Monday, January 15, 2018

ஸ்கெட்ச் – யாருக்கு?


Share/Bookmark
ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு இமேஜ் உருவாக்கி வச்சிருக்கோம். விக்ரம பொறுத்த அளவு அவர் படம்னாலே வித்யாசமான படங்களா இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு உடல வருத்திக்கிட்டு மற்ற ஹீரோக்களக் காட்டிலும் தன்னோட படங்கள வித்யாசப்படுத்த எதாவது செய்வாரு அப்டிங்குற நம்பிக்கை நிறைய பேர்கிட்ட இருக்கு. விக்ரம எந்த கெட்டப் சேஞ்சும் இல்லாம நார்மலா பாக்குறதுக்கே இப்பல்லாம் நமக்கு அப்நார்மலா இருக்கு. அந்த நம்பிக்கைய இந்த ஸ்கெட்ச் காப்பாத்திருக்கா இல்லையான்னு பாப்போம்.

போன வருஷம் கவுதம் கார்த்திக் நெப்போலியன் நடிப்புல முத்துராமலிங்கம்னு ஒரு படம் வந்தத அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துருக்க மாட்டீங்க. அது ஒரு சீன்ல போலீஸ் ஊருக்குள்ள வந்து நெப்போலியன்கிட்ட “உங்க பையன் தானே முத்துராமலிங்கம்?”ன்னு கேப்பானுங்க. அதுக்கு உடனே நெப்போலியன் “ இந்த ஊர்ல பொறந்த எல்லாருக்குமே முத்துராமலிங்கம்னா சிங்கம்னு தெரியும்……. ஆமா என் பையந்தான் முத்துராமலிங்கம்”ன்னு சொல்லுவாறு. ஏன்யா அந்தாளு கேட்ட்துக்கும் நீ சொல்றதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? உன் பையனான்னு கேட்டா ஆமா இல்லைன்னு சொல்றத விட்டுபுட்டு வெறிநாய் கடிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கன்னு தோணுச்சி.

அதே மாதிரி ஒரு கண்றாவியான சிரிப்பு வரவழைக்கக் கூடிய ஒரு வசனத்த தான் இந்த ஸ்கெட்ச் படத்துல விக்ரமுக்கு பஞ்ச் டயலாக்கா வச்சிருக்காங்க. ”இந்த ஸ்கெட்ச்சு ஸ்கெட்ச்சு பன்னா ஸ்கெட்ச்சு மிஸ்ஸே ஆகாது. அப்டி மிஸ்ஸானா மட்டும் சொல்லு பிசிறே இல்லாம செஞ்சி தர்றேன்” இதான் அந்த உலக மஹா பஞ்ச். ஒரு வேலை சினிமாவுல இல்லாம நிஜத்துல விக்ரம் அவரோட ஓனர்கிட்ட போய் இந்த வசனத்த சொல்றாருன்னு வைங்க.. என்ன நடந்துருக்கும்? கீழ பாருங்க.

விக்ரம் :இந்த ஸ்கெட்ட்சு ஸ்கெட்ச்சு போட்டா ஸ்கெட்ச்சு மிஸ்ஸே ஆகாது

ஓனர் : அப்டி மிஸ்ஸாச்சுன்னா?

விக்ரம் : மிஸ்ஸாச்சுன்னா சொல்லுங்க பிசிறே இல்லாம செஞ்சி தர்றேன்.

ஓனர் : அப்ப மொத தடவ ஏன் பிசிறே இல்லாம செய்யல..

விக்ரம் : இல்லங்க.. பிசிறு இல்லாம தான் செஞ்சேன். ஆனா மிஸ்ஸாயிருச்சி

ஓனர் : அப்ப உனக்கு ஒழுங்கா ஸ்கெட்ச்சு போட தெரியல… 

விக்ரம் : அட.. இந்த ஸ்கெட்ச்சு ஸ்கெட்ச்சு பன்னா மிஸ்ஸே ஆகாதுங்க…

ஓனர் : அப்புறம் ஏண்டா மிஸ்ஸாச்சு.

விக்ரம் : அட மிஸ்ஸாச்சுன்னாதான் பிசிறே இல்லாம செஞ்சி தர்றேன்னு சொல்றேன்ல..

ஓனர் : அப்ப ஏன் மொத தடவயே பிசிறே இல்லாம செய்யல…
(திரும்ப முதலிலிருந்து படிக்கவும்)  

கண்டிப்பா இதே மாதிரி நேர்ல ஒருத்தன்கிட்ட சொன்னா பேசிப் பேசி கடைசில வெட்டுகுத்துல முடிஞ்சி போகும்.

”ஸ்கெட்ச்” அப்டிங்குற டைட்டில் ரிலீஸான உடனே , ”சரி பயங்கரமா எதோ ப்ளான் பன்னப்போறாரு.. இது ஒரு பிரில்லியண்ட் மூவி போல”ன்னு நினைச்சிட்டு இருந்தேன். படத்தோட பாட்டு ரிலீஸாச்சு. “தவுலோட் வண்டி. மெட்டா வண்டி கில்பர்ட் வண்டி ஆனாலும் ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு தூக்குவோம்”ன்னு பாடல் வரிகள். சரி விக்ரம் வண்டி தூக்கப்போறாரு போல. அத செமையா ப்ளான் பண்ணி பன்னுவாருன்னு ஓரளவுக்கு ஆர்வம் இருந்துச்சி.

படத்துக்கு போய் உக்காந்தா டியூ கட்டாத வண்டிய சீஸ் பன்ற வேலை. ”யோவ்.. ஓனர் வண்டிய நிறுத்திட்டு ஒண்ணுக்கு போறப்ப பொத்துனாப்புல போய்  வண்டிய எடுத்துட்டு வர்றதுக்குதான் “ஸ்கெட்ச்சு” “ஸ்கெட்ச்சு”ன்னு பில்டப் பண்ணீங்களா? டைட்டிலுக்கு உண்டான மரியாதையே போச்சேடா உங்களால. ஸ்கெட்ச்சுன்னு பேர் வச்சதுக்காவது ஆசைக்கு ஒரு ஸ்கெட்ச்சாவது போடுவார்னு நினைச்சேன். படம் முடியும்போதுதான் தெரிஞ்சிது… “தம்பி… ஸ்கெட்ச் வில்லன்களுக்கு இல்ல.. உங்களுக்குத்தான்” அப்டின்னு ஜிகர்தண்டா பாபி சிம்ஹா மாதிரி ஆடியன்ஸ பாத்து சொல்ற மாதிரி இருந்துச்சி.

சரி ரொம்ப லெந்த்தா போகுது.. மத்தபடி படம் எப்டி இருக்குன்னு பாப்போம். ரொம்ப லைட்டான , பெரிய அளவுல எந்த இம்பேக்ட்டயும் குடுக்காத திரைக்கதை. நல்லாருக்குன்னு சொல்ல முடியாட்டாலும் மொக்கையா இருக்குன்னு சொல்லாத அளவுக்கு டீசண்டா போரடிக்காம படம் நகருது.  விக்ரம் கூட வர்ற “இடிதாங்கி”யோட ஒரு சில ஒன் லைன் காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆயிருக்கு.

பழைய படங்கள்ல பாத்தோம்னா சண்டைக் காட்சிகள் வைக்கிறதுக்கு சீன் இல்லைன்னா அத ஃபுல்ஃபில் பன்ற மாதிரி ஒரு டெம்ளேட் சீன் இருக்கு. ரோட்டுல போற ஒரு புள்ளைய நாலு ரவுடிங்க கிண்டல் பன்னுவாங்க. உடனே ஹீரோவுக்கு கோவம் வந்து அவனுங்கள பொறட்டி எடுத்து நாலு அட்வைஸூம் பண்ணி அனுப்புவாறு. அப்ப அடிவாங்குறவனுங்களுக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹீரோவுக்கு சண்டை போடத் தெரியும்னு நம்மளுக்கு காட்டுறதுக்காக வாலண்டியரா வந்து அடிவாங்கிட்டு போறவனுங்க. இந்தப் படத்துலயும் அதே பழைய ஃபார்முலாவ வச்சி சண்டைக்காட்சிகள வலுக்கட்டாயமா புகுத்திருக்காங்க.

ஹீரோயின் தமன்னா வெள்ளைகே வெள்ளையடிச்ச மாதிரி அவ்வளவு வெள்ளையா இருக்காங்க. வழக்கமா ஹீரோயின அழகா காட்ட ஒரு டம்மி பீஸ ஹீரோயினுக்கு பக்கத்துல எப்பவும் சுத்த விட்டுருப்பாங்க. (இது படத்துல மட்டும் இல்லை. நிஜத்துலயும் புள்ளைங்க யூஸ் பன்ற டெக்னிக்தான்) ஆனா இந்தப் படத்துல அது கொஞ்சம் உல்டாவாகிருச்சி. தமன்னாவ விட தமன்னாவுக்கு தோழியா வர்ற புள்ளைச் செம்மை அழகா இருக்கு. உண்மையிலயே அத ஹீரோயினா போட்டுருக்கலாம். ஒரு தமன்னா ஃபேனா இருந்து இத சொல்ல என் இதயம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்யிது. இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகனும்.

ரொம்ப லைட்டா போற திரைக்கதை ரெண்டாவது பாதில கொஞ்சம் சூடு பிடிச்சி ஒரு த்ரில்லர் கதையா மாறுது. கடைசில யாருமே எதிர்பாக்காத நேரத்துல பட்டுன்னு ஒரு கருத்த சொல்லி படத்த முடிச்சிடுறாங்க. கொஞ்சம் நம்ம அசந்தா கழுத கருத்த சொல்லிப்புறானுங்களே.

விக்ரம் ஆள் சூப்பரா இருக்காரு. நடிப்புக்கெல்லாம் பெரிய ஸ்கோப் இல்லை. அசால்ட்டா பண்ணிட்டு போயிடுறாரு. இந்தப் படத்துல விக்ரம் நடிச்சதும் ஒண்ணுதான் விக்ரம் ப்ரபு நடிச்சாலும் ஒண்ணுதான். அந்த மாதிரியான ஸ்க்ரிப்ட். விக்ரமுக்கான தேவையே இந்த ஸ்க்ரிப்டுல இல்ல. சமீபத்துல வந்த நெருப்புடா படத்துக்கும் இந்தப் பட்த்துக்கும் கூட சில ஒற்றுமைகள் இருக்குன்னா பாத்துக்குங்களேன். கேமாரா ரொம்ப நல்லாருந்துச்சி. இயக்குனர் விஜய் சந்தரோட முதல் முயற்சில ஓரளவுக்கு தேறிருக்கார். திரைக்காதைய இன்னும் சுவாரஸ்யமா அமைச்சிருக்கலாம். 

தமனோட இசையில இண்ட்ரோ சாங் சூப்பர். தியேட்டர் எஃபெக்டுல அந்த பாட்ட கேக்க சூப்பரா இருந்துச்சி. மற்ற படி பெருசா எங்கயுமே கவரல. “ஸ்கெட்ச் போட்டா… ஸ்கெட்ச்சு போட்டா”ன்னு ஒரு தீம் மியூசிக். ”சரி ஸ்கெட்ச் போட்டா சொல்லி அனுப்புங்கடா.. வந்து பாத்துட்டுப் போறோம்”னு நினைச்சிட்டு இருந்தேன்.   


மற்றபடி எங்கயுமே படம் பெருசா போரடிக்கல. டீசண்டவே போகுது. பண்டிகை காலத்துல குடும்பத்தோட ஜாலியா ஒரு டைம் பாத்துட்டு வரலாம். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Anonymous said...

thaana serndha kootam review enga bha.......??????

waiting for the review from ur slang.

please add it fast.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...