சிறந்த
படங்கள் என்று சொல்வதற்கு பதில் எனக்குப் பிடித்த படங்கள் என்று கூறுவதுதான் வைப்பதுதான்
சரியாக இருக்கும். ”2019 eh முடியப்போவுது.. இதுல 2018 சிறந்த படங்கள் லிஸ்டு ரொம்ப
முக்கியம்“ என்று நீங்கள் நினைப்பது இங்கு வரை கேட்கிறது. நண்பர்களால் நல்ல படங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட
சில படங்களை பார்க்கவில்லை. அவற்றையெல்லாம் பார்க்காமல் இந்தப் பதிவை இடுவது அவ்வளவு
நன்றாக இருக்கது என்பதால் ஒருவாரம் நேரம் எடுத்து ஒருசில படங்களைப் பார்த்துவிட்டு
பதிவிடுகிறேன். இன்னும் கூட நல்ல படங்கள் என பெயரெடுத்த நடிகையர் திலகம், அடங்க மறு,
கனா போன்ற படங்களை பார்க்கவில்லை. சமீபத்தில் பார்க்கும் உத்தேசமும் இல்லை. அதனால்
பார்த்தவற்றில் பிடித்தவற்றை வரிசைப்படுத்துவோம். வழக்கம்போல் திரையரங்கில் படங்கள்
எனக்கு எந்த மாதிரி பாதிப்பை கொடுத்தது என்கிற அடிப்படையிலேயே இவை வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது.
10.
நிமிர்
09.
அசுரவதம்
இதுவும்
பெரும்பாலான நண்பர்களுக்கு பிடிக்காமல் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய ஒரு படம். ஆனால்
இந்த வருடத்தில் பிடித்த படங்களில் ஒண்று. ஒரு இயக்குனர் அவர் எடுத்துக்கொள்ளும்
genre க்கு முதலில் நியாயம் செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு முக்கியமான படம் இது.
முதல் காட்சியிலிருந்து கதையை விட்டு எங்கும் நகராமல் அருமையாக அமைக்கப்பட்ட காட்சிகள்.
பெரும்பாலும் படம் பார்க்கும்பொழுது நமக்கு கதாநாயகனின் மனநிலையில் படம் பார்ப்போம்.
ஆனால் இதில் அப்படியே மாறி, வில்லனின் மனநிலையில் ரசிகர்களை படம் பார்க்க வைத்திருந்தது
சிறப்பு.
09.
இரவுக்கு ஆயிரம் கண்கள் :
ஆரம்பம்
முதல் கடைசி வரை சுவாரஸ்யமாக வேறு வேறு கோணங்களில் பின்னப்பட்ட கதை. அஜ்மலைத் தவிற
வேறு யாரையாவது வில்லனாக போட்டிருக்கலாம் என்பதைத் தவிற மற்றபடி சிறப்பான திரைப்படம்.
08.
மெர்க்குரி
இந்த
இயக்குனர் இந்த மாதிரி படங்கள்தான் எடுப்பார் என்பதை விட இவர் என்ன படம் எடுத்தாலும்
நன்றாக இருக்கும் என்பதே ஒரு சிறந்த இயக்குனருக்கு அடையாளம். அந்த வகையில் கார்த்திக்
சுப்பராஜ் வியக்கவைக்கும் ஒரு இயக்குனர். எடுத்த அனைத்து படங்களுமே வேறு வேறு
genre. ஆனால் அனைத்திலுமே முழு உழைப்பை கொட்டி திறமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இந்த மெர்க்குரியிலும் கூட.
07.சிலுக்குவார்பட்டி
சிங்கம்.
இந்த
வருடம் வெளிவந்த ஒருசில நகைச்சுவைப் படங்களில் வின்னர் இது தான். இந்த வருடத்தில் திரையரங்கில்
அதிகம் சிரிக்க வைத்த திரைப்படம். அத்தனை நகைச்சுவை
நடிகர்களிம் முழு potential ஐ வெளிக்கொணர்ந்த படம். கலகலப்பு இரண்டாம் பாகமும் அத்தனை
நகைச்சுவை நடிகர்களைக் கொண்டிருந்தாலும் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையே இல்லாமல்
இருந்ததாலும், ஜீவாவின் கதாப்பாத்திரம் அந்தப் படத்திற்கு எந்த வகையிலும் உதவாதாலும்
ஒரு முழுமையை உணர முடியவில்லை. ஆனால் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் அந்தக் குறைகளை
நீக்கி பார்வையார்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறது.
06.
வடசென்னை
பல
வருடங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து பல பில்ட் அப்புகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படம்.
தனுஷ் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் என்பதை மற்றொரு முறை நிருப்பித்திருக்கும்
படம் இந்த வடசென்னை. தனியாக performance செய்து காட்டுவதற்கு காட்சிகளெல்லாம் இல்லை.
ஆனால் அந்த கதாப்பாத்திரத்தில் அவரது நடை, உடல் அசைவுகள், பேச்சு என தனுஷால் மட்டுமே
சாத்தியாமன ஒன்று. இயக்குனர் வெற்றி மாறன் வட சென்னையை ஒரு படி உள்ளே இறங்கி அலசி எடுத்திருக்கிறார்.
ஆனால் டாக்குமெண்டரி மாதிரியான படமாக்கலும்,
படத்தை சுவாரஸ்யப்படுத்துவதுபோலான காட்சிகள் அதிக அளவில் இல்லாமல் இருந்ததாலும் பெரும்பாலன
மக்களுக்கு சென்றடையவில்லை.
05.
இமைக்கா நொடிகள்
இந்த
வருடம் வெளிவந்த மற்றொரு தரமான த்ரில்லர். நயன் தாராவின் தரமான சம்பவங்களில் இந்த இமைக்கா
நொடிகளும் ஒண்று. க்ளைமாக்ஸ் மட்டும் எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. காரணம் அதே
மாதிரியான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுன் ஒரு மெல்லிய கோடு ( The Body) , Kshanam ( சத்யா)
என்ற இரண்டு படங்கள் பார்த்தேன். பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். திரும்பவும்
அதே மாதிரியான ஒரு ட்விஸ்ட் சலிப்பை ஏற்படுத்தியதே தவிர மற்றபடி சிறப்பான ஒரு
thriller.
04.
கடைக்குட்டி
சிங்கம்
குடும்பங்கள் கொண்டாடிய ஒரு வெற்றிப்படம். கார்த்திக்கு ஏற்ற
கதாப்பாத்திரம். கிராமத்து கதைக்களமும், அதை சுவாரஸ்யமாக படமாக்கியதும் அனைவருக்கும்
சென்று சேர உதவியது. நீண்ட நாட்களுக்கு பிறகு 90 களில் வந்த கே.எஸ்.ரவிகுமார், P.வாசு
படங்களை பார்த்தது போன்றதொரு உணர்வு.
03. பரியேறும் பெருமாள்
ஒரு சமூகம் சார்ந்த அரசியல் பேசுவதற்கு சினிமாவை உபயோகிப்பதில்
தவறில்லை. ஆனால் சினிமாவிற்கும், திரையரங்கிற்கு காசு கொடுத்து வரும் பார்வையாளர்களுக்கும் உண்டான ஒரு குறைந்த பட்ச
மரியாதையை கொடுக்க வேண்டும். இதற்கு முன்னர் இதே விஷயத்தை பேசிய இயக்குனரின் படம் போல்
அல்லாமல் ஒரு சினிமாவாகவும், அதே சமயம் சொல்ல வேண்டிய விஷயத்தை உரியவர்களுக்கு கொண்டு
சேர்த்ததிலும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்.
02. ராட்சசன்
கடந்த ஒரு சில வருடங்களில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்களில்
ஒண்று. ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த இடத்திலும் சறுக்காமல் பார்வையாளர்களை பதட்டத்துடன்
உட்கார வைத்திருந்த தரமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.
01. 96
இந்த வருடம் வெளிவந்த படங்களில் மிக அழகான திரைப்படம். இதைப்பற்றி
நண்பர்கள் வலைத்தளங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்ட காரணத்தினால் மேற்கொண்டு
எதுவும் தேவையில்லை. ஒண்றே ஒண்று. இதற்கு முன்னர் “காக்கா முட்டை” திரைப்படம் பார்க்கும்பொழுது
என்னையும் அறியாமல் படம் முழுவதும் என் முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருந்தது.
அதன் பிறகு அதே மாதிரி ஒரு ஃபீலைக் கொடுத்தது இந்த படம் தான். திரிசா இவ்வளவு அழகை
இவ்வளவு நாள் எங்கே வைத்திருந்தது என்று தெரியவில்லை. இயக்குனரும் இசையமைப்பாளரும்
போட்டி போட்டுக்கொண்டு படத்தை அழகாக்கியிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்த வருடத்தின்
சிறந்த திரைப்படங்களில் முதலிடம் இந்த 96 க்கு தான்.
அடுத்து வெறியேற்றிய படங்கள் 2018 வந்து கொண்டிருக்கிறது. அநேகமாக
கவுண்டர் வந்தாலும் வரலாம்.
தொடர்புடைய பதிவுகள்:
4 comments:
அசுரவாதம் .. காஸ்டிங் ஒரு பெரிய குறை. படத்தின் பெரிய முடிச்சு கிட்ட தட்ட கடைசி வரை யார் வில்லன் யார் ஹீரோ என்று தெரியாமல் இருப்பது. எப்போது இருவரில் ஒருவர் சசிகுமார் என்ற போது சஸ்பென்ஸ் மாறி எப்படி இவர் ஹீரோ என்று தோன்றிவிட்டது. பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம்.
வடசென்னை. முற்றிலுமாக உங்கள் விமர்சனத்துடன் முரண் படுகிறேன். தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக வடசென்னையை கருதுகிறேன். திரைக்கதை பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.
இமைக்கா நொடிகள். நல்ல படம் என்றாலும் நயன்தாரா ஏன் சில விஷயங்களை செய்தார் என்பதெல்லாம் வெகு மேலோட்டமாக சொல்லப்பட்டது. அதர்வா காதல் காட்சிகளெல்லாம் அறுவை.
96 பார்க்கவில்லை. ஆட்டோகிராஃப் போன்ற படங்கள் அலுப்பை தர ஆரம்பித்து விட்டது.
வட சென்னை நல்ல படம் இல்லை என்று கூறவில்லை. ஆனால் இரண்டாவது முறை படம் பார்க்க தோன்றவில்லை. C செண்டர்களில் படம் பெரிய அளவில் எடுபடவில்லை.
96 கட்டாயம் பாருங்கள்.. ஆட்டோகிராஃப் வகை படங்களுக்கு நானும் ஆதரவு தருவதில்லை. இது ஆட்டோகிராஃப் அல்ல. அவசியம் பார்க்கவும்
பேருக்கு தான் ரஜினி ரசிகன் ஆனா காலா 2.0 பத்தி ஒரு வார்த்தை கூட இல்ல....
ஒரு வேளை படம் புடிக்கலையோ.......
ரஜினி படங்களை இந்த லிஸ்டில் எப்பொழுதும் சேர்ப்பதில்லை..
உங்க அளவுக்கு நான் ரஜினி ரசிகன் இல்லங்க
Post a Comment