்படி அத்தனை பேருக்கும் படத்தில் அவரவர்களுக்கென தனியாக ஒரு மேனரிசம், மற்றும் வசனங்கள் இருக்கின்றன. 

ஆனால் தமிழில் இது போல ஒரு டீட்டெயிலான கதாப்பாத்திர அமைப்பு பார்த்தே பல வருடங்களாயிற்று. உயிரற்ற கதாப்பாத்திரங்களை வைத்து வெறுமனே காட்சிகளை மட்டும் நகர்த்துவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.   படத்தின் கதாப்பாத்திரங்களே பார்வையாளர்களுக்கு படத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துபவர்கள். 

நமது ஹீரோ இத்தனை கோடி சம்பாதிக்கிறார், இவர் அவரை முந்திவிட்டார், அவர் இவரை முந்திவிட்டார் என்றெல்லாம் அடித்துக்கொள்கிறோமே தவிற யார் தரமான படங்களை கொடுப்பது என்பதில் நமக்குள் சண்டையே வருவதில்லை. நம்முடைய ஹீரோக்களை விட குறைவாக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் படங்கள், நம்முடைய திரைப்படங்களை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் எப்படி இவ்வளவு குவாலிட்டியான விஷுவலுடன் உருவாக்கப்படுகின்றன? அதை நாம் யோசிப்பதில்லை. 



இன்னும் சொல்லப்போனால் தர்பாரில் ரயில்வே ஸ்டேஷனில் வரும் சண்டையை சிலாகிக்காத ஆளே இல்லை. தலைவர் முதல் முறையாக அப்படி ஒரு சண்டைக்காட்சியில் நடித்ததைப் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதே போன்ற சண்டைக்காட்சிகள் பதினொரு வருடம் முன்னால் பாலய்யாவின் சிம்ஹா படத்திலேயே  தெலுங்கில் வந்திருக்கிறது என நினைக்கும்போது பத்து வருடம் பின்னால் இருக்கிறோமோ என்கிற கவலையும் இருக்கிறது. 

இதுபோல சில நல்ல படங்களை பார்க்கும்போதெல்லாம் பலமுறை நான் வயிற்றெரிச்சலில் தமிழ் சினிமாவை குறை சொல்லி புலம்பியிருக்கிறேன். அப்போதெல்லாம் நண்பர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.

 “போடா தெலுங்கு வந்தேரி நாயே”


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...