ஒரு கதாப்பாத்திரத்த கதாநாயகனா மக்கள் ஏத்துக்கனும்னா அந்தக் கதாப்பாத்திரம் அழகா இருக்கனும்னோ. நல்ல கலரா இருக்கனும்னோ, நல்ல உடல் கட்டுடன் இருக்கனும்னோ எந்த அவசியமும் இல்லை. அவர கதாநாயகனா மக்கள் ஏத்துக்கிறது அந்தப் படத்தோட கதையிலயும் அது சொல்லப்படுற விதத்துலயும்தான் இருக்கு. ஒரு இயக்குனர் நினைச்சா யார வேணானும் இன்னும் சொல்லப்போனா எத வேணாலும் மக்களுக்குப் புடிச்ச கதாநாயகனா மாத்திடலாம். ரஜினி, கமல், அஜித், விஜய்லாம் திரையில கெத்து காமிக்கும்போது எந்த அளவு உற்சாகத்தோட விசில் அடிச்சி பட்த்தப் பாத்தோமோ அதே அளவுக்கு உற்சாகத்தோடதான் நான் ஈ படத்துல ஒரு ”ஈ” செய்யிற சாகசங்களுக்கும் விசில் அடிச்சி பாத்தோம்.
ஒரு ஈய வச்சே இந்த அளவு நம்மாளுங்க கெத்து காமிக்கும்போது, ஒரு மனிதக் குரங்க வச்சி ஹாலிவுட்காரன் எவ்வளவு கெத்து காட்டுவான்? ப்ளானெட் ஆப் த ஏப்ஸ் தொடர் வரிசைப் படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாலருந்தே எடுக்கப்படுது. அதுல கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிச்ச ரீபூட் சீரிஸ்ல மூணாவது மற்றும் கடைசிப் பகுதிதான் இப்ப வெளிவந்துருக்க வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்.
வீடியோ விமர்சனம்
ஒரு ஆய்வுக்கூடத்துல வைத்து சோதனைக்குட்படுத்தப்படும் ஒரு குரங்குக்கு பிறக்குர சீசர் எனும் மனிதக்குரங்கு அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட மருந்தோட எஃபெக்ட்ல மனிதர்களைப் போன்ற அறிவோட வளருது. அடைச்சி வைக்கப்பட்டிருக்க பல மனிதக் குரங்குகளையும் தன்னோட புத்திசாலித்தனத்தால தப்பிக்க வச்சி காட்டுக்கு அழைச்சிட்டுப் போகுது. ”கோபா” அப்டிங்குற பேருள்ள ஒரு ஆர்வக்கோளாறு குரங்கால மனிதர்களுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் பெரிய சண்டை ஆரம்பிக்க, மனிதக் குரங்குகள் அனைத்தும் காடுகள்ல பதுங்கியிருக்கு. இதுதான் முதல் இரண்டு பாகங்கள்ல நடந்த கதை.
அதைத் தொடர்ந்து வந்திருக்கும் இந்த மூணாவது பகுதில, தன்னை நம்பியிருக்க குரங்குளை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறதுக்கு சீசர் முயற்சி செஞ்சிட்டு இருக்க, சீசரோட மனைவியும் மகனும் ராணுவ வீரர்களால கொல்லப்படுறாங்க. கடும் கோபமடைஞ்ச சீசர், தன்னோட மனிதக் குரங்குப் படைகளை பாதுகாப்பான இடத்த நோக்கி இடம் பெயரச் சொல்லிட்டு மனைவி மகனைக் கொன்னவனை பழி வாங்க தனியா புறப்பட, சீசருக்கு பாதுகாப்பா இன்னும் மூண்று குரங்குகளும் சேர்ந்து கிளம்புறாங்க. போற வழியில வாய் பேச முடியாத ஒரு குழந்தையும் இவர்களோட சேர்ந்துக்குது.
துரதிஷ்டவசமா மொத்த குரங்குகளும் ராணுவத்தோட பிடியில மாட்டிக்கிட, அங்கிருந்து சீசர் தன்னோட குரங்குப் படைகளை எப்படி மீட்டு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறார்ங்குறதுதான் இந்தப் படத்தோட கதை. பல தமிழ்ப்படங்கள்ல பாத்து சலிச்ச அதே கதைதான். ஆனா மனுஷங்க மட்டும்தான் பழிவாங்குவீங்களா? மனிதக் குரங்குகளுக்கும் மானம் மாரியாத்தா வெக்கம் வேலாயுதம் சூடு சூளாயுதம் எல்லாம் இருக்குப்பான்னு சொல்ற படம்தான் இது.
மனைவி மகனைக் கொன்னவன பழிவாங்கத் துடிக்கிற அந்தக் கோவம்,, தன்னோட இனம் கஷ்டப்படும்போது அதைத் தாங்க முடியாம தவிக்கிற தவிப்பு, வில்லன் சொல்ற கதையை கேட்டு அவனுக்காக அழுகுற இறக்க குணம்னு ஹீரோ சீசர் குரங்கு முகத்துல காமிச்சிருக்க ஒவ்வொரு வேரியேஷனும் அட்டகாசம். அத குரங்குன்னு சொல்லவே ஒரு மாதிரி இருக்கு. குரங்கு சார்ன்னு கூப்டாக்கூட தகும்.
ஒரு தலைவன்னா எப்படி இருக்கனும்.. தன்னை நேசிக்கிற மக்களுக்காக என்ன செய்யனும்.. அவன நேசிக்கிறவங்க எப்படி மரியாதை வச்சிருப்பாங்கன்னு அத்தனைக்கும் உதாரணம் இந்த சீசர் கேரக்டர்தான். கெத்து காமிக்குது. முதல் பாகத்துல முதல் முதலா சீசர் வாயத் திறந்து பேசுறது, மூணாவது மாடியிலருந்து கீழ போற கார் மேல ஈட்டிய எறிஞ்சிட்டு கெத்தா நிக்கிறது, குதிரை மேல ஏறி கெத்தா வர்றதுன்னு ஏராளமான காட்சிகள் புல்லரிக்க வைக்கும். இன்னும் சொல்லப்போனா இந்த சீசர் குதிரையில ஏறி வர்ற காட்சியத்தான் அப்படியே சுட்டு பவன் கல்யாணோட சர்தார் கப்பர் சிங் படத்துல அவருக்கு இண்ட்ரோ சீனா வச்சிருந்தாங்க.
பர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் முறையில படமாக்கப்படுற இந்த ப்ளாண்ட ஆப் த ஏப்ஸ் படங்கள்ல ஹீரோ சீசர் கேரக்டர்ல நடிக்கிறவரு ஆண்டி செர்கிஸ். லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்துல ஸ்மீகல் கேரக்டர்ல நடிச்சாரே அவரே தான்.
இப்ப வெளிவந்துருக்க இந்தப் பகுதில முதல் இரண்டு பகுதிகளைப் போல சண்டைக் காட்சிகள் அதிகம் வைக்காம, கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் காமெடின்னு எல்லாம் சரிபங்கா கலந்து எல்லா வித்துலயும் நல்ல படமா, எல்லாரும் ரசிக்கிற மாதிரி படமா குடுத்துருக்காங்க. அதுவும் “Bad Ape”ங்குற பேர்ல வர்ற ஒரு வயசான குரங்கு பன்ற லூட்டிகள் அதகளம். சில காட்சிகள் கண்கலங்கவும் விட்டுட்டாங்க.
மொத்ததுல அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில வந்திருக்க இந்த வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ் படத்த நிச்சயம் தவற விட்ராதீங்க.
இரண்டாவது பாதியில மொத்தக் குரங்குகளும் வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு சித்ரவதைய அனுபவிக்கிறதப் பாக்கும்போது… கொஞ்சம் இருங்க.. இத எங்கயோ நாங்க முன்னாலயே பாத்துருக்கோமே… அடேய்.. இது எங்க செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படம்ல? அடப்பாவிகளா.. கார்த்திக்குப் பதிலா குரங்கப் போட்டு அப்புடியே எடுத்து வச்சிருக்கீங்களே.. அதுவும் படம் முடியிறப்ப வர்ற மியூசிக் அப்டியே ஆயிரத்தில் ஒருவன். விர்ஜின் மியூசிக் டைரக்டர் சாபம் உங்கள சும்மா விடாதுசார்.
3 comments:
குரங்கு சார் .... கமெண்ட் செம சார்
video review la pure tamil la lam pesa venam bro. normal ah ve pesunga
Therefore, people direct more time online.
Post a Comment