Monday, March 14, 2016

மாப்ள சிங்கம் – கலகலப்பு!!!


Share/Bookmark
கிராமத்து பிண்ணனி கொண்ட படங்களை பாக்க எப்பவுமே ஒரு மகிழ்ச்சியா இருக்கும். ஊஞ்சலோட உள்ள பெரிய வீடு, வீட்டுல ஒரு பாட்டி, கூட்டு குடும்பம், கோயில், பரிவட்டம், ஊர்திருவிழா, கல்யாணம், வெள்ளை வேட்டி சட்டை ,மரத்தடி பஞ்சாயத்து, வயக்காடுன்னு கிராமத்து படங்கள்ல தவறாம இடம்பெறும் இதையெல்லாம் பாக்கவே கலர்ஃபுல்லாவும், சந்தோஷமாவும் இருக்கும். பெரும்பாலும் இந்த பின்னணில படம் எடுக்குறது ரவிக்குமார், சுந்தர்.சி ஹரி இவங்கதான். ரிட்டயர்ட் ஆன டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரயும் லிஸ்டுல சேத்துக்கலாம். இந்த பிண்ணனில வந்த பெரும்பாலான படங்கள் வெற்றியை தேடிக்கொடுத்துருக்கு. உதாரணமா சமீப காலங்கள்ல மிகப்பெரிய வெற்றிப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கமும் இப்ப வந்த ரஜினி முருகனும் கூட கிட்டத்தட்ட இதே வகையறா தான். அதே பாணில அடுத்து வந்திருக்க ஒரு படம்தான் நம்ம மாப்ள சிங்கம்.

ஜாதிப்பிரச்சனையால ரொம்ப நாளா இழுக்கப்படாம இருக்க ஒரு தேர். ஜாதி வெறியில் ஊரிப்போன ரெண்டு ஊர்தலைவர்கள். காதல் பன்றவங்கள நேக்கா பேசி பிரிச்சி விடுற நாயகன். வழக்கம்போல நாயகனச் சுத்தி எப்பவும் இருக்குற நாலு காமெடியர்கள். இதவச்சி ஒரு முழுநீள நகைச்சுவை படத்த எடுத்தா எப்படி இருக்கும்? அதான் மாப்ள சிங்கம்.

விமலுக்கு எல்லா வகையிலயும் சிறந்த படம்னு இதச் சொல்லலாம். மத்த படங்கள்ல எல்லாம் ஹீரோவா இருந்தா கூட சப்போர்ட்டிங் ரோல் பன்றவரு மாதிரி வந்துட்டு போற விமல் கெட்டப்பல்லாம் மாத்தி இதுலதான் கொஞ்சம் ஹீரோ மாதிரி இருக்காரு. அதே ஊர்ல இருக்க வேற்று சமூகத்த சேர்ந்த வக்கீலா நம்ம அஞ்சலி. ஹேர் ஸ்டைல்லாம் மாத்தி அஞ்சலி அள்ளுது.

ரொம்ப சீரியஸான காட்சிகள்னு எதுவும் கிடையாது. சீரியஸான கேரக்டர்னும் எதுவும் கிடையாது. சீரியஸா காமிக்கப்படுற ராதாரவி கூட டென்டர் விடுற காட்சிலயும், க்ளைமாக்ஸ் காட்சிலயும் காமெடில பட்டைய கிளப்புறாரு.

படம் ஆரம்பிச்சதுலருது ஒவ்வொரு காட்சிலயும் தியேட்டர்ல சிரிப்பு சத்தம். சூரிய ஒழுங்கா யூஸ் பன்னா சிரிக்க வைக்க முடியும்ங்குறதுக்கு வ.வா.சங்கம், ரஜினிமுருகன் மாதிரி இந்தப் படமும் ஒரு நல்ல உதாரணம். பத்தாததுக்கு காளிவெங்கட், லொள்ளு சபா சாமிநாதன் வேற. சாமிநாதன் ராதாரவி பொண்ணு ஓடிப்போயிருச்சின்னு எல்லார்கிட்டயும் சொல்ல, பொண்ணத்தேடி கார்ல போயிட்டு இருக்கும் போது, எங்க நாம சொன்னது தப்பானா நம்மள பொளந்துருவாய்ங்களோன்னு கார்ல “கடவுளே கண்டிப்பா அந்தப் பொண்ணு ஓடி தான் போயிருக்கனும்” ன்னு வேண்டிக்கிட்டு வர்ற சீன் கலக்கல்.

விமல் கூட சுத்துற குரூப்புல ஒரு வெள்ளைக்காரரையும் வச்சி நம்ம ஊர்ல இருக்க சில மோசமான பழக்கங்களை அவர் மூலமாவே கேள்வி கேட்டு விவேக் பானில கவுண்டர் குடுக்குறாங்க. ஒரு ரீஜனல் லாங்குவேஜ் படத்துக்கு ஒரு வெள்ளைக்காரரு படம் முழுசும் காமெடி கேரக்டர்ல வந்து, சொந்தக் குரல்ல டப்பிங் பேசி நடிச்சிருக்கது இந்தியாவுலயே இதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். ஒரு காட்சில “கேஸ்ட் மாறி லவ் பண்ணா தப்பா?” ன்னு அவர் கேக்க சூரியும் வெங்கட்டும் “ஆமா கேஸ்ட் மாறி கல்யாணம் பன்னா எங்க ஊர்ல அடிப்போம்” ன்னு சொல்றாங்க. இன்னொரு சீன்ல விமல் “ஏண்டா உனக்கு லவ்வர் இருக்கா?” ன்னு அவர்கிட்ட கேக்கும்போது “இருக்கு” ன்னு சொல்லிட்டு உடனே பதறிப்போய் “same caste only… same caste only”ன்னு சொல்றது செம. ஏன் சம்பந்தம் இல்லாம ஒரு அயல்நாட்டு கேரக்டர் வருதுன்னு நாம லைட்டா யோசிக்கும்போது அதுக்கும் க்ளைமாக்ஸ்ல பதில் இருக்கு.

மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய N.ராஜசேகர்தான் இயக்குனர். நீட்டான ஸ்க்ரீன்ப்ளே. எந்த காட்சியும் தேவையில்லைன்னோ இல்லை அருக்குதுன்னோ சொல்ல முடியல. இன்னும் சொல்லப்போனா முதல் பாதி ரொம்ப ஸ்பீடா போன மாதிரி ஒரு ஃபீல்.

படத்தோட முதுகெழும்பு டான் அசோக்கின் வசனம்னு சொல்லலாம். பெரும்பாலான காட்சிகள் நாம ஏற்கனவே பார்த்த ரகமாக இருந்தாலும் வசனம்தான் தூக்கி நிறுத்துது.  சாதாரண காட்சிலயும் எதாவது காமெடி வசனங்களை வச்சி சிரிக்க வச்சிருக்காங்க. உதாரணமா கலெக்டர் பாண்டிய ராஜன் பக்கத்துல நிக்கிற போலீஸ்கிட்ட “எதுவும் ப்ரச்சனை வரமா பாத்துங்குங்க சார்” ன்னு சொல்ல உடனே அந்த போலீஸு “சார் இவய்ங்க கிட்ட ப்ரச்சனைவ் வராமல்லாம் பாத்துக்க முடியாது. ப்ரச்சனை வந்ததுக்கு அப்புறம் வேணா பாத்துக்கலாம்” ங்குறாரு.  ஒரு காட்சில சூரி ரொம்ப நேரமா ஒரு எலும்ப உறிஞ்சிட்டு “என்ன ஒண்ணுமே வரல”ன்னு சொல்ல “வராது பங்காளி.. ஏன்னா அது நா உறிஞ்சிட்டு போட்டது” ம்பாரு காளி வெங்கட்.

வில்லனாக முனீஷ்காந்த். வில்லன்னு சொல்றதுக்கு பதிலா படத்துக்கு இன்னொரு காமெடியன்னு சொல்லனும் அவர. செம பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி. ராதாரவி எப்பவும்போல அவர் கேரக்டர பக்காவ பன்னிருக்காரு. ஒரு சீன்ல அந்த வெள்ளைக்காரர பாத்து “இட்லி ஈட்டாச்சா?” ன்னு கேக்குறப்போ தியேட்டரையே சிரிக்க வைக்கிறாரு. விமலோட அப்பாவா வர்ற கு.ஞானசம்பந்தத்தையும், அஞ்சலி அப்பாவா வர்ற ஜெயப்பிரகாஷையும் இன்னும் நல்லா யூஸ் பன்னிருக்கலாம். எதோ பத்தோட பதினொன்னா வந்துட்டு போறாங்க. விமல் தங்கச்சியா வர்ற சீரியல் புள்ளை சற்று டொம்மை போல இருக்கு. இன்னும் கொஞ்சம் நல்ல புள்ளையா போட்டுருக்கலாம்.

முன்னாலயே சொன்னமாதிரி விமல இந்த அளவுக்கு யூஸ் பன்னதும் சரி இந்த அளவுக்கு இம்பார்ட்டன்ஸ் குடுத்து எடுத்த படமும் இதுவாத்தான் இருக்கும். ஆள் செமையா இருக்காரு. ஆனா என்ன டயாலாக் டெலிவரிலதான் எந்த முன்னேற்றமும் இருக்கமாதிரி தெரியல.

ரகுநந்தன் இசையில அஞ்சி பாட்டுமே நல்லாருக்கு. ”வந்தாரு வந்தாரு மாப்புளை சிங்கம்” பாட்டும் “எதுவுமே தோணல” பாட்டும் செம பிக்சரைசேஷன். “ஒருவாட்டி உனப்பாத்து” பாட்ட முழுசா போட்டுருக்கலாம். நிறைய காட்சிகள் கலர்ஃபுல்லா இருக்கு.

காதலும் கடந்து போகுமோட கம்பேர் பன்னும்போது நிறைய காட்சிகள்ல மாப்ள சிங்கம் ஆடியன்ஸ எங்கேஜ் பன்னி வச்சிருந்துச்சி. மொத்தத்துல எதப்பத்தியும் யோசிக்காம ரெண்டு மணி நேரம் நல்லா சிரிக்க வைக்கிற படம் தான் மாப்ள சிங்கம்.  



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...