Friday, May 1, 2020

தடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்!!


Share/Bookmark



உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட தனித்திறமைகள் நிறைய இடங்களில் நிறைய நேரங்களில் பல வழக்குகள துப்பறிய காவல்துறைக்குப் பயன்பட்டிருக்கிறது. மிகச் சிறிய ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால் படம் வரையும் கலைஞர்கள். இன்று கண்கானிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியின் முகத்தை எதோ ஒரு கோணத்தில் பிடித்து குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை காட்டிவிடுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன் குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை அறிய படம் வரைபவர்கள் உதவி நிறையவே தேவைப்பட்டிருக்கிறது.

குற்றவாளியை பார்த்த ஒருவரை வைத்து அவர் எப்படி இருப்பார், அவரின் கண்கள் எப்படி இருக்கும், மூக்கு,  வாய் எப்படி இருக்கும் என்ற குறிப்புகளையெல்லாம் கேட்டு, குற்றவாளியின் முகத்தை வரைந்து கொடுத்தார்கள் இந்த கலைஞர்கள். இன்றும் அது தொடர்கிறது என்றாலும், கணிணி வந்தபிறகு கையால் வரைவதில்லை. அத்தனை வகையான கண்களும், காதுகளும், மூக்குகளும் கணிணியில் இருக்க, ஒவ்வொன்றாக எடுத்து பொருத்திக் காட்டி சில நிமிடங்களில் வேலையை முடித்து விடுகிறார்கள்.

இன்று நாம் பார்க்கப்போவதும் அதே போன்ற ஒரு தனித்திறமை கொண்ட ஒருவரால் முடித்துவைக்கப்பட்ட ஒரு வழக்கைப் பற்றித்தான். முற்றிலும் அழுகிய நிலையிலோ அல்லது எலும்புக்கூடுகள் மட்டுமோ கிடைக்கும் பட்சத்தில் அந்த கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதை காவல்துறையால் கண்டறிய இயலாது. ஃப்ராங்க் பெண்டர் என்பவர் தடவியல் துறைக்கு  உதவி வரும் ஒரு சிற்பி. அவரின் வேலை சிதைவுற்ற நிலையில் இருக்கும் ஒரு முகத்தை வைத்தோ, அல்லது வெறும் மண்டை ஓடுகளை வைத்தோ ஒருவரின் முகம் எப்படி இருக்கும் என்பதை களிமண் சிலையாக வடித்துக் கொடுப்பவர். இதனை Forensic Sculpting என்கிறார்கள். ஒருவரின் மண்டை ஓடு மட்டும் கிடைக்கும் பட்சத்தில் அவருடைய முகத்தில் எவ்வளவு தடிமனில் சதை இருக்கும் என்பதை கணக்கிட இறந்தவரின் வயது, பாலினம், கருப்பரா வெள்ளையரா போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ப்ரத்யேகமான ஒரு அட்டவணையை பயன்படுத்துகிறார்.

ஒருமுறை போலீஸாருக்கு முற்றிலும் சிதைவுற்ற நிலையில் ஒரு எலும்புக்கூடு மட்டும் கிடைக்கிறது. அது யார் என்று தெரியவில்லை. போலீஸ் ஃப்ராங்க் பெண்டரின் உதவியை நாடுகிறார்கள். பெண்டர் அந்த மண்டை ஓட்டை வைத்து, அவரிடம் இருக்கும் அட்டவணையின் உதவியுடன் , அதற்கு  ஒரு உருவம் கொடுக்கிறார். அது சில மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன் ஒத்துப்போக, சோதனை செய்து பார்க்கையின் அது அந்தப் பெண்ணின் மண்டை ஓடுதான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது. பெண்டர் உருவாக்கிய களி மண் சிலையும், காணாமல் போன பெண்ணின் புகைப்படமும் இதோ.





சரி இப்பொழுது நம்முடைய சம்பவத்திற்கு வருவோம். அமெரிக்காவின் நியூஜெர்சி மாஹானத்தில் ஜான் லிஸ்ட் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜான் லிஸ்டிற்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஜான் லிஸ்ட் ஒரு மிகப்பெரிய பங்களாவில் வசித்து வந்தார். ஜான் லிஸ்ட் வங்கி கணக்காளராக பணிபுரிய, அவரின் குழந்தைகள் அதே பகுதியில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து வர லிஸ்ட் குடும்பம் ஓரளவிற்கு ஆடம்பர வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தனர்.

1971ம் வருடம், சில நாட்கள் ஜான் லிஸ்ட் பங்களாவில் நடமாட்டம் ஏதுமில்லாமல் இருக்க, அவர்கள் எதோ ஒரு உறவினரைப் பார்க்கச் சென்றிருப்பதாக செய்தி பரவியிருந்தது. நாட்கள் கடந்தன. ஒருமாதமாகியும் லிஸ்ட் குடும்பம் திரும்பியதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் எதோ அழுகிய வாடை அடிப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவிக்க  காவல்துறை ஜான் லிஸ்ட் வீட்டிற்குள் சென்று பார்க்க முடிவெடுத்தது.

வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜான் லிஸ்டின் மனைவி, மகள், இரண்டு மகன் ஆகிய நால்வரும் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நால்வரது சடலமும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சோதனையின் போது வீட்டின் வெவ்வேறு இடங்களி அவர்கள் சுடப்பட்டு அங்கிருந்து இழுத்து வரப்பட்டு இங்கு போடப்பட்டிருப்பதாக ரத்தத் சுவடுகள் கூறின.

போலீஸ் வீடு முழுவதையும் அலசியது. மூன்றாவது மாடிக்கு சென்ற போது அவர்களுக்கு  இன்னுமொரு அதிர்ச்சி. ஜான் லிஸ்டின் வயதான தாயும் அதே போல தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அனைவரும் கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் என்பது சடலங்களின் சிதைவிலிருந்து தெரிந்தது.

மேலும் வீட்டைச் சோதனை போடும்போது கிடைத்தது அந்தக் கடிதம். ஜான் லிஸ்ட் அவர் கைப்பட எழுதிய கடிதம். “தனக்கு வேலை போய் விட்டதாகவும், செல்வச் செழிப்பிலிருந்த குடும்பம் இனி வறுமைக்கு தள்ளப்படும் எனவும், தன்னுடைய குடும்பத்தை தன்னால் இனி சரி வர பார்த்துக்கொள்ள முடியாது எனவும், அதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களைக் கொன்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் எப்படிக் கொன்றார் என்பதைப் பற்றிய விளக்கத்தையும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார். முதலில் மனைவியை சமையலறையில் சுட்டுக்கொன்று விட்டு, மகன் மகளுக்காக காத்திருந்ததாகவும், அவர்கள் பள்ளியிலிருந்து வந்த பின்பு அவர்களையும் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் மூன்றாவது மாடிக்குச் சென்று தாயையும் கொன்றதாகவும் எழுதியிருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து தாயின் சடலத்தை இழுத்து வர முடியவில்லை என்பதால் அதனை அங்கேயே விட்டுவிட்டேன் எனவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது எனவும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு டேப் ரெக்கார்டரில் ஒரு பாடலை நல்ல சத்துடன் ஒலிக்க விட்டுவிட்டு ஜான் லிஸ்ட் வீட்டை விட்டு கிளம்பிப் போயிருக்கிறார். ஜான் லிஸ்ட் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். வாரம் தவறாமல் அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு குடும்பத்துடன் செல்பவர்.

காவல்துறை ஜான் லிஸ்டை தேட ஆரம்பித்தது. ஆனால் அவர் கிடைத்த பாடில்லை. சில நாட்கள் கழித்து லிஸ்டின் காரை ஒரு விமான நிலையத்திற்கு அருகில் கண்டுபிடித்தனர். ஆனால் ஜான் லிஸ்ட் எந்த ஒரு விமானத்திலும் சென்றதாக தகவல் எதுவும் இல்லை. போலீஸ் தேடுதலை ஆரம்பிப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்னர், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத சமயத்திலேயே ஜான் லிஸ்ட் வெளிக்கிளம்பியிருந்ததால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரைத் தேடுவதில் போலீஸிற்கு மிகுந்த சிரமமாக இருந்தது. 

நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. ஜான் லிஸ்ட் தொடர்பான எந்த ஒரு தகவலும் போலீஸிற்குக் கிடைக்கவில்லை. குடும்பத்தை கொன்றுவிட்டு அதே விரக்தியில் தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று போலீஸ் தரப்பில் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அதனை உறுதிப்படுத்த எந்த ஒரு சடலமும் இதுவரை கிடைக்கவில்ல.

மாதங்கள் வருடங்கள் ஆகியது. இருந்தாலும் போலீஸ் வருடா வரும் செய்தித்தாளில் ஜான் லிஸ்டைப் பற்றி விளம்பரம் கொடுப்பது, தேடப்படுபவர்கள் பட்டியலில் அவரை சேர்ப்பது என காவல்துறை ஜான் லிஸ்ட் வழக்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

பதினெட்டு வருடங்கள் உருண்டோடியது. ஜான் லிஸ்ட் வழக்கு இன்னுமும் விடை தெரியாத கேள்வியாகத்தான் இருந்தது. அப்பொழுது அமெரிக்காவில்  “America’s Most Wanted” என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் தேடப்படும் குற்றவாளிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பையும், அவர்களது புகைப்படத்தையும் வெளியிடுவார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அவர்களுக்கு எதாவது துப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். FBI நிறைய குற்றவாளிகளை இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி பிடித்திருந்தனர். இறுதியாக ஜான் லிஸ்டைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் வெளியிட வேண்டுமானால் ஜான் லிஸ்டின் சமீபத்தைய புகைப்படம் வேண்டும். ஆனால் காவல்துறையிடம் இருப்பதோ 18 வருட பழைய புகைப்படம். அப்பொழுதுதான் காவல்துறை ஃப்ராங்க் பெண்டரை அனுக முடிவெடுக்கிறது.

ஆனால் தற்பொழுது ஃப்ராங் பெண்டருக்கான வேலை சற்று கடினம். ஒருவரின் புகைப்படத்தை மட்டும் வைத்து அவர் பதினெட்டு வருடம் கழித்து எப்படி இருப்பார் என்பதை கொண்டு வரவேண்டும். தற்பொழுது ஃப்ராங்க் பெண்டருக்கு அவரிடமிருக்கும் அட்டவணை மட்டும் போதவில்லை. இன்னும் நிறைய தகவல்கள் தேவைப்படுகிறது. ஜான் லிஸ்ட் தொடர்பான அனைத்து விபரங்களையும் படிக்கிறார். அவரின் உறவினர்களுடன் விவாதிக்கிறார். ஜான் லிஸ்ட் எப்படிப்பட்டவர், அவரின் குணம் என்ன, அவர் தன்னை மற்றவர்கள் முன்னால் எப்படி வெளிப்படுத்திக்கொள்வார் என பல தகவலகளை திரட்டுகிறார்.

ஜான் லிஸ்டின் அப்பா, தாத்தாவின் புகைப்படங்களைப் அடிப்படையாக வைத்து ஜான் லிஸ்டிற்கு எந்த அளவு முடி , எந்த பேட்டர்னில் கொட்டி இருக்கும், ஜான் லிஸ்டின் வலது காதுக்கு கீழே இருந்த அறுவை சிகிச்சை தழும்பு எப்படி இருக்கும் என்கிற தகவல்களையெல்லாம் சேகரித்து ஜான் லிஸ்டின் 18 வருடத்திற்கு பிறகான தோற்றத்தை உருவாக்குகிறார் பெண்டர்.



அடுத்து பெண்டருக்கு இன்னொரு சவால். ஜான் லிஸ்ட் கண்ணாடி அணிபவர். அவர் தற்பொழுது என்ன மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடி அணிந்திருப்பார் என்பதை நிறைய காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார் பெண்டர். இறுதியாக தன்னுடைய கடந்த கால கறுப்புப் பக்கங்களை மறைக்க தடிமனான ஃப்ரேம் கொண்ட  கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு கண்ணாடியத் தெரிவு செய்கிறார். பதினெட்டு வருடம் வயதான ஜான் லிஸ்ட் ரெடி.



America’s Most Wanted நிகழ்ச்சியில் அஞ்சு கொலை ஆறுமுகமாக ஜான் லிஸ்ட்டைப் பற்றிய செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிறது. இறுதியில் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்டின் உருவமும் ஒளிபரப்பப் படுகிறது. காவல்துறையின் இத்தனை முயற்சியும், கடின உழைப்பும் வீண் போகவில்லை.  டென்வர் நகரில் நிகழ்ச்சியை பார்த்த ஒரு குடும்பம் ஜான் லிஸ்டின் முகத்தைப்  பார்த்து அவர்களுக்கு தெரிந்த ஒருவரைப் போல இருப்பதாக நினைக்கிறார்கள். உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டு அது சில மாதங்களுக்கு முன்னர் தங்களுடைய அண்டை வீட்டில் வசித்த பாப் க்ளார்க் என தெரிவிக்கிறார்கள். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட உருவத்தின் கண்ணாடியும், காதுக்கு கீழே இருந்த தழும்புமே தங்களை அவ்வாறு நினைக்க வைத்தது எனவும் கூறுகின்றனர்.

காவல் துறை விசாரணையில் பாப் க்ளார்க் நியூ விர்ஜினியாவிற்கு இடம் பெயர்ந்து விட்டதாகத் தெரிகிறது. நியூ விர்ஜினியாவில் பாப் க்ளார்க்கை தேடிச் சென்று , கண்டும் பிடித்துவிட்டனர். அவரின் “நீங்கள்தான் பாப் க்ளார்கா ?” என்றிருக்கிறார்கள் . அவர் ஆம் என்றிருக்கிறார். நீங்கள் தானே ஜான் லிஸ்ட் எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்றிருக்கிறார்.

அவரை அலேக்காகத் தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ஜான் லிஸ்டின் கைரேகையை பாப் க்ளார்க்கின் கைரேகையுடன் ஒப்பிட அது 100% ஒத்துப்போனது. லிஸ்ட் சிறையில் தள்ளப்பட்டார். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று என்னவென்றால் ஜான் பெண்டர் என்ன மாதிரியான கண்ணாடியைத் தெரிவு செய்தாரோ அதே மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஃப்ராங்க் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்ட் உருவத்தையும், கைது செய்யப்பட்ட ஜான் லிஸ்ட் புகைப்படத்தையும் அருகருகே போட்டு முதல் பக்கத்தில் ஃப்ராங்க் பெண்டரைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது.




ஜான் லிஸ்ட் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. அவரின் இரண்டாவது மனைவியால் அவர்தான் ஐந்து கொலைகளைச் செய்த குற்றவாளி என்பதை நம்பவே முடியவில்லை

1989, வழக்கு விசாரனையில் ஜான் லிஸ்ட் 5 கொலைகளை செய்த குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தி, அவரை ஆயுள் முழுவதும் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.


Wednesday, April 29, 2020

தடயவியல் – Case 1 மாயமான பெண்!! – பகுதி 2


Share/Bookmark


முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்!!

ஹெல்லா காணாமல் போன சம்பவத்தில் ஹெல்லாவின் கணவர் ரிச்சர்ட் Lie detector test இல் நிரபராதி என நிரூபனமானதும் காவல்துறை வேறு ஏதேனும் ஒரு துப்பிற்காக காத்திருந்தனர்.  அவர்கள்  எதிர்பார்த்ததும் விரைவிலேயே கிடைத்தது.

ஹெல்லா காணாமல் போன வாரத்தில் நல்ல பனிப்பொழிவு இருந்திருக்கிறது. சாலைகளில் பனியை அகற்றும் Snow Plow எனும் வாகன ஓட்டி ஒருவர், ஹெல்லா காணாமல் போன மறுநாள் அதிகாலை 3.30 க்கு சாலையின் ஒரு இடத்தில் Wood Chipper ஒன்று நின்றிருந்ததாகவும், ஆரஞ்சு வண்ண  மேலாடை உடுத்தியிருந்த ஒருவர் அதன் அருகில் இருந்ததாகவும், அதெ Wood chipper அடுத்த ஒரு மணி நேரத்தில் சற்று தொலைவிலுள்ள ஆற்றங்கரை ஓரமாக இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறார்.  உடனே காவல்துறை தகவல் தெரிவித்த ஓட்டுனரிடம், அந்த Wood chipper ஐ எந்த இடத்தில் பார்த்தாரோ அங்கு தங்களை அழைத்துச்செல்ல சொல்கின்றனர். ஓட்டுனரும் அழைத்துச் செல்கிறார். அவர் அழைத்துச் சென்ற இடம் ஹவுசடானிக் ( Housatanic River) எனும் நதியின் கரை.

காவல் துறையினர் அந்த நதிக்கரையினை அங்குலம் அங்குலமாகத் தேட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் கண்ணுக்குக் கிடைத்ததெல்லாம் வெறும் மரத் துணுக்குகள் மட்டுமே. தேடுதல் வேட்டை நாட்கணக்கில் நீடித்தது. கடைசில் இத்தனை நாள் தேடுதலின் பலனாக அவர்களுக்குக் கிடைத்தது ஒரு லெட்டர் கவர். ஆம்.. அதன் பெறுநர் முகவரியில் இருந்தது  ஹெல்லாவின் பெயர்.

இன்னும் நதிக்கரையின் மரத்துணுக்குகளுக்கிடையே கூர்ந்து கவனித்து தேடும்பொழுது போலீஸாருக்கு கிடைத்தது, நீல நிற ஃபைபர் இழைகள் மற்றும் சிறிய வெண்மை நிற துணுக்குகள். அந்த வெண்மை நிற துணுக்குகளை ஆய்வுக்குட்படுத்திய பொழுது அவை மனித எழும்பின் பகுதிகள் என்பது தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் சிறிய உலோக குப்பி போன்ற ஒன்றும், நிறைய மயிரிழைகளும் நதிக்கரையோரம் மரத் துணுக்குகளுக்கிடையே கிடைத்தது. மேலும் Nail Polish போடப்பட்ட ஒரு கட்டை விரல் நகமும் போலீஸாருக்குக் கிடைத்தது.

எதோ ஒரு வகையில் ஹெல்லாவிற்கும் இந்த நதிக்கரைக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிவிட, சோதனையை தீவிரப்படுத்தினர் காவல்துறை. நீரில் மூழ்கித் தேடும் diver கள் வரவழைக்கப்பட்டு, ஆற்றுக்குள் தேட ஆரம்பித்தனர். அந்த முயற்சியும் வீண் போகவில்லை.  சேதாரமடைந்த ஒரு Chain Saw ஆற்றுக்குள்ளிருந்து அவர்களுக்கு கிடைத்தது. சேதமடைந்த, அந்த Chain Saw வின் சீரியல் நம்பர் பகுதி வலுக்கட்டாயமாக சேதாரப் படுத்தப்பட்டிருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை உண்டாக்கியது.


அந்த Chain Saw தடயவியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு மேலும் சில தகவல்கள் கிடைக்கின்றன. அந்த Chain saw வின் பற்களுக்கிடையே மிக நுண்ணிய தசைத் துணுக்குகளும், ஒரு சில துண்டு துண்டான மயிரிழைகளும், நீல நிற ஃபைபர் இழைகளும் கிடைக்கின்றன. அந்த நீல நிற ஃபைபர் இழைகள் ஏற்கனவே கரையோரம் கிடைத்த நீல நிற ஃபைபர் இழைகளுடம் ஒத்துப்பொகிறது.

ஆனால் அந்த Chain Saw யாருடையது எனத் தெரியவில்லை. தெரியவேண்டுமெனில் அதன் சீரியல் நம்பர் தெரியவேண்டும். ஆனால் சீரியல் நம்பர் பகுதி சேதமடைந்திருக்கிறது. தடயவியல் துறையினர் விடுவதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட  ரசாயனக் கரைசல் மூலம் சேதாரமாக்கப்பட்ட மேல் பகுதியை நீக்குகிறார்கள். இப்போது அவர்களால் அச்சிடப்பட்டிருக்கும் சீரியல் நம்பரை ஓரளவு தெளிவாக க் காணமுடிகிறது. அந்த எண் 5921616. அந்த சீரியல் நம்பரை வைத்து விசாரிக்கும் போது , அது ஒருவரின் வாரண்டி கார்டுடன் ஒத்துப் போகிறது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட்டே தான்.

ஆனாலும் போலீசாரால் ரிச்சர்ட்டை நெருங்க முடியவில்லை. காரணம் ஹெல்லாவிற்கு என்ன ஆயிற்று என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேளை ஹெல்லா இறந்திருந்தால் அவரது சடலம் எங்கே? சடலமில்லாமல் அவர் கொலையானார் என்பதை எப்படி நிரூபிப்பது? அதற்கு தடயவியல் துறையின் உதவி இன்னும் நிறையவே தேவைப்படுகிறது.

அடுத்து நதிக்கரையில் கிடைத்த நகத்தில் இருக்கும் நக பாலிஷின் ரசாயன கலவையும், ஹெல்லாவின் வீட்டிலிருந்த நக பாலிஷின் ரசயானக் கலவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். இரண்டும் ஒத்துப்போகிறது. அந்த Chain Saw வில் கிடைத்த மயிரிழைகளையும், ஹெல்லாவின் சீப்பில் இருந்து எடுத்த மயிரிழைககளையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒண்றுதான் என்பதைக் கண்டறிகின்றனர். மேலும் கிடைத்த மயிரிழைகள் முன் தலையில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர்.

நதிக்கரையில் கிடைத்த எலும்புத் துணுக்குகளை மேலும் ஆய்வு செய்ய டாக்டர் லீ என்பவர் அழைக்கப்படுகிறார். டாக்டர் லீ அந்த மிகச் சிறிய எலும்புத் துண்டுகளை பார்த்து, ஒரு வேளை அவை wood chipper இன் வழியே வந்திருக்கலாம் என முடிவுச்செய்கிறார்.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள, ரிச்சர்ட் வாடகைக்கு எடுத்த அதே Wood chipper இல் டாக்டர் லீ  ஒரு சோதனை செய்கிறார். அந்த Wood chipper இன் உள்ளே ஒரு பன்றியை செலுத்துகின்றனர். காரணம் பன்றியின் தோல் மற்றும் எலும்பு அமைப்புகள் கிட்டத்தட்ட மனிதனை ஒத்து இருக்கும் என்கிற காரணத்தால். உள்ள சென்ற பன்றி Wood Chipper ஆல் சிறு சிறு துகள்களாக்கப்பட்டு வெளிவந்தது. வெளிவந்த எலும்புத் துகள்களை டாக்டர் லீ ஆய்வு செய்கிறார். அந்த Wood chipper ஆல் வெட்டப்பட்ட துணுக்குகளில் ஒரு தனித்தன்மையான கோடுகள் இருப்பதை கண்டறிகிறார். அந்த எலும்புத் துணுக்குகள் வெட்டப்பட்டிருக்கும் அதே முறையில் தான் நதிக்கரையில் கிடைத்த எலும்புத் துணுக்குகளும் வெட்டப்பட்டிருப்பது உறுதியாகிறது.

அதுமட்டுமல்லாமல் நதிக்கரையில் கிடைத்த மற்ற சில எலும்புத் துண்டுகளை மைராஸ்கோப்பில் ஆய்வு செய்யும் போது டாக்டர் லீ மற்றொரு விஷயத்தை கண்டறிகிறார். அவர் ஆய்வு செய்த அந்த எலும்புத் துணுக்கு மனித மண்டை ஓட்டின் நடு மண்டையின் உட்புறம் இருக்கும் எலும்பின் அமைப்பாகும். இது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு எலும்பின் அமைப்பு.

மேலும் சில எலும்புத் துணுக்குகளை ஆய்வு செய்து அவை மண்டை ஓட்டின் பக்கவாட்டில் இருக்கும் எலும்பு அமைப்பு என்பதையும்  உறுதிசெய்தார். ஆனால் இந்த எலும்புத் துணுக்குகள் ஒருவர் உயிரோடு இருந்த போது எடுக்கப்பட்டதா அல்லது இறந்த பின்னர் உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாகவில்லை. யாரோ ஒருவர் இறந்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. யார் ? யாரால்? என்பதுதான் இப்பொழுது கேள்வி!!



நதிக்கரையில் கிடைத்த சிறு சிறு எலும்புத் துணூக்குகளை திரவ நைட்ரஜனில் உறைய வைத்து அதனை பொடியாக்கி சோதனைக்கு உட்படுத்துகிறார் டாக்டர் ஹென்றி. அது ஓ பாசிடிவ் வைகையைச் சேர்ந்த ஒருவரின் எலும்பு என்பதைக் கண்டறிகிறார். அது ஹெல்லாவின் ரத்த வகையாகும்.

அடுத்து தேடுதலின் போது நதிக்கரையில் கிடைத்த அந்த சிறிய மெட்டர் குப்பியை பார்க்கிறார்கள். அது பற்களில் உபயோகிக்கப்பட்டதாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகின்றனர். ஆனாலும் அந்த குப்பியில் மனித திசுக்கள் எதும் இல்லாததால் அது ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.  தடவியலுக்கு மேலும் ஆதாரங்கள் தேவைப்பட்டன.
டாக்டர் லீயால் நியமிக்கப்பட்ட ஒருவர் மறுபடியும் நதிக்கரைக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டார். முழுமையாக 5 நாட்கள் தேடிய பின்னர் தேடுதலின் பலனாக அவர் கண்ணில் பட்டது ஒரு மனிதப் பல்.

சோதனைக் கூடத்தில் அந்தப் பல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. சில வருடங்கள் முன்பு ஹெல்லா பற்களை எடுத்த ஒரு X- Ray படத்தை அடிப்படையாக வைத்து தற்பொழுது  கிடைத்த பல் ஒப்பிடப்பட்டது. ஆய்வில் அந்தப் பல் ஹெல்லாவின் பல் என்பது நிரூபனமானது.

இறுதியாக கிடைத்த ஆதாரங்களை வைத்து ஹெல்லா இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார். ஹெல்லாவின் கணவன் ரிச்சர்ட் ஹெல்லாவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான்.

காவல்துறையினரின் பார்வையில் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்கிற யூகம் இதோ:



நவம்பர் 18 அன்று இரவு ஹெல்லா வீட்டிற்கு வந்து அவளுக்கு பிடித்த நீல நிற இரவு உடைக்கு மாறுகிறாள். அப்போது தனக்கு வந்திருந்த லெட்டர் ஒன்றை எடுத்து பாக்கெட்டில் வைக்க, சற்று நேரத்தில் ரிச்சர்ட்டுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. வாக்குவாதம் முற்றி ரிச்சர்ட் போலீஸ் வேலைக்கு உபயோகிக்கும் ப்ளாஷ் லைட்டை எடுத்து ஹெல்லாவின் தலையில் அடிக்கிறான். ஹெல்லா சரிந்து முட்டி போட்ட படி கீழே விழுகிறாள். இரண்டாவது முறையும் அடிக்க, ரத்தம் தெரிந்து மெத்தையில் படுகிறது.

சிறிது நேரத்தில் ஹெல்லா இறந்துவிட, அவளை ஒரு போர்வையில் சுற்றி, வீட்டிலிருந்த ஒரு பெரிய ஃபீரீசருக்குள் வைக்கிறான். மறுநாள் காலை குழந்தைகளிடம் அம்மா இன்று முன்னதாகவே வேலைக்கு கிளம்பியதாகச் சொல்லி அவர்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பிகிறான். ரத்தம் படிந்த கார்ப்பெட்டை கிழித்து அப்புறப்படுத்துகிறான்.

அன்றே ஒரு மிகப்பெரிய Wood chipper ஐ தன்னுடைய கிரெடிட் கார்டை உபயோகித்து வாடகைக்கு எடுக்கிறான். அன்று இரவு ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த ஹெல்லாவின் உடலையும், அவனுடைய Chain Saw வையும் எடுத்துக்கொண்டு Wood chipper உடன் நதிக்கரைக்கு செல்கிறான். அவ்வாறு செல்லும்போது தான் Snow plow ஓட்டுனர் ரிச்சர்ட்டை இரண்டு இடங்களில் பார்க்கிறான்.

நதிக்கரையில் Wood chipper ஐ பொறுத்தி, ஹெல்லாவின் உடலை Chain saw மூலம் துண்டு துண்டாக வெட்டி ஒருசில மரத்துண்டுகளுடன் Wood Chipper ற்க்குள் செலுத்த, அது சிறு சிறு துணுக்குகளாக வெளியேற்றுகிறது. பெரும்பாலான துணுக்குகள் நதியின் உள்ளே விழுந்து  அடித்துச் செல்லப்படுகின்றன. ஒருசில துண்டுக்கள் கரையில் விழுகிறது. ஹெல்லாவின் பாக்கெட்டில் இருந்த லெட்டர் மட்டும் மிகக் குறைந்த சேதாரத்துடன் அப்படியே வெளியில் வந்து விழுகிறது. அவைதான் சோதனையின் போது தடயவியல் துறைக்கு கிடைத்தவை.

ஒரு நாள் முழுவதும் ஹெல்லாவின் உடல் ஃப்ரீசருக்குள் இருந்ததால் Chain Saw வால் அறுக்கும் போது ரத்தம் எதுவும் வெளிப்படவில்லை.  பிறகு சீரியல் நம்பர் பகுதியை சேதப்படுத்தி அதனை ஆற்றுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குச் செல்கிறான் ரிச்சர்ட்.

ஹெல்லாவின் வழக்கில் தடயவியல் துறையின் பங்கு அளப்பறியது. 47 பேர் கொண்டு குழு, இந்த ஒரு வழக்கிற்காக மட்டும் செய்த சோதனைகள் 50,000 க்கும் மேல் என்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து 50 வருட சிறை தண்டனை விதித்தது. இறந்தவரின் உடல் இல்லாமல் கொலையாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டது அந்த மாஹானத்தில் அதுவே முதல் முறை.

ஆனால் இன்று வரை ரிச்சர்ட் தான் ஹெல்லாவைக் கொன்றதாக ஒப்புக்கொள்ளவில்லை.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...