Monday, June 27, 2016

வீரம்னா என்னன்னு தெரியுமா?!!


Share/Bookmark
ஒரு வருஷம் முன்னால ஒரு ATM ல பணம் எடுத்த ஒரு பொண்ண தலையில வெட்டி ஒருத்தன் பணத்த புடுங்கிட்டு போன ஒரு வீடியோவ பாத்தோம். ஆறு மாசத்துக்கு முன்னால அண்ணா நகர் சூப்பர் மார்க்கெட்டுக்குள்ள புகுந்து அங்க வேலை பாக்குற பொண்ணை ஒருத்தன் கத்தியால குத்திக் கொல்லுற வீடியோவயும் பாத்தோம். ஒவ்வொரு காலகட்டத்துலயும் வெவ்வேறு சூழல்ல இந்த மாதிரி உயிரோட மதிப்பு தெரியாத சைக்கோக்கள் உருவாகிக்கிட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு தடவயும் இந்த மாதிரி சம்பவங்கள் எதிர்கட்சிகள் ஆளும்கட்சியை சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு பழி சொல்றதுக்கும், சில வலைத்தள உத்தமர்களுக்கு ரெண்டு நாள் பொழுது போக்குறதுக்கு மட்டுமே பயன்படுதே வேற எதுக்கும் இல்லை.

சமூக வலைத்தளங்கள் எதை உருவாக்கியிருக்கோ இல்லையோ நிறைய போலி முகமூடிகளை நிச்சயமா உருவாக்கியிருக்கு. நிதர்சனம் என்ன என்பதை மறந்து வீட்டுல உக்காந்துகிட்டு என்ன வேணாலும் பேசலாம்ங்குற நிலமைதான் இப்பல்லாம். ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு மட்டுமே சமூக அக்கரை, சக்கரையெல்லாம் இருக்கமாதிரியும் மத்தவனுங்கல்லாம் மனிதாபிமானம்னா என்னன்னு கூட கூடத் தெரியாத அற்பப் பதர்களாகவும் தான் நினைச்சிக்கிட்டு இருக்காய்ங்க.  நங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல ஸ்வாதி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட வெறிச்செயலுக்கு வழக்கம் போல நமது போராளிகளின் ரியாக்‌ஷன தான் நா சொல்ல வந்தது.

நுங்கம்பாக்கத்துல நடந்தது ஒரு கொடூரச் செயல்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை. இப்பவரைக்கும் கொலை பன்னவன கண்டுபுடிக்கல. ஸ்டேஷன்ல CCTV கேமரா இல்லை. வழில இருந்த வேற ஒரு கேமரா ஃபுட்டேஜ வச்சித்தான் தேட ஆரம்பிச்சிருக்கானுங்க. போதிய பாதுகாப்பு, கண்காணிப்பு வசதிகள் இல்லைன்னு அரசாங்கத்த திட்டுறீங்க.. திட்டுங்க… அதுக்கெல்லாம் பொங்குறதுல தப்பே இல்லை.

ஆனா அங்க நின்ன மக்கள் அவன புடிக்கலைன்னும், சுவாதிய காப்பாத்தலைன்னும், “நா மட்டும் அங்க இருந்துருந்தா என்ன பன்னிருப்பேன்னு தெரியுமா?” ன்னும் அவனவன் அளந்து விட்டுக்கிட்டு இருக்கானுங்க. “முதுகெலும்பு இல்லாமல் இவர்களைப் போல் வாழ்வதை விட சாவதே மேல்” “கொலை செய்தவனை விட இவர்கள்தான் பாவிகள்” ன்னு லைட்டா எழுதத் தெரிஞ்சவன் கூட எதுகை மோனைல திட்டிக்கிட்டு இருக்கானுங்க. அதுவும் குறிப்பா சென்னையில இருக்கவன்லாம் தொடை நடுங்கிகளாம். இவனுங்க இருந்தா கிழிச்சிருப்பானுங்களாம்.

நா தெரியாமத்தான் கேக்குறேன் சென்னைய விடுங்க. சென்னை தவிற தமிழ்நாட்டுல இதுவரைக்கும் எத்தனை தடவை இந்த மாதிரி பொது இடங்கள்ல மனிதர்களை வெட்டிக் கொல்லுற சம்பவங்கள் நடந்துருக்கு. அதுல இதுவரைக்கும் எதாவது ஒரு சம்பவமாவது பொதுமக்களால தடுக்கப்பட்டுச்சின்னு நாம படிச்சிருக்கோமா? இல்லவே இல்லே. எந்த ஊரா இருந்தாலும் எந்த நாடா இருந்தாலும் இருந்தாலும் இதே நிலமைதான்.

அதிகாரத்துல இருக்க போலீஸ்காரங்களே சட்டக்கல்லூரில ஒருத்தனை போட்டு நாலு பேரு கம்பியால அடிக்கும்போது வேடிக்கைதான பாத்துக்கிட்டு இருந்தாங்க. பின்ன சாதாரண பொதுமக்கள் என்ன பன்னுவாங்க. சரி ஸ்வாதிய கொலை பன்ன இடத்துல சுவாதியோட அப்பாவே நின்னுருந்தாலும் அவரால என்ன பன்னிருக்க முடியும்னு நினைக்கிறீங்க. அதிகபட்சம் அந்தப் பொண்ணை உடனடியா ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போக முயற்சி பன்னிருப்பாரே தவிற கொலை பன்னவன புடிக்கவோ தடுக்கவோ முயற்சி பன்னிருப்பாரான்னு கேட்டா கண்டிப்பா இருக்காது.

அங்க இருந்த மக்கள் கோழைகளாம். கொலை பன்னவன துரத்திப்பிடிக்க துப்பில்லாதவங்களாம். வீரம்ன்னா என்ன? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதா.. சத்தியமா இல்லை.. Responsibility இல்லாம இருக்கதுக்குப் பேருதான் இப்பல்லாம் வீரம். யாரு ஒருத்தன் அவனப் பத்தியோ அவன நம்பியிருக்க குடும்பத்தப் பத்தியோ கவலைப்படாம எல்லாத்துலயும் முன்னால நிக்கிறானோ அதத்தான் நம்ம இப்பல்லாம் வீரம்னு சொல்றோம்.

அங்க நின்ன எல்லாருக்கும் ஒரு குடும்பம் இருக்கு. இண்டெர்நெட்ல நியூஸ் பாத்து தெரிஞ்சிக்கிட்ட உங்களுக்கே அந்த கொலைகாரன் மேல இவ்வளவு கோவம் இருக்கும் போது நேர்ல பாத்தவங்களுக்கு இல்லாம இருக்குமா? ஒரு பொண்ணை அதுவும் இத்தனை பேர் இருக்க இடத்துல முகத்துல வெட்டி கொல்லுதுன்னா அது மனுஷ ஜென்மமாவா இருக்கும்?

ஆனா இன்னும் ஒரு விஷயத்த நம்ம யோசிக்கனும். இதே சென்னையா இல்லாம ஒரு தமிழ்நாட்டுல வேற எதாவது ஒரு கிராமத்துல இப்படி ஒரு தனிமனிதன் ஒரு பெண்ணை தாக்கிட்டோ, கொலை பன்னிட்டோ அவ்வளவு சீக்கிரத்துல தப்பிக்க முடியாது. அட்லீஸ் அவனப் பிடிக்கிறதுக்காவது முயற்சி செஞ்சிருப்பாங்க. ஆனா சென்னையில அப்படி எதுவுமே நடக்கல. ஏன்?

ஒரு தனிமனிதனைப் பொறுத்த அளவு பலம்ன்னா என்ன? உடல் அளவுல அவன் எவ்வளவு பலசாலியா இருக்கான்ங்குறது பலம் இல்லை. உடல் அளவுல எவ்வளவு பலசாலியா இருந்தாலும் அதிகபட்சம் ரெண்டு மூணு பேர சமாளிக்க முடியுமா? அவ்வளவுதான். உண்மையா ஒரு மனிதனோட பலம்ங்குறது அவனுக்கு ஒண்ணுன்னா எத்தனை பேர் அவனுக்காக வந்து முன்னால நிப்பாங்கங்குறதப் பொறுத்துதான் இருக்கு..

ஒரு கிராமத்த எடுத்துக்கிட்டா ஒரு தனிமனிதன் கிட்டத்தட்ட மொத்த கிராமத்துக்குமே பரிட்சையமான ஆளா இருப்பான். அவனுக்கு ஒரு பிரச்சனைன்னா “டேய் நம்ம ஊர்காரன எவனோ அடிச்சிட்டாண்டோய்” ன்னு அந்த ஊரே வரும். இல்லை அவனோட ஜாதிக்காரங்களாவது வருவாங்க. அவன் எதாவது கட்சில இருந்தா அந்த கட்சிக்காரனுங்க வருவாங்க. அட்லீஸ்ட் அவன் தெருவுல இருக்கவனுங்களாவது வருவானுங்க. எதாவது ஒரு வகையில எதோ ஒரு மக்கள் கூட்டத்துலருந்து நமக்கு சப்போர்ட் இருக்கும். ஒருத்தனுக்குப் பின்னால இருக்க அந்த சப்போர்ட் தான் அந்த தனி ஆளோட வீரம்.

ஆனா அதே வேற சென்னையில வந்து நம்ம வாழத் தொடங்கும்போது நம்ம தனிமைப் படுத்தப்படுறோம். நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம். நமக்குன்னு தனியா ஒரு சமுதாயம் இங்க கிடையாது. நமக்கு ஒண்ணுன்னா ஓடிவர்ற மக்கள நம்ம இங்க சம்பாதிக்கல. அடுத்த வீட்டுக்காரனோட பேர் என்ன, அவன் என்ன செய்யிறான்னு தெரியாமயே பலவருஷமா குடியிருக்கவங்கல்லாம் இருக்காங்க. ”அடுத்தவன் பிரச்சனை நமக்கெதுக்கு, பொழைக்க வந்த இடத்துல நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம்” ங்குறதுதான் பெரும்பான்மையானவங்களோட மனநிலை.

நிறைய சமையங்கள்ல நீங்களே இத ஃபீல் பன்னிருப்பீங்க. காலேஜ் படிக்கும்போது உள்ளுக்குள்ள ஒரு அசாத்திய தைரியம் இருக்கும். என்ன ப்ரச்சனைன்னாலும் பாத்துக்கலாம். நம்ம காலேஜ் பசங்க இருக்காங்க.. நமக்கு ஒண்ணுன்னா அவனுங்க சும்மா விடமாட்டானுங்கங்குற ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனா காலேஜ் முடிச்சப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகி இப்பல்லாம் ஒருத்தன்கிட்ட வாய்சண்டை போடனும்னா கூட யோசிச்சி தான் போட வேண்டியிருக்கு. இத நா மட்டும் இல்லை நிறைய பேர் ஃபீல் பன்னிருப்பீங்க.

சென்னைன்னாலே அப்படித்தான். அங்க இருக்கவங்க யார் கூடயும் பேசமாட்டாங்க. தேவையில்லாம யார் கூடவும் பழக்கம் வச்சிக்கிட்டா அது பிரச்சனைதான்னு ஆரம்பத்துலருந்தே சொல்லி சொல்லி மொத்த ஊருமே இப்ப அப்டியே ஆகிப்போச்சு. சென்னையில இருக்க 70% மக்கள் தமிழ்நாட்டோல பிற பகுதிகள்லருந்து வந்து வசிக்கிற வந்தேறிங்க தான். ஆனாலும் நம்ம சென்னை மக்கள்லாம் மோசம்னு தான் சொல்றோம். 

யாருமே கஷ்டப்படுறவங்களுக்கு உதவக் கூடாதுன்னு நினைக்கிறதில்லை. எங்க உதவி செய்யப்போய் நமக்கே அது வில்லங்கமா மாறிடுமோன்னு தான் நினைக்கிறாங்க. இன்னிக்கு எதுவும் செய்யாம நின்ன அதே மக்கள்தான் 6 மாசம் முன்னால வெள்ளத்துல சிக்கினப்போ ஒதுங்கிப் போகாம ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சிகிட்டவங்க. இன்னிக்கு அந்தப் பொண்ணை யாரும் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போகலைன்னு எல்லாரும் கொதிக்கிறாய்ங்க. ஆக்ஸிடெண்ட் ஆகி உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்க ஒருத்தனை ஆம்புலன்ஸும் போலீஸூம் வர்றதுக்கு முன்னால ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போனாலே என்னென்ன கேள்வி கேப்பாங்கன்னு தெரியும். அப்டி இருக்க, ஒரு க்ரைம் சீன்ல உயிரோட இருக்காங்களா இல்லையான்னு தெரியாத ஒரு பொண்ணை எப்படி தைரியமா நம்மாளுங்க தூக்கிட்டு போயிருப்பாங்க.

இன்னிக்கு சில நடிகை நடிகைகளும், பிரபலங்களும்கூட ஸ்டேஷன்ல நின்ன பொதுமக்களை தரக்குறைவா பேசுறதப் பாக்க முடியுது. ஒருவேளை அவங்க ஸ்பாட்ல இருந்துருந்தா அவங்க செய்ய நினைக்கிறத செஞ்சிருக்கலாம். ஏன்னா நா மேல சொன்னா மாதிரி அவங்க ப்ரபலம்ங்குறதுதான் அவங்களோட தைரியம். அவங்களுக்கு ஒண்ணுன்னா ஒட்டுமொத்த பத்திரிக்கையும் அத கவர் பன்னும். ஆனா ஒரு சாதாரண மனிதனுக்கு அப்படி இல்லை.

என்னிக்கு நமக்கு ஒண்ணுன்னா நாலுபேர் முன்னால வருவாங்கங்குற தைரியம் ஒவ்வொருத்தனுக்கும் வருதோ அப்பதான் இந்தமாதிரி குற்றங்கள தட்டிக்கேக்குற தைரியம் ஒவ்வொருத்தனுக்கும் வரும். ஆனா அப்படி ஒரு நாள் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் இருக்கதா தெரியல. பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Alex said...

VERY NICE SIVA THIS IS MY VIEW ON THIS MURDER
உனக்கு ஒரு உயிர் என்றால் சுலபமாக போய் விட்டதா? நீ ஒரு தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி செய்திருப்பாயா டா? ஒரு பெண்னை இப்படி ஒரு கொலை செய்த உன்னை இந்த அரசாங்கம் தூக்கில் இடவில்லை என்றால் அதை விட கேவலம் வேறு ஏதும் இல்லை. இந்த ரத்த வெறி கொலையின் போது கூட சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சமுகத்தில் தான் நாம் இருக்கின்றோம். நான் அங்கு இருந்திருந்தாலும் அதை தான் செய்து இருப்பேன் காரணம் நாம் என்ன செய்தாலும் நம் காவல் துறையினர் நம்மை ஒரு குற்றவாளியாக தான் பார்பார்கள் நம்மை நீதிமன்றத்திற்க்கும் காவல் நிலையத்திற்க்கும் அலைய வைப்பார்கள் என்ற பயம் தான் நாம் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றோம். அப்படி இல்லாமல் ஒரு தவறு நடக்கும் போது பொதுமக்கள் அந்த தவறு நடக்காமல் இருக்கவோ அல்லது அவனை தடுக்கவோ மக்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவன் அப்படி ஒரு கொலையை செய்யும் போது யாரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். கல்வியுடன் தற்க்காப்பு கலையும் சொல்லி தாறுங்கள் அப்பொழுதுதான் எல்லோரும் தைரியமுடன் எதையும் எதிர்ப்போம். இந்த அரசுக்கு நான் வைக்கிற ஒரு கோரிக்கை அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து அதனை நேரலையில் ஒளிபரப்பும் படி கேட்டு கொள்கிறேன். தவறு செய்வபனுக்கு தண்டனை உடனே கொடுத்தால் மட்டுமே தவறுகள் குறையும்.

Anonymous said...

Well Written.

Anonymous said...

உடுமலை கொலைய ஒரு வரி சேர்க்க மனம் வரவில்லை.👎

முத்துசிவா said...

//உடுமலை கொலைய ஒரு வரி சேர்க்க மனம் வரவில்லை.👎// மனம் வராமல் இல்லை. நான் கூறியிருந்த இரண்டும் நுங்கம்பாக்கம் சம்பவம் போலவே தனிமையில் இருந்த பெண்களை மிரட்டித் தாக்கிய ஆண்கள் தொடர்புடையதால் அவற்றை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

Anonymous said...

யாருமே கஷ்டப்படுறவங்களுக்கு உதவக் கூடாதுன்னு நினைக்கிறதில்லை. எங்க உதவி செய்யப்போய் நமக்கே அது வில்லங்கமா மாறிடுமோன்னு தான் நினைக்கிறாங்க. இன்னிக்கு எதுவும் செய்யாம நின்ன அதே மக்கள்தான் 6 மாசம் முன்னால வெள்ளத்துல சிக்கினப்போ ஒதுங்கிப் போகாம ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சிகிட்டவங்க.

I have this doubt already..When Chennai was affected with Flood, People from all over Tamilnadu sent Support & Relief to Chennaites. But the Question is if a small town like Manamadurai, Thenkasi gets affected like this how many Chennai People will lend their Help? Hell..not even Media will talk about this issue.

I knew this is unrelated to this Topic but I just wanted to say..

Karthi said...

சூப்பர் சிவா. தரம்..

Best Article on this subject...

suresh said...

எல்லாரையும் போல இது உங்களுடைய கருத்து என்று எடுத்து கொள்ளலாம்.. மற்றபடி சிங்கம் பட போலிஸ் ஸ்டேஷன் சீன் உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ? கிராமங்களில் சுயநலம் ரொம்ப கம்மி சென்னையில் அது அதிகம்.. சென்னையில் குறிப்பாக ஏஸி பேருந்தில் கர்பிணி பெண்ணுக்கு எழுந்து இடம் கொடுப்பது அரிதிலும் அருது ஆனால் எந்த கிராமத்திலாவது கர்பிணி பெண் நின்று கொண்டு பயணம் செய்யும் காட்சியை பார்க்க முடியுமா? மதுரையில் இருந்து ஒரு முஉறை என் கர்பிணி மனைவியோடு சென்னை சென்றபொழுது கவனித்த விஷயம்.. சென்னை மக்களின் மீதிருந்த மதிப்பு சுத்தமாக போனது அப்பொழுதுதான்..

யோக்கியன் said...

அனைத்தும் உண்மையிலும் உண்மை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...