Sunday, May 3, 2020

தடயவியல் – Case 4 ஆவணக் கொலைகள்!!


Share/Bookmark




1985, அக்டோபர் பதினைந்து அன்று காலை ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் 13 வது மாடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருகிறார். கதவைத் திறந்து உள்ளே  சென்ற சில நொடிகளில் அடுத்த அறையிலி இருந்த ஸ்டீவின் நண்பர் ஒரு மிக்பெரிய சப்தத்தை கேட்கிறார். அவசர அவசரமாக வெளியில் வந்து பார்க்க, ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் அவருடைய அலுவலகத்தின் கதவுக்கு வெளியே கை, கால் முகம் என அனைத்தும் சேதமடந்து இறந்து கிடக்கிறார்.

தகவலறிந்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைகிறது.  சிதறிக்கிடந்த கதவு, சுவர் துணுக்குகளுக்கிடையே ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் இறந்து கிடக்கிறார். சிதறிய ஒவ்வொரு பொருட்களையும் சேகரிக்கின்றனர். சிதறிக்கிடந்த பொருட்களில் சேதமடைந்த சில பேட்டரிகள், சிதறிய பைப் துண்டுகள், சிறு சிறு ஒயர் துண்டுகள் மற்றும் ஒட்டும் டேப் ஆகியவற்றை கண்டறிகின்றனர். இந்த குண்டு வெடிப்பு ஒரு பைப் பாமின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என காவல்துறை கண்டறிவதற்கு வெகுநேரம் ஆகவில்லை. ஒரு பைப் பாம் என்பது கீழ்கண்டவாறுதான் இருக்கும்.



பாம் வெடித்ததில் ஸ்டீவின் ஆஃபீஸ் கதவு ஹிஞ்சுடன் சேர்த்து பெயர்க்கப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டீவின் முகம் கை கால்களில் பலத்த காயமும் ஏற்பட்டிருந்தது. இதை வைத்து பாம் வெடித்தது கதவுக்கு மிக அருகில் இருக்கவேண்டும், ஸ்டீவும் பாம் வெடிக்கும்போது மிக அருகில் தான் இருந்திருக்க வேண்டும் எனவும் உறுதிசெய்கின்றனர்.

சிதறிய பொருட்களின் நடுவே, ஸ்டீவ் என்று எழுதப்பட்ட காக்கி வண்ண பேப்பர் கிடப்பதை போலீஸ் கண்டறிந்தது. அந்த காக்கி வண்ண கவர் ஒரு பார்சலின் கவராக இருக்கும் எனவும் போலீஸ் யூகித்தது. அவர்களின் யூகத்தை சரியாக்கும் வண்ணம் இரண்டு மாடி கீழே வசித்த ஒருவர், இது போன்ற பார்சலை தூக்கி வந்த நபரை தான் லிஃப்டில் பார்த்ததாகவும், அவர் சுமார் 5 அடி 8 அங்குல உயரத்தில் இருந்ததாகவும், ஒரு ஓவர் கோட் அணிந்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சிறிது நேரம் கழித்து அந்தப் பார்சல் ஸ்டீவின்

ஸ்டீவ் க்ரிஸ்டின்சன் நிறைய தொழில்களில் சம்பந்தப்பட்டவர்.அவர் ஒரு அக்கவுண்டண்ட். ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியின் CEO வாக இருந்து சமீபத்தில் தான் அந்தப் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த ரியல் எஸ்டேட் கம்பெனி மிகப்பெரிய நஷ்டத்தில் போய்கொண்டிருந்தது. அதன் மூலம் பணம் இழந்தவர்களும் அதிகம். அதனால் அந்தக் கம்பெனியின் மூலம் பணம் இழந்தவர்கள் யாரேனும் இந்த பாமை வைத்திருக்கலாம் என போலீஸ் சந்தேகித்தது.

சிதறிய பொருட்களை சோதனையிடும்போது அதில் ஒரு motion sensitive mercury switch இன் பகுதிகளை கண்டறிகிறார்கள். இந்த மோஷன் சென்சிட்டிவ் சுவிட்ச் என்பது ஒரு கண்ணாடி குழாயின் ஒருபுறம் பாதரசம் வைக்கப்பட்டிருக்கும். மற்றொரு புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு இரண்டு கம்பிகள் இருக்கும். எப்பொழுதும் அந்த கண்ணாடி குழாய் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும். எனவே பாதரசம் அந்தக் கண்ணாடிக்குழாயின் கீழும், கம்பிகள் மேலும் இருக்கும். ஒருவேளை அந்தக் கண்ணாடிக் குழாய் சாயும் பட்சத்தில் கண்ணாடிக்குழாயின் கீழே இருக்கும் பாதரசம் மறுபுறம் இருக்கும் கம்பிகளுக்கு நடுவில் சென்று இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும். அந்த இரண்டு கம்பிகளுக்கு நடுவே தொடர்பு ஏற்படும்பொழுது ஒரு சுவிட்ச் போல செயல்பட்டு பாமை வெடிக்கச் செய்யும்.



இதுபோன்ற மோஷன் சென்சிட்டிவ் சுவிட்சின் மூலம் வெடிக்கவைக்கப்படும் வெடிகுண்டுகள் பெரும்பாலும் அந்த வெடிகுண்டு உருவாக்குபவரால் தான்  குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்படும். ஏனென்றால் வேறு ஒருவர் தெரியமல் பாம் இருக்கும் பெட்டியை திருப்பினால் கூட பாம் வெடித்துவிடும் என்கிற காரணம் தான்.

எனவே ஸ்வீவ் அலுவலகத்திற்கு அந்தப் பார்சலைக் கொண்டு வந்தவர்தான் பாம் செய்தவராகவும் இருக்கவேண்டும் என காவல்துறை முடிவுக்கு வந்தது. ஆனால் அவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் காவல்துறையிடம் இல்லை. காவல்துறை ஒரு நிலைபாட்டுக்கு வரும் முன்னரே அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஸ்டீவ் வெடித்து சிதறிய அதே முறையில் இன்னொரு குண்டு வெடிப்பு. இந்த முறை மரணமடைந்தது கேத்தி ஷீட்ஸ் எனும் பெண்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்து சம்பவ இடத்தை அலசுகிறார்கள். முதல் சம்பவத்தில் கிடைத்த அத்தனை தடயங்களையும் இரண்டாவது சம்பவத்திலும் பார்க்கிறார்கள். வெடித்தது ஒரு பைப் பாம். வெடிக்க வைக்கப்பட்டது ஒரு மோஷன் சென்சிட்டிவ் மெர்க்குரி சுவிட்ச்சின் மூலம். கேத்தி ஷீட்ஸின் கணவர் கேரி ஷீட்ஸின் பெயரில் வந்த ஒரு பார்சல் மூலம் பாம் வெடித்திருக்கிறது என அத்தனையும் அதே டெய்லர் அதே வாடகை.

முதல் சம்பவத்தில் கிடைத்த பேட்டரிகள், இரண்டாவது சம்பவத்தில் கிடைத்த பேட்டரிகள் என இரண்டிலும் Tandy எனும் ப்ராண்டின் பெயர் இருக்கிறது. அந்த Tandy brand ஐ விற்பது சிட்டியில் Radio shack எனும் கடை. அங்கு சென்று போலீஸ் விசாரிக்க, அவர்கள் சமீபத்தில் அந்த ஐட்டங்களை வாங்கியவரின் முகவரியைக் கொடுக்கிறார்கள். போலீஸ் அந்த இடத்திற்கு செல்ல, அது ஒரு போலி முகவரி என்பது தெரிகிறது.

அதே போல இரண்டு சம்பவங்களிலும் சிதறிய கன் பவுடரை ஆய்வு செய்கிறார்கள். அது Hercules Bulls Eye எனும் ப்ராண்டைச் சேர்ந்த கன் பவுடர் என்பது உறுதியாகிறது. இரண்டு கொலைகளும் ஒரே மாதிரி நடத்தப்பட்டிருந்தாலும்,  கொலை செய்யப்பட்ட இருவருக்கும் பெரிதாக ஏந்த தொடர்பையும் காவல்துறை கண்டறியவில்லை. ஆனால் கொலையுண்ட கேத்தியின் கணவர் முன்பொரு காலத்தில் ஸ்டீவின் தொழில் பார்ட்னராக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

போலீஸ் ஒரு கோணத்தில் விசாரணையை ஆரம்பிக்க இருக்க, மறுநாளே மற்றுமொரு சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த  மார்க் ஹாஃப்மேன் ( Mark Hofmann) என்பவரின் ஒரு காரில் அதே போல ஒரு குண்டு வெடித்தது.  ஆனால் அதிர்ஷ்ட வசமாக ஹாஃப்மேன் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.

தோள்பட்டை, முழங்கால் என கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட, ஹாஃப்மேனிடம் போலீஸ் விசாரணை நடந்தி, என்ன நடந்தது என விளக்கச் சொல்கிறது.  தான் ஷாப்பிங் சென்று விட்டு வந்து காரைத் திறக்கும்போது காரில் ஒரு பார்சல் இருந்ததாகவும், கதவைத் திறக்கும்போது அந்தப் பார்சல் நழுவி முன் சீட்டின் கீழே விழுந்ததும் வெடித்ததாகக் கூறுகிறார். 

மார்க் ஹாஃப்மேன் ஒரு பழங்கால ஸ்டாம்புகள், ஆவணங்களை சேகரித்து விற்கும் ஒரு நபர். நூற்றாண்டுகள் பழமையான ஆவணங்களை சேகரிப்பதும், அவற்றை தேவைப்படுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதுமே அவரின் வேலை.

போலீஸ் பாம் வெடித்த காரை ஆய்வு செய்கிறார்கள். ஒரு பைப் பாம் என்பது வெடிக்கும்போது பக்கவாட்டில்தான் முதலில் வெடிக்குமாம். அதாவது பைப்பின் இரண்டு புறங்களும் மூடப்பட்டிருக்கும் மூடிகள்தான் முதலில் வெடித்து பக்கவாட்டில் வெளிப்படும். அப்படி வெடிக்கும்போது பைப் பாமின் ஒரு பக்க மூடிதான் ஹாஃப்மேனின் முட்டியில் பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்னொரு பக்க மூடி காரின் மறுபக்க கதவில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியிருந்தது.



காரை ஆய்வு செய்த அதிகாரிகள் ஹாஃப்மேன் கூறிய கதைக்கும், காரில் பாம் வெடித்திருக்கும் முறைக்கும் இடையே வித்யாசங்கள் இருப்பதைக் கண்டறிகிறார்கள்.  ஹாஃப்மேன் கூறிய முறைப்படி பாம் கீழே விழும்போது வெடித்திருந்தால் ஹாஃப்மேனுக்கு காலில் அடிபட்டிருக்காது, அதேபோல காரிலும் இப்போது உள்ளது போன்ற துளைகள் ஏற்பட்டிருக்காது எனவும், பாம் வெடிக்கும்போது காரின் முன்பக்க இரண்டு சீட்டுகளுக்கு நடுவில்தான் இருந்திருக்க வேண்டும் எனவும் கண்டறிகின்றனர். இதனை அறிவியல் பூர்வமாகவும் சில அறிஞர்களிடம் கேட்டு உறுதிப்படுத்துகின்றனர். ஹாஃபெமேனின் காரில் கிடைத்த கன் பவுடரை முந்தய விபத்துகளில் கிடைத்த கன் பவுடருடன் ஒப்பிட அவையும் ஒத்துப்போயின. எனவே மற்ற இரண்டு குண்டுகளையும் தயாரித்தது ஹாஃப்மேனாகவே இருக்கலாம் என போலீஸ் அனுமானிக்கிறது. ஆனால் ஹாஃப்மேன் எதற்காக இதை செய்யவேண்டும் என்பதற்கு மட்டும் அவர்களுக்கு விடை தெரியவில்லை.



ஹாஃப்மேனைப் பற்றிய முழுமையான விசாரணையில் இறங்குகின்ரனர் போலீஸார். அவரின் தொழில், பழக்கவழக்கங்கள் என ஆராய ஆரம்பித்தனர். ஹாஃப்மேன் ஒரு பழங்கால, மதிப்பு மிக்க ஆவணங்களை சேகரித்து விற்பவர் என்பது தெரியும். குண்டு வெடித்து முதலில் இறந்த ஸ்டீவ், ஹாஃப்மேனிடமிருந்து வெகுநாட்கள் முன்பு சில ஆவணங்கள் வாங்கியிருப்பது தெரியவருகிறது.

ஹாஃப்மேன் குண்டு வெடிப்பில் காயமடைந்த அன்று, உண்மையில் அவர் சால்ட் லேக் சிட்டியில் உள்ள மோர்மொன் (Mormon Church) தேவலயத்தில் ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். ஹாஃப்மேனிடமிருந்து சில பழங்கால ஆவணங்களை மோர்மொன் தேவாலயம் வாங்க முடிவுசெய்திருந்தது. அதுதொடர்பாக ஒரு மீட்டிங்கிற்குத்தான் ஹாஃமேன் சர்ச்சிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

போலீஸ் விசாரணையில் மற்றுமொரு தகவலும் கிடைத்தது. மோர்மொன் தேவாலயத்திற்கு ஹாஃப்மேன் விற்கும் பழங்கால ஆவணங்களை, அவை உண்மையிலேயே பழமை வாயந்த ஆவணங்கள் தானா என உறுதி செய்ய மோர்மொன் தேவாலயம் முதலில் இறந்த ஸ்டீவ் க்ரிஸ்டின்சனை அழைத்திருந்தது தெரியவந்தது. போலீஸிற்கு ஏதோ பொறிதட்டியது.

ஹாஃப்மேன் விற்பதாக இருந்த பழங்கால ஆவணங்களை ஆய்வு செய்ய ஒரு தடயவியல் வல்லுனர் அழைக்கப்படுகிறார். மைக்ராஸ்கோப் மூலம் அந்த ஆவணங்களை ஆய்வு செய்ய, அந்த தாள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இங்க் தாளின் எல்லா பக்கமும் மெல்லியதாக பரவியிருந்தது தெரிந்தது. ஆனால் வேறு சிலரிடமிருந்து மோர்மொன் சர்ச் வாங்கிய, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இருந்த பழங்கால ஆவணங்கள் சிலவற்றை ஆராய்ந்த பொழுது அதில் பயன்படுத்தப்பட்டிருந்த இங்க் ஒருபக்கம் மட்டுமே லேசாக பரவியிருந்தது.

ஹாஃப்மென் விற்ற அனைத்து பழங்கால ஆவணங்களிலிலும் பயன்படுத்தப்பட்டிருத இங்க் அதே மாதிரி அனைத்து பக்கமும் மெல்லியதாக பரவியிருந்ததும் கண்டறியப்பட்டது. போலீஸ் ஹாஃப்மேனின் அலுவலகத்தை சோதனையிட முடிவெடுத்தனர். அங்கு அவர்களுக்கு கிடைத்த ஆவணங்கள் போலீஸை திடுக்கிட வைத்தது.

முதலில்  அவர்களுக்குக் கிடைத்தது Iron Gal Ink எனப்படும் எழுதும் இங்க் தயாரிப்பதற்கான ஃபார்முலா. இந்த Iron gal Ink தான் ஐந்தாம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட இங்க். அந்த ஃபார்முலா ஹாஃப்மேன் வைத்திருந்தது போலீஸாரை ஆச்சர்யப்படுத்தியது.

தடயவியல் வல்லுனர் ஒருவர் அதே ஃபார்முலாவில் ஒரு இங்கைத் தயாரித்து ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார். பின்னர் அந்த வெள்ளைத்தாளை பழங்கால தாளைப் போல மாற்ற அம்மோனியா கரைசலில் நனைத்தார். பின்னர் அந்த எழுத்துக்களை மைக்ராஸ்கோப்பில் பார்த்த பொழுது அந்த இங்க அனைத்து பக்கங்களிலும் லேசாகப் பரவியிருந்தது.

அடுத்து “Oath of Freeman” என்னும் ஒரு 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆவணத்தை விற்க ஹாஃப்மேன் சுமார் 1.5 மில்லியன் டாலருக்கு விலைபேசியிருந்தார். இரண்டு நிறுவனங்கள் அந்த ஆவணம் உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன. அந்த ஆவணம் தனக்கு ஒரு பழைய புத்தக நிலையத்திலிருந்து கிடைத்தாக ஹாஃப்மேன் கூறியிருந்தார்.



ஆனால் ஹாஃப்மேனின் வீட்டில் சோதனையிட்ட பொழுது, இந்த Oath of Freeman ஆவனத்தை தயார் செய்யும் ஒரு ப்ரிண்ட் ப்ளேட் கிடைத்தது.  அந்த ப்ரிண்ட் ப்ளேட் வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து ஹாஃப்மேனின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாங்கப்பட்டிருந்ததை போலீஸ் கண்டறிந்தனர்.  எனவே 1.5 மில்லியன் டாலர் விலைபேசப்பட்ட அந்த ஆவணத்தின் மேலும் போலீஸூக்கு சந்தேகம் வலுத்தது.


அந்த ஆவணமும் மைக்ராஸ்கோப்பில் ஆய்வு செய்யப்பட்ட, அதில் இருந்த ‘M’ என்ற எழுத்தில்  மட்டும் ஒரு மெல்லிய இடைவெளி அனைத்து இடங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடைவெளி நாட்கள் கடந்ததாலோ அல்லது ப்ரிண்ட் செய்யும்போது ஏற்பட்ட கோளாரோ அல்ல. அது ஒரு photographic process இன் மூலம் ஏற்பட்டது எனவும், அந்த Photographic process முறை பழங்காலத்தில் கண்டறிப்படவில்லை எனவும் கண்டறிந்தனர். எனவே ஹாஃப்மேன் 1.5 மில்லியனுக்கு விற்பதாக இருந்த “Oath of Freeman” ஆவணமும் போலி என நிரூபணமானது.

இப்போது ஸ்டீவ் க்ரிஸ்டின்சனை மார்க் ஹாஃப்மேன் கொல்வதற்கான காரணமும் விளங்கியது. ஹாஃப்மேன் விற்ற ஆவணங்கள் போலி என்பதை க்ரிஸ்டின்சன் அறிந்திருந்தார். அதனை மோர்மொன் தேவாலயத்தில் குறிப்பிடும் பட்சத்தில் ஹாஃப்மேனின் அனைத்து ஆவணங்களும் போலி என்கிற உண்மையும் தெரிந்துவிடும். அதனால் பைப் பாமின் மூலம் ஸ்டீவ் கொல்லப்பட்டார். போலீஸின் கவனத்தை திருப்புவதற்காக ஸ்டீவின் முன்னால் தொழில்முறை பார்ட்னருக்கும் பாம் அனுப்பியிருந்தார் ஹாஃப்மேன். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மனைவி அதில் சிக்கி இறந்துவிட்டார்.

ஹாஃப்மேன் வாழ்க்கையில் விற்ற அனைத்து ஆவணங்களும் போலியானது என நிருபனமானது. இரண்டு கொலைகளுக்காகவும், ஏமாற்று வேலைக்காகவும் ஹாஃப்மேன் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்பட்டார்.


வேறு ஒரு சுவாரஸ்யமான சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...