Saturday, May 2, 2020

தடயவியல் – Case 3 சாட்சி சொல்லிய மரம்!!!


Share/Bookmark




முதல் பகுதியில் கூறியதைப் போல, ஒரு குற்றம் நடக்கும்போது சுற்றியிருக்கும் உயிருள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துமே சாட்சிகள் தான். உயிரற்ற பொருட்களிடமிருந்து செய்தியைப் பெற, அவற்றுடன் வேறு ஒரு மொழியில் பேச வேண்டும். அந்த மொழியைப் பேசுபவர்கள்தான் இந்த தடயவியல் துறையினர். இதனை நிரூபிக்கும் விதமாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

1992, அமெரிக்காவின் அரிசோனா மாஹானத்தின் ஃபீனிக்ஸ் நகரத்திற்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் நிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தகவல் தெரிவிக்கிறார்.  காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைகிறது.

புதர்களுக்கு நடுவே கிட்டத்தட்ட நிர்வாணக் கோலத்தில் ஒரு பெண்ணின் சடலம் குப்புறக் கிடக்கிறது.  இரண்டு கால்களையும் சேர்ந்து மெல்லி ஒரு கம்பி சுற்றியிருக்கிறது. குரவளையைச் சுற்றி ஒரு டீ-ஷர்ட். அநேகமாக அந்தப் பெண் அணிந்திருந்த டீ-ஷர்ட்டாக இருக்கலாம். அதை வைத்துத்தான் அவள் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறது என யூகிக்கிறது காவல்துறை. கொலை நடந்த இடத்தை சுற்றி வேறு ஏதேனும் தடயங்களுக்காக தேடுகிறது காவல்துறை. ஓரே ஒரு சிரிஞ்ச் மட்டும் கிடைக்கிறது. மேலும் தேடுதல் வேட்டை நடந்திக்கொண்டிருந்த பொழுது கேட்டது அந்த சத்தம்.

“கினிங்..கினிங்..கினிங்”


சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்ற போலீஸார், புற்களுக்குள் ஒரு பேஜர் விழுந்து கிடப்பதை பார்த்து அதனை கைப்பற்றுகின்றனர். இவ்வளவுதான் கிடைத்த ஆதாரம்.

கொலையான பெண் அடையாளம் காணப்படுகிறாள். அவள் பெயர் டென்னிஸ் ஜான்சன். இரண்டு குழந்தைகளின் தாய்.  அவளைப் பற்றி விசாரிக்கும் பொழுது அவ்வளவு நல்ல விதமாக யாரும் கூறவில்லை. அவளுக்குப் போதை மருந்து விற்பவர்களுட பழக்கம் இருக்கிறது. தவறான நண்பர்களுடன் அவள் பழகிவந்தாள் என்பன போன்ற தகவல்கள் காவல்துறைக்கு கிடைக்கிறது.

டென்னிஸ் ஜான்சனை யார் கொன்றிருக்கலாம் என்கிற விசாரணையை ஆரம்பிக்கிறது காவல்துறை. அவர்களிடம் இருக்கும் ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். கொலை நடந்த இடத்திற்கு அருகே கிடந்த பேஜர். அந்த பேஜருக்கு சொந்தக் காரர் யார் என்று விசாரிக்கும்போது அது மார்க் போகன் என்பவருக்கு சொந்தமான பேஜர் எனத் தெரிகிறது.

போலீஸார் மார்க் போகனை விசாரிக்கிறார்கள். டென்னிஸ் ஜான்சனைத் தெரியுமா? உங்களுடைய பேஜர் எப்படி கொலை நடந்த இடத்திற்கு வந்தது எனக் கேட்கிறார்கள்.



அதற்கு மார்க் போகன் கொலை நடந்த அன்று இரவு, தான் ஒரு டெலிஃபோன் கால் செய்ய, காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதாகவும், அப்பொழுது டென்னிஸ் ஜான்சன் தனக்கு லிஃப்ட் கொடுக்குமாறு கேட்டு காரில் ஏறியதாகவும் கூறினார். ஏறிய பின்னர் காரில் ஏறியதும் டென்னிஸ் ஜான்சன் சற்று எல்லை மீறி நடந்து கொண்டதாகவும், தானும் அதற்கு உடன் பட்டதாகவும் கூறினார். தன்னை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் போதே தன் காரின் டேஷ் போர்டில் இருந்த தன்னுடைய பர்ஸை அவள் எடுப்பதைப் பார்த்து விட்டு அவளை வெளியேறச் சொன்னதாகவும், அதனால் கோபமடைந்து அவள் வெளியே சென்று விட்டதாகவும் கூறுகிறார். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னர்தான் தன்னுடைய பேஜர் காணாமல் போனதை உணர்ந்து உடனடியாக, பேஜர் கம்பெனியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகவும் கூறுகிறார்.

இது போலீஸிற்கு நம்பும் விதமாகவும், மேற்கொண்டு மார்க் போகனை குற்றம் சாட்ட வேறு எதுவும் போலீஸிடம் இல்லாததாலும் அப்படியே விடுகிறார்கள். ஆனால் விசாரணையின் போது மார்க் போகனின் முகத்தில் ஒரு கீரல் இருப்பதை கண்டறிகிறார்கள். ஒருவேளை டென்னிஸ் ஜான்சனின் ப்ரேதப் பரிசோதனையில் அவள் நக இடுக்குகளில் ரத்தமோ சதையோ கண்டறியப்பட்டால் அதை வைத்து மார்க் போகனை குற்றம் சாட்டலாம் என காத்திருக்கின்றனர். ஆனால் ப்ரேதப்பரிசோதனையில் டென்னிஸ் ஜான்சனின் நகங்களில் சதையோ, ரத்தமோ இல்லை. மேலும் அவள் ரத்ததில் கொகைன் கலந்திருப்பதையும் பரிசோதனையில் கண்டறிகிறார்கள்.

போலீஸ் விசாரணை எந்தக் கோணத்தில் மறுபடி தொடர்வது என புரியாமல் நின்றது. அந்த சூழலில் டிடெக்டிவ் சார்லி மார்டின் கொலை நடந்த இடத்தை மறுபடி ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறார். சம்பவ இடத்தை அங்குலம் அங்குலமாக அலச எந்த ஒரு தடயமும் கிடைத்த பாடில்லை. திடீரென ஒரு விஷயம் கண்ணில் பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு palo verde மரத்தின் ஒரு சிறு கிளையில் எதோ உரசியதைப் போல மரத்தின் மேல் தோல் உரிந்திருந்தது. அந்த palo verde மரத்தில் நமது கருவேல மரங்களில் காய்ப்பதை போல பீன்ஸ் மாதிரியான காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன.

அந்த மரக் கிளையில் ஏற்பட்டிருக்கும் உரசல் ஒருவேளை கொலை நடந்த அன்று ஏற்பட்டிருக்கலாம் என டிடெக்டிவ் யூகிக்கிறார். நம்முடைய சந்தேக லிஸ்டில்  இருப்பது மார்க் போகன் ஒரே ஒருவன் தான். எனவே அவனுடைய காரை சோதனை செய்கின்றனர். மார்க் போகனின் வாகனம் பின்புறம் பொருட்கள் ஏற்றிச் செல்வது போலான  ஜீப் மாதிரியான வெள்ளை வண்ட். சோதனையில் காரிலிருந்து எந்த ஒரு கைரேகையோ, முடியோ எதுவும் சிக்கவில்லை. ஆனால் காரின் பின்புறம் சோதனையிடும்போது இரண்டு பீன்ஸ் மாதிரியான பொருட்கள் கிடைகின்றன. ஆம்.. palo verde மரத்தில் காய்க்கும் காய்கள் தான் அவை.  டென்னிஸ் ஜான்சனை  கொன்றுவிட்டு வரும்வழியில் மரத்தில் மோதியதால் இந்தக் காய்கள் விழுந்திருக்கலாம் என போலீஸ் யூகிக்கிறது.

ஆனால் இந்தக் பீன்ஸ் காய்களை மட்டும் வைத்து எப்படி நிரூபிப்பது. அரிசோனா மாஹானம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான palo verde மரங்கள் இருக்கின்றன. வேறு எதேனும் மரத்திலிருந்து கூட அவை மார்க் போகனின் காருக்குள் விழுந்திருக்கலாம். ஆனால் தற்பொது போலீஸிடம் இருப்பது இந்த ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே. வேறு வழி எதுவும் இல்லை.

டிடெக்டிவ் சார்லி மார்ட்டின் மரங்களின் DNA வை பரிசோத்து, இந்த பீன்ஸ் காய்கள் கொலை நடந்த இடத்தில் இருந்த மரத்தின் காய்கள் தான் என நிரூபிக்க முடியுமா என சில டாக்டர்களிடம் கேட்கிறார். அவரின் இந்த யோசனையைக் கேட்டு பலரும்  நகைக்கின்றனர். ஏனென்றால் இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே DNA சோதனை செய்யப்பட்டிருக்கிறது. மரங்களுக்கு இந்தச் சோதனையைச் செய்ய யாரும் முயன்றதில்லை.

டிடெக்டிவ் சார்லி மார்ட்டின் அணுகிய பெரும்பாலான மருத்துவர்கள் அவரின் இந்தக் கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்டோரை அணுகிய பின்னர் யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனாவில் அவரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஆனால் அவர்கள் மூன்று மாதம் இந்த மரத்தின் DNA வை எப்படி பிரித்தெடுப்பது என்கிற யோசனையிலேயே இதனை கிடப்பில் போடுகிறார்கள். இறுதியில் ஒரு வழிமுறையைக் கண்டறிகின்றனர்.

இந்த பீன்ஸ் காய்களை திரவ நைட்ரஜனில் உறைய வைத்து அதனைப் பொடியாக்கி, சில வழிமுறைகளைப் பயன்படுத்தி அதிலிருந்து DNA வைப் பிரிக்கின்றனர். மார்க் போகனின் காரிலிருந்து எடுக்கப்பட்ட காய்களின் DNA மற்றும் கொலை நடந்த இடத்திற்கு அருகே சேதாரமடைந்த மரத்தின் காய்களின் DNA இரண்டும் சோதனை செய்யப்படுகிறது.  இரண்டும் நூறு சதவிகிதம் ஒத்துப் போகிறது.

மேலும் பத்து வெவ்வேறு palo verde மரங்களின் காய்களும் DNA சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. சோதனை முடிவில் மனிதர்களைப் போலவே ஒவ்வொரு மரமும் ஒரு தனித் தன்மையான DNA வடிவைக் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த சோதனை முடிவுகளை வைத்து மார்க் போகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.



எதிர்தரப்பு இந்த DNA சோதனை  முடிவை ஏற்க மறுக்கிறது. பல ஆயிரம் மரங்கள் இருக்கும் இடத்தில் வெறும் பத்து மரங்களின் சோதனை முடிவை மட்டும் ஏற்க முடியாது. மேலும் நூறு மரங்களுக்கு சோதனை செய்து ஒவ்வொன்றும் தனித்தன்மையானது என நிரூபிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். வெறும் நேரத்தைக் கடந்த மட்டுமே இதுபோன்ற கோரிக்கை வைக்கப்படுகிறது என அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பத்து மரங்களுக்கு DNA சோதனை செய்து ஒவ்வொன்றும் தனித்தன்மையானது என்கிற ஆதாரத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் இந்த DNA சோதனை முடிவை  ஆதாரமாக ஏற்கிறது.

அதுமட்டுமல்லாமல் கொலை நடந்த அன்று இரவு 1:30 மணியளவில் வெள்ளை காரை அந்த சாலையில் பார்த்ததாக ஒருவர் வாக்கு மூலம் அளிக்கிறார். கொலை நடந்த இடத்திலிருந்து மார்க் போகன் சுமார் 18 நிமிட பயண தொலைவில் வசிக்கிறார். கொலை நடந்த அன்று மார்க் போகன் இரவு சுமார் 2 மணியளவில் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் வரும்போது சத்தம் கேட்டு தான் விழித்ததாகவும் மார்க் போகனின் மனைவியே சாட்சியளித்திருந்தார். அனைத்தும் மார்க் போகன் தான் இந்தக் கொலையை செய்திருப்பார் என்கிற அனுமானத்தை உண்டாக்கியது.

மேலும் மார்க் போகனின் நண்பர்கள் சிலரிடம் விசாரித்த பொழுது அவர் புணர்தலின் போது பெண்களின் கை , கால்களை ஒருவித மெல்லைய கம்பியால் கட்டுவது வழக்கம் என்பது தெரிகிறது. அது மட்டுமல்லாமல் டென்னிஸ் ஜான்சன் கால்களில் கட்டப்பட்டிருந்த அதே மாதிரி கம்பியை மார்க் போகனின் வாகனத்தில் சில நாட்கள் முன்பு பார்த்ததாக ஒரு பெண் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

போலீஸின் பார்வையில் உண்மையில் நடந்தது:

மார்க் போகன் தொலைபேசியில் பேசிவிட்டு வரும்போது டென்னிஸ் ஜான்சன் லிஃப்ட் கேட்டிருக்கிறார். வழியில் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட காரை நகரத்தை விட்டு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி இருவரும் புணர்தலில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்பொழுது மார்க் போகன் தன்னிடமிருந்த மெல்லிய கம்பியால் டென்னிஸ் ஜான்சனின் கால்களை கட்ட முயல, அது பிடிக்காமல் அவர் இறங்கியிருக்கிறார். மார்க் போகன் அவளைத் துரத்த, இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட, மார்க் போகன் அவள் போட்டிருந்த டீ ஷர்ட்டாலேயே அவள் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, காரை எடுத்துக்கொண்டு வேகமாக செல்லும்போது palo   verde மரத்தின் கிளையில் மோதி கிளை லேசாக சேதமடைந்திருக்கிறது. அதே சமயத்தில் மரத்திலிருந்த இரண்டு காய்கள் காரில் விழுந்திருக்கிறது.
மார்க் போகன் சம்பவம் நடந்த மறுநாள் தன்னுடைய காரை கழுவியதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டார். எனவேதான் வேறு எந்த தடயமும் போலீஸாருக்கு சிக்கவில்லை.

இத்தனை ஆதாரங்களையும் வைத்து, மார்க் போகன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் முழுவதும் அவரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குறைந்தது 25 வருடங்களுக்கு அவருக்கு பெயில் வழங்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கில் மார்க் போகன் காரிலிருந்து எடுக்கப்பட்ட பீன்ஸ் காய்கள்தான் முக்கிய சாட்சி. எனவே அதனை போலீஸார் வேண்டுமென்றே மார்க் போகனின் காரில் போட்டிருக்கலாம் என எதிர்தரப்பு வாதாடியது. அதற்கு போலீஸ் தரப்பிலிருந்து சிம்பிளாக ஒரு பதில் கூறப்பட்டது.

“ஏன்யா.. நாங்களே எவிடென்ஸ் வைக்கிறதுன்னா ஈஸியா கண்டுபுடிக்கிற மாதிரிதான வச்சிருப்போம். இதுவரைக்கும் யாருமே கண்டுபுடிக்காத DNA மேட்ச் பண்ணி கண்டுபுடிக்கிற மாதிரி இவ்வளவு கஷ்டமான எவிடென்ஸயா வச்சிருப்போம்” என்றார்கள். அவர்களின் விளக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் இன்று வரை மார்க் போகன் டென்னிஸ் ஜான்சனை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இன்று வரை மெல் முறையீடு செய்துகொண்டுதான் இருக்கிறாராம்.

மற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.!!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Anonymous said...

சுவாசியமாக இருக்கு, அனைத்து கதைகளும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...