Saturday, July 22, 2017

விக்ரம் வேதா – தாறுமாறு!!


Share/Bookmark
எந்த ஒரு இயக்குனர்கிட்டயுமே அவரோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பார்க்குறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா காட்சிப்படுத்துதல். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் ஒரு தரம் இருக்கும். அந்தத் தரத்துலதான் நமக்கு படம் குடுப்பாங்க. திருட்டுப் பயலே எடுத்த சுசி கணேசன் பெரிய பட்ஜெட்ல கந்தசாமி எடுத்தாலும் அது சுசி கணேசனோட தரத்துல தான் இருக்குமே தவிற ஷங்கரோட தரத்தில் இருக்காது. ஆனால் அந்தத் தரத்தைக் கொண்டு வர முடியும். அதற்கு மிகக் கடின உழைப்பும், சூரி சொல்ற டீ டிக்காஷனும் வேணும். அப்படி நாம் பார்ப்பது மிகச் சிலரைத்தான். அந்த மிகச் சிலர்ல இப்ப இந்த புஷ்கர்-காயத்ரி சேர்ந்திருக்காங்க.

இந்தப் படத்தோட இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரியப் பத்தி சொல்லனும்னா இதுக்கு முன்னால ரெண்டு படம் எடுத்துருக்காங்க. முதல் படம் ஆர்யா நடிச்ச ஓரம் போ. வழக்கமான தமிழ் சினிமாக்கள்லருந்து மேக்கிங்ல கொஞ்சம் வித்யாசமான படம். ஓரளவு ஓக்கேயான படம். அடுத்து மிர்ச்சி சிவாவ எடுத்து ’வ’ குவாட்டர் கட்டிங்ன்னு ஒரு படம் எடுத்தாங்க. அவன் அவன் ரத்த வாந்தி எடுத்து தியேட்டர விட்டு வெளிய ஓடிவந்தாங்க. அப்படி இருக்க சுமார் ஏழு வருசம் கழிச்சி விக்ரம் வேதா படத்தோட வந்துருக்காங்க.

தவசி படத்துல வடிவேலுக்கிட்ட ஒரு லூசு சொல்லுமே “சார் நா முன்ன மாதிரி இல்லை சார்… ரொம்ப திருந்திட்டேன்.. பாருங்க.. சட்டையெல்லாம் கிழியாம போட்டுருக்கேன்”ன்னு. அதே மாதிரிதான் இந்தப் படத்து ட்ரெயிலரப் பாக்கும்போது புஷ்கர்-காய்த்ரியும் அதே ஸ்லாங்குல நாங்க ரொம்ப ”திருந்திட்டோம் சார் பயப்படாம தியேட்டருக்கு வாங்க சார்”ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சி. என்ன இருந்தாலும் மாதவன் – விஜய் சேதுபதி காம்பினேஷனுக்காகவாது படம் பாத்தே ஆகனும்னு போனோம். எதிர்பார்த்தத விட படம் பல மடங்கு சூப்பர். 



ஜெயம் ”ராஜா”வப் பத்தி ஒரு பொதுவான கருத்து இருந்துச்சி. அதாவது அவர் ரீமேக் படங்களுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வருவாரு. அவருக்கு சொந்த ஸ்க்ரிப்டெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு. ஆனா திடீர்ன்னு யாருமே எதிர்பாக்காத மாதிரி தனி ஒருவன்னு ஒரு சூப்பர் படத்தக் குடுத்து அசத்துனாரு. அதே மாதிரிதான் இந்த புஷ்கர்-காயத்ரியும். இவங்க எடுத்தா ஓரளவு சுமாராத்தான் இருக்கும் அப்டிங்குற பிம்பத்த உடைச்சி ஒரு செமை எண்டர்டெய்னரக் குடுத்துருக்காங்க

வெறும் கேங்க்ஸ்டர்- போலீஸ் ஆடுபுலி ஆட்டம் மாதிரி இல்லாம அதுலயே கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து வச்சி, அங்கங்க சில நகைச்சுவைகளையும் தூவிவிட்டு ரொம்ப அருமையான ஒரு படத்த குடுத்துருக்காங்க.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் மாதவனும் விஜய்சேதுபதியும். மாதவன இறுதிச்சுற்று படத்துல பாத்தப்போ நானும் என் நண்பர் ஒருத்தரும் பேசிக்கிட்டு இருந்தோம். “மச்சி படத்துக்கு பேரு இறுதிச்சுற்று இல்லடா. மாதவனுக்குத்தான் இறுதிச்சுற்றுன்னு பேர் வச்சிருக்கானுங்க. இன்னும் ஒரு சுத்து பெருத்தா வெடிச்சிருவாரு போல”ன்னு கிண்டல் பன்னிட்டு இருந்தோம். ஆனா ஆளு அப்டியே உடம்பக் கம்மி பண்ணி போலீஸ் கெட்டப்புக்கு ஏத்த மாதிரி செம்ம ஃபிட்டா இருக்காரு.

மொத சீன்ல மாதவனப் பாத்தப்போ என்னடா இது ட்ரிம் பன்னிட்டு இருக்கும்போது பாதிலயே எந்திரிச்சி வந்துட்டாரான்னு டவுட்டாகிப்போச்சு. அப்புறம்தான் தெரிஞ்சிது அது இஸ்டைலுன்னு. இத்துணூண்டு மூஞ்சிக்குள்ள இருக்க கொஞ்சூண்டு மீசை தாடிய கெட்டப் சேஞ்சுங்குற பேர்ல எத்தனை விதமாத்தான் அவஙகளும் டிசைன் பன்ன முடியும்?

விஜய் சேதுபதி அதுக்கும் மேல. பட்டையக் கெளப்பிருக்காரு. அவருக்குண்ணே அளவெடுத்து செஞ்ச மாதிரியான கேரக்டர். வியாசர்பாடி ஸ்லாங்குல பூந்து விளையாடுறாரு. அவருக்கே உரித்தான ஸ்டைல்ல அந்த “அய்யோயோ.. அள்ளு இல்லை”ன்னு சொல்லும்போது தியேட்டரே குலுங்குது.  அதுவும் அந்த தீம் மியூசிக்கும் அதுக்கும் இண்ட்ரோவெல்லாம் தாறுமாறு.

வரலட்சுமி ஒரு கேரக்டர் பன்னிருக்காங்க. ஒரு சீன்ல விஜய் சேதுபதி, அவரோட தம்பி, வரலட்சுமி மூணு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க.. தீடீர்னு விஜய் சேதுபதி வெளில போயிருவாரு. ஆனாலும் அவர் குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா வரலட்சுமி பேச ஆரம்பிச்சிருச்சி.. ஆத்தாடி.

ரொம்ப சிரத்தை எடுத்து, ரொம்ப கவனமா ஸ்க்ரிப்ட் பன்னிருக்காங்க. ஒவ்வொரு காட்சியும் படத்துக்கு தேவையான ஒரு தகவல தாங்கி நிக்கிது. ஆரம்பத்துல அந்தக் காட்சிகளை சும்மா நாம கடந்து பொய்ட்டாலும் கடைசில உண்மை விளக்கப்படும்போது எல்லா காட்சிக்கும் உள்ள தொடர்பு ரொம்ப ஆச்சர்யப்படுத்துது.

குறிப்பா வசனங்களும், மாதவன், சேதுபதியோட வசன உச்சரிப்புகளும் செம. ”சார் என் தங்கச்சிக்கு மாப்ள பாத்துருக்கேன்.. மாப்ள இஞ்சினியர்”ன்னு ஒருத்தர் சொன்னதும் “அதுல என்ன அவ்வளவு பெருமை?” என மாதவன் கேட்க தியேட்டரே கைதட்டல்ல அதிருது. ஒரே இஞ்ஜினியர்கள் சூழ் உலகு... “சார்… சார்.. ஒருத்தன் ஒரு பொருளை அங்க தொலைச்சிட்டு இங்க வந்து தேடிக்கிட்டு இருந்தானாம். ஏண்டா அங்க தொலைச்சிட்டு இங்க வந்து தேடுறன்னு கேட்டதுக்கு அங்க ஒரே இருட்டா இருக்கு இங்கதான் வெளிச்சமா தேடுறாதுக்கு நல்ல வாட்டமா இருக்குன்னு சொன்னானாம்”னு விஜய் சேதுபதி அவர் ஸ்லாங்குல சொன்ன ஒரு உதாரணத்தக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.

சாம் என்பவரோட இசையில பாடல்கள் சுமார் ரகம். ஆனா பின்னணி இசை பட்டையக் கிளப்பிருக்கு. காட்சிகளைப் படமாக்கிய விதம், எடிட்டிங், காட்சிகளோட வரிசைன்னு எல்லாமே ரொம்ப நல்லா பன்னிருந்தாங்க. 

மொத்தத்துல எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் எண்ட்ர்டெய்னர். மிஸ் பன்னிடாதீங்க.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...