Wednesday, April 20, 2022

KGF - Chapter 2


Share/Bookmark

 

KGF இன் பலமே அவர்கள் கதை சொல்லும் விதம் தான். படத்தில் பல டைம்லைன்களில் காட்சிகள் காட்டப்படும். ராக்கி பிறக்கும் பொழுது, ராக்கி சிறுவனாக அம்மாவுடன் இருந்த பொழுது, ராக்கி சிறுவனாக மும்பையில் இருந்த பொழுது, ராக்கி KGF ற்குள் நுழையும் பொழுது, ஆனந்த் இளவழகன் வயதான காலத்தில் கதை சொல்லும் பொழுது, ஆனந்த் இளவழகன் வாலிபப் பருவத்தில் ராக்கியைப் பற்றி விசாரிக்கும் பொழுது, ராக்கி எப்படிப்பட்டவன் என ஒரு பெரியவர் ஆனந்த் இளவழகனிடம் கூறும் இரு குட்டி ஃப்ளாஷ்பேக்குகள், கேஜிஎஃபில் நுழைவதற்கு முன்னர் மக்களின் வாழ்க்கை என படம் பல டைம் லைனில் பயணிக்கும்.


ஆனால் இவை அனைத்தையும் முறைப்படுத்தி ஒரு கோர்வையாக நமக்குக் கொடுத்ததுதான் KGF இன் வெற்றி. வேறு எந்தத் திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு புதிய அனுபவம்.


உதாரணத்திற்கு KGF இன் இரண்டாவது பாதியில் வீரனுடைய கதை ஒன்று சொல்லப்படும். அந்த ஒரு காட்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தாரு டைம் லைனில் நடக்கும் காட்சிகள் ஒன்றாக காட்டப்பட்டிருக்கும். 


மகிழ்ச்சியாக நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி, தொடர்ந்து அந்த பெண்ணும் அவரது கணவனும் KGF ற்குள் இழுத்து வரப்படுவது, ராக்கி பிறப்பது, ராக்கியின் தாய் பாடும் பாடல், வண்டியில் அரிசியை வைத்துவிட்டு யாரும் அருகில் வராதபடி ஆட்கள் சுடுவது, பின் ராக்கி மட்டும் அந்த வண்டியை துப்பாக்கி குண்டுகளுக்கு தனியே இழுத்து வருவது என மூன்று நிமிடங்களுக்குள் அவ்வளவு விஷயங்களைக் காட்டியிருப்பார்கள். 


KGF இன் பெரும்பாலான காட்சிகள் இப்படித்தான். குறைந்தது மூன்று நான்கு ஓவர்லேப்புகள் இருக்கும். எந்த ஒரு காட்சியையும் just like that எடுக்காமல் ஒரு  மெனக்கெடலை உணர முடியும்.


நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.  ஷங்கர் படத்தில் ஒரு பத்து நிமிடத்தையும், வேறு ஒரு  இயக்குனரின் படத்தில் ஒரு பத்து நிமிடத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும் ஷங்கரின் படங்கள் ஏன் பெரிதாகப் பேசப்படுகின்றன என்று. அந்தப் பத்து நிமிடத்தில் திரையில் அவர் காட்டும் விஷயங்கள், கொடுக்கும் தகவல்கள் மற்ற சாதாரணப் படங்களில் அரை மணி நேரத்தில் கூட இருக்காது.


KGF உம் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு படம் தான். ஏனோதானோவென்று ஒரு காட்சி கூட இருக்காது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர்களின் மெனக்கெடல் நன்றாகவே தெரியும்.


சரி KGF 2 விற்கு வரலாம். சகுனி திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். "முடிச்சை அழிப்பது ஒரு சுவாரஸ்யம் என்றால் அவிழ்க்க முடியாதபடி முடிச்சு போடுவது இன்னும் சுவாரஸ்யம்" என்று. அதைத்தான் ப்ரஷாந்த் நீலும் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட படத்தை நன்றாக இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாதபடியான ஒரு மேக்கிங்.


கதையைப் பொறுத்த வரை KGF முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாவது பாகம் சற்று சுமார் தான். முதல் பாகத்தில் ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கும். மேலும் கருடனைக் கொல்ல வேண்டும் என்கிற தெளிவான இலக்குடன் படம் பயணிக்கும்.


இரண்டாவது பாகத்தில் இரண்டுமே மிஸ்ஸிங். நிறைய கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை. ஈஸ்வரி ராவ் மற்றும் அவரது மகன் கதாப்பாத்திரங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அம்மா செண்டிமெண்டும் முதல் பாகம் அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. மூன்று அருமையான பாடல்களை ரொம்பவே சுமாராகப் படமாக்கியிருக்கிறார்கள். 


சஞ்சய் தத்தைப் பார்த்து அனைவரும் பயந்ததாகக் கூறுகிறார்கள். உண்மையில் வயதான தோற்றத்தில், அந்த கெட்டப்பில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 


சார்பட்டா பரம்பரையில் இடைவேளைக்கு முன்னரே வேம்புலியுடம் ஒன் டூ ஒன் சண்டை வைத்ததால் க்ளைமாக்ஸில் எப்படி அது பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையோ அதே போல ஆதிராவும் ராக்கி பாயும் ஆரம்பத்திலேயே சந்தித்துக்கொண்டு மாறி மாறி உயிர்ப்பிச்சை கொடுத்துக்கொள்கிறார்கள். 


ஒரு சில goosebumps காட்சிகளைத் தவிற படம் ரொம்பவே ஃப்ளாட்டாகச் செல்கிறது. 

ஆனால் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. விஷூவலி நம்மைக் கட்டிப்போடுகிறார்கள்.


ராக்கி பாய் படத்தில் சிங்கம் போல உலவுகிறார். அறிமுகக் காட்சி, போலீஸ் ஸ்டேஷன் காட்சி, ரெமிகாவை அவரது அலுவலகத்தில் சந்திக்கும் காட்சி, பார்லிமெண்டில் துப்பாக்கியுடன் நுழையும் காட்சிகளெல்லாம் அதகளம். 


என்னதான் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு சில குறைகள் தெரிந்தாலும் படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் நீண்ட நேரம் ராக்கி பாய் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறார். அதுதான் படத்தின் வெற்றி. 


-அதிரடிக்காரன்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

ஜீவி said...

தெளிவான விமர்சனம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...