Sunday, August 30, 2015

தனி ஒருவன் – கெத்து!!!


Share/Bookmark
தெலுங்கு படங்கள் சிலதயெல்லாம் பாக்கும்போது இப்டியெல்லாம் தமிழ்ல்ல யாரும் எடுக்கமாட்டேங்குறாங்களேன்னு நிறைய தடவ ஃபீல் பன்னிருக்கேன். ஆனா அந்தமாதிரி ஃபீலிங் அதிகமாகும் போதெல்லாம் ஒவ்வொரு தமிழ்ப்படம் வந்து, ஆறுதல் அளிக்கும். அஞ்சாதே, பேராண்மை, சதுரங்கவேட்டை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், புறம்போக்கு மாதிரியான படங்கள் தமிழ் படங்களுக்கான தனி அடையாளம். கதைக்கருக்களை எங்கிருந்தாவது ஆட்டையைப் போட்டிருந்தா கூட, தெலுங்குலயெல்லாம் அந்த மாதிரி படங்களை யாரும் முயற்சிக்கிறது கூட இல்லை. அப்படி வழக்கமான சினிமாவுலருந்து கொஞ்சம் மாறுபட்டு, விறுவிறுப்பான திரைக்கதையோட வந்திருக்க படம் தான் தனி ஒருவன்.

வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லானவன் என்பதைப் பொறுத்தே ஒரு ஹீரோவோட கெத்து இருக்கும். ஹீரோவ எவ்வளவு நல்லவனா காட்டனுமோ அந்த அளவுக்கு வில்லன கெட்டவனா காட்டனும். அப்பதான் எடுபடும். மாணிக் பாட்ஷா இவ்வளவு பெரிய ஆள் ஆனாருன்னா அதுக்கு முக்கிய காரணம் மார்க் ஆண்டனிதாங்குறத நிச்சயம் மறுக்க முடியாது.

“உன் எதிரி யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” ங்குற வரிகளோட ஆரம்பிக்கிற படத்தோட ஒன்லைனே அதுதான்னு சொல்லலாம். நம்ம நண்பன் யார்னு சொன்னா நம்ம எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சிக்கலாம். ஆனா நம்ம எதிரி யார்ன்னு சொன்னாதான் நம்ம கெப்பாசிட்டி என்னன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு அந்த வரிகளுக்கு ஜெயம் ரவி விளக்கம் குடுக்கும்போது ஒரே கைதட்டு.

வழக்கமா எல்லா படங்கள்லயும் வில்லன் ஒரு தனி ட்ராக்குல மர்டரா பன்னிட்டு இருப்பாரு. ஹீரோ அதுக்கு சம்பந்தமே இல்லாம எங்கயோ அவரு ஆள கரெக்ட் பன்னி டூயட் பாடிகிட்டு இருப்பாரு. திடீர்னு எதோ ஒரு இடத்துல ரெண்டு பேருக்கும் முட்டிக்கும். அப்புறம்தான் அந்த வில்லன் நம்ம ஹீரோவுக்கு மெயின் வில்லனாவாறு. ஆனா இங்க கொஞ்சம் மாறுபட்டு ஜெயம் ரவி, அவரோட எதிரிய அவரே தேடி முடிவு பன்றாரு.

”நாட்டுல நடக்குற ஒவ்வொரு சின்ன தப்புக்கும் பின்னால எதோ ஒரு பெரிய தப்பு ஒளிஞ்சிருக்கு. ஒவ்வொரு சின்ன தப்பையும் தனித்தனியா ஒழிக்கிறதுக்கு பதில், நூறு தப்பு நடக்க காரணமா இருக்க ஒருத்தன ஒழிச்சா போதும். எல்லாம் சரியாயிடும்” ன்னு நினைக்கிறாரு ஜெயம் ரவி. IPS ட்ரெயிங் முடிஞ்சி போஸ்டிங் வர்றதுக்குள்ள அவருக்கான எதிரிய முடிவு பண்ணி அவன அழிக்கிறத மட்டும் என்னோட ஒரே குறிக்கோளா வச்சிக்கிறேன்னு சொல்லி, அவரு எதிரியையும் முடிவு பன்றாரு. அதுக்கப்புறம் அவரு முடிவு பண்ண எதிரிய எப்படி அழிக்கிறாருங்குறத கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாம சொல்லிருக்க படம்தான் தனி ஒருவன்.

பொதுவா படம் பாக்கும்போது ஆடியன்ஸான நம்ம, நம்மள ஹீரோவோட தான் sync பன்னிக்குவோம். ஹீரோவுக்கு ஒரு கஷ்டம்னா அது நமக்கு வர்ற மாதிரி. ஹீரோ அழுதா நமக்கு அழுக வரும். ஹீரோ சண்டை போட்டா நம்மளே அடிக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வில்லன அடிச்சி தொம்சம் பன்னனும்,.. ஹீரோ ஜெயிக்கனும் வில்லன் தோக்கனும்னு தான் எப்பவும் தோணும். ஆனா சில படங்கள்ல மட்டும்தான் ஹீரோ தோத்தாலும் பரவால்ல. வில்லன் ஜெயிக்கனும்னு ஆசைப்படுவோம். அப்புடி ஒருவில்லன் தான் இங்க.

இதுநாள் வரைக்கும் நம்ம  கோட் சூட்னா அது அஜித்துக்கு மட்டுமே தைக்கப்பட்டதுன்னும் டானுன்னா அவரு மட்டும்தான்னும் ஸ்மார்ட்டுன்னா அவருதான்ப்பான்னும் தான் பில்டப்ப குடுத்துக்கிட்டு இருக்கோம். இங்க அரவிந்தசாமி கோட் சூட் போட்டுகிட்டு சிரிச்சிக்கிட்டு வர்றாரு பாருங்க.. அஜித்தெல்லாம் அவுட்டு. பக்கத்துல கூட நிக்கமுடியாது. என்னமா இருக்காரு. பசங்களே சைட் அடிப்பாய்ங்க போலருக்கு.

இவ்வளவு ஸ்மார்ட்டான, கூலான, பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டர்தான் படத்தையே தூக்கி நிறுத்துது. படத்துல எவன் நல்லது செய்றானோ அவன் மட்டும் ஹீரோ இல்லை. ஆடியன்ஸ் யாரு பக்கம் இருக்காங்களோ அவனும்தான் ஹீரோ. அந்த வகையில அரவிந்த சாமி நிச்சயம் இங்க ஹீரோதான். அரவிந்த சாமி எண்ட்ரி வரைக்கும் படம் மிஷ்கினோட அஞ்சாதே ஸ்டைல்ல போயிட்டு இருக்கு. ஆனா அவர் எண்ட்ரிக்கு அப்புறம் இன்னும் சூப்பர். சிரிச்சிக்கிட்டே மிரட்டுரது, கொலை பன்றதுன்னு எந்த இடத்துலயுமே அரவிந்த சாமிக்கு கோவம் வர்ற மாதிரியே காமிக்காம அதே கெத்தோட மெயிண்டெய்ன் பன்னி முடிச்சிருக்கது சிறப்பு. அரவிந்த் சாமி அப்பாவா வர்ற தம்பி ராமைய்யாவோட characterization செம. அவர் வர்ற எல்லா காட்சிகள்லயும் சிரிக்க வைக்க தவறல.

தமிழ்ல ஜெயம் ராஜாவோட முதல் நேரடிப் படம். Overall ஆ ரெண்டாவது படம். நிறைய ஹிட்டு படங்களை குடுத்துருந்தாலும் இதுவரைக்கும் இவர யாரும் அவ்வளவு பெரிய டைரக்டரா மதிக்கல. காரணம் அனைத்தும் ரீமேக்கு. நேரடிப்படமா எடுக்கிறாருன்னு பில்ட்அப் குடுக்கப்பட்ட வேலாயுதம் கூட கடைசில ஆசாத் படத்தோட ரீமேக்குன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையும் போச்சு. சமீபத்துல வாட்ஸாப் ல ஒரு காமெடி படிச்சிருப்பீங்க. மனைவி “என்னங்க இன்னிக்கு ரசம் வைக்கவா இல்ல சாம்பார் வைக்கவான்னு கேப்பா. அதுக்கு ஹஸ்பண்டு “மொதல்ல நீ வைய்யி.. அதுக்கப்புறம் பேரு வச்சிக்குவோம்”னு சொல்லுவான். தனிஒருவன் ஜெயம் ராஜா நேரடிப் படமா இயக்குறாருப்பான்னு கேள்விப்படும்போது எனக்கும் அப்டித்தான் தோணுச்சி. மொதல்ல நீங்க எடுங்க சார் அப்புறம் அது எந்தப் படத்தோட ரீமேக்குன்னு நாங்க பாத்துக்குறோம்னு.

சுபாவின் கதைக்கு ராஜா திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்றாங்க. இது உண்மைன்னா ராஜா நிச்சயம் திறமையானவர்தான். வசனங்கள்லாம் சூப்பர். நிறைய வசனங்கள் கைதட்டு வாங்குது. ஹிப்ஹாப் தமிழா இசையில் ரெண்டு பாட்டு சூப்பர். ஒரு பாட்டு சுமார் ரகம். BGM உம் பரவாயில்லை. நயன்தாரா வழக்கம்போல சிறப்பு. ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா மேக்கப் போட்டுருக்கலாம்.

”ஹீரோன்னு சொன்னாலே அதுக்கு பொருத்தமான ஆள் ஜெயம் ரவிதான். என்னா ஹைட்டு என்னா வெய்ட்டு..என்னா கலரு” ன்னு தனுஷ் ஒருதடவ சொன்னாரு. ரவியோட அடுத்தடுத்த தோல்விகளால, ஜெயம் ரவி ப்ரஷாந்தோட நிலமைக்கு போயிட்டு இருக்காருன்னு சமீபத்துல ஒரு ஆர்டிக்கிள்ல போட்டுருந்தாங்க. அவருக்கு சூட் ஆகுற கதையை சரியா செலெக்ட் பன்னா நிச்சயம் அப்டி ஒரு நிலமை வராது. ஆக்‌ஷன் கதைகளும், சீரியஸான கதைக்களங்களுமே ஜெயம் ரவிக்கு செட் ஆகுது. அந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அவரு காமெடி பன்ன ட்ரை பண்ணும்போது தான் நமக்கு வாமிட் வருது. இந்தப் படத்துல ஆளு செம ஃபிட் & கெத்தா இருக்காரு.

மொத்தத்துல இந்த வருஷத்தோட வெற்றிப்படங்களோட வரிசையில அடுத்ததா சேரப்போகுது இந்த தனி ஒருவன். மிஸ் பன்னாம பாருங்க. அட்லீஸ்ட் அரவிந்தசாமிய பாக்குறதுக்காவது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

காரிகன் said...

---இங்க அரவிந்தசாமி கோட் சூட் போட்டுகிட்டு சிரிச்சிக்கிட்டு வர்றாரு பாருங்க.. அஜித்தெல்லாம் அவுட்டு. பக்கத்துல கூட நிக்கமுடியாது. என்னமா இருக்காரு. பசங்களே சைட் அடிப்பாய்ங்க போலருக்கு.----

அரவிந்த் சாமி இடையில் காணாமல் போகாமல் இருந்திருந்தால் கமல்ஹாசன் பாடு திண்டாட்டமாக போயிருக்கும். மேலும் அஜித் போன்றவர்களை ஹேண்ட்சம் என்று சொல்லும் அபத்தமும் வந்திருக்காது.
-

Saran said...

பாஸ் உங்களுக்கு ஏன் ரவியை புடிக்கலன்னு தெரில. ஆனா ஒவர் ஏக்டிங் பண்ணாத நல்லா நடிப்பாரு.. ஹேண்ட்சம்கூட

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...