சமரசம் (compromises). நம்முடிய வாழ்வில் அமைதிக்காகவும் சகமனிதர்களின் சந்தோஷங்களுக்காகவும் நம்முடன் நாமே செய்துகொள்ளும் ஒரு உடன்பாடு. ஆனால் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இந்த சமரசம் என்ற சொல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதே மகிழ்ச்சியை தருவதுபோல் தோன்றினாலும், ஒவ்வொருவர் வாழ்விலும் அதன் உண்மையான தாக்கம் என்ன? வாங்க கொஞ்சம் உள்ளே போய் பாக்கலாம்.
இந்த சமரசம் செய்துகொள்ளுதல் (compromises) என்பது என்ன? தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நமக்கு விருப்பம் அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்கிறோம். நாளைடைவில் அதன் கூடவே வாழக் கற்றுக்கொண்டும் விடுகிறோம். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? ஒரு சிறிய உதாரணம். நாம் இப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றோம்? நமக்கு ஒரு 15 வயது இருக்கும் பொழுது இந்த வேலைதான் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டோமா? நூற்றுக்கு 90 சதவீத பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். நம்மில் சிலர் மருத்துவர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், சிலர் வக்கீல்களாக ஆசைப்பட்டிருக்கலாம். சிலர் நடிகர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், ஏன், சிலர் அரசியல்வாதிகளாகக் கூட ஆசைப்பட்டிருக்கலாம்.
ஆனால் எதோ ஒரு சூழலில், சில நிர்பந்தங்களால் நாம் இப்பொழுது செய்யும் வேலைக்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலேயே பழகியும் விடுகிறோம். இப்பொழுது சிறு வயதில் உண்மையிலேயே நாம் என்னவாக ஆக விரும்பினோம் என்பதையே மறந்து எதோ ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். காரணம் நம் வாழ்க்கையின் எதோ ஒரு சூழலில் நாம் செய்துகொண்ட compromise.
இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமானால், உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆசைப்படுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக என்னுடைய மதிப்பெண், மருத்துவப் படிப்பில் சேர போதுமானதாக இல்லை. உடனே நான் என்ன செய்ய வேண்டும்? ஒன்று நான் முன்னதாகவே ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும். அல்லது ஒரு வருடம் காத்திருந்து மறுதேர்வெழுதி மருத்துவராக வேண்டும். இதை இரண்டையுமே செய்யாமல் மருத்துவர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவை விட்டுக்கொடுத்து பொறியியல் என்ற ஒரு பிரிவுக்குள் நுழைகின்றேன். இந்த இடத்தில் நான் செய்து கொண்ட சமரசமே என்னுடையை வாழ்வை திசைமாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றிலிருந்து என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் அன்று செய்த அந்த சமரசமே காரணமாகவும் அமைகிறது.
இங்கே ஒரு கேள்வி எழழாம்..”நான் மருத்துவராக ஆசைப்பட்டேன். ஆனால் சூழ்நிலை காரணமாக வேறு துறைக்கு சென்றுவிட்டேன். அதனால் என்ன இந்த துறையிலேயே நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். இதற்கு மேல் என்ன வேண்டும்?” என்று. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். நமக்கு விருப்பமல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு நம்மால் இந்த அளவு வெற்றிபெற முடிகிறதென்றால், நமக்கு பிடித்தமான ஒரு துறையையே தெரிவு செய்து நம் வாழ்க்கையை அமைத்திருந்தால் நம் வெற்றி எந்த அளவு இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறதா?
நமது ஊரில் ஒருவரைப் பார்த்தால் என்ன கேட்போம். “what are you doing?” அதாவது அவர் என்ன வேலை செய்கிறார் என்பதைத் தான் நாம் அவ்வாறு கேட்போம். ஆனால் சில வெளிநாடுகளில் “what you do for living” என்றே கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமான கேள்வி இதுவே. வாழ்வாதாரத்திற்காக மட்டுமே நாம், நமக்குப் பிடிக்காத துறைகளில் இருக்கின்றோமே தவிற வேறொன்றுமில்லை. பெரும்பாலும், நாம் பணி செய்யும் துறை நமக்கு பிடித்த துறையாக இருப்பதில்லை. எப்பொழுது நம்முடைய விரும்பிய துறையே நாம் பணி செய்யும் துறையாகவும் மாறுகின்றதோ அதன் பிறகு நம் வெற்றிக்கு அந்த வானமே எல்லை
சமரசத்தில் இரண்டு வகை இருக்கின்றது.
முதலாவது நன்மைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் சமரசம் (Good vs Good compromise). உதாரணத்திற்கு நீங்கள் உங்களது பைக்கை 20,000 ரூபாய்க்கு விற்க ஆசைப்படுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் அதனை 15000 ரூபாய்க்கு கேட்கின்றார். இறுதியில் இருவரும் 17500 க்கு ஒப்புக் கொள்கிறீர்கள். இதனை ஒரு சரிசமான பரிமாற்றம் என கூறலாம். இந்த பரிமாற்றத்தில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பெரிய லாபமும் இல்லை. இந்த வகையான சமரசங்களால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இரண்டவது ஒரு வகை உள்ளது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் சமரசம் (Good Vs Bad compromise). இதனை கீழ்வரும் ஆங்கில வாசகம் ஒன்று எளிதாக விளக்குகின்றது.
“If there is any compromise between food and poison death will be the winner. If there is a compromise between good and evil it is only evil that can profit”
உதாரணமாக நமது இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் என்ற எரிபொருளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மண்ணென்னையும் ஒரு எரிபொருள் தான். அதிலும் நமது வாகனங்கள் இயங்கும். ஆனால் விலைகுறைவு என்பதற்காக மண்ணென்னையை உபயோகிக்க ஆரம்பித்தோமேயானால் என்னவாகும்? 10 வருடம் இயங்கவேண்டிய நம் வாகனங்கள் 2 வருடத்தில் பழுதடைந்துவிடும். இந்த வகை சமரசம் பொதுவாக நீண்டகால பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சமூக அந்தஸ்து அல்லது சமூக பார்வை” என்பது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஒரு மாணவன் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பினால், சிறு வயதிலிருந்தே அதில் ஈடுபட நேரிடலாம், ஆனால் நம் சமூகமோ, முதலில் படிப்பு, பின்னர் மற்றவை என்று அவனை சமரசப் படுத்தி விடுகிறது.
இது போன்று பல அன்றாட விஷயங்களில் நடைபெறும் சமரசங்களை நாம் காண்கிறோம். இவ்வாறு சமூக அந்தஸ்து காரணமாகவோ, பொருளாதாரத்தின் அடிப்படையிலோ, மற்ற சில காரணங்களினால் செய்துக் கொள்ளும் சமரசங்கள், நீண்டகால அடிப்படையில் சமரசம் ஆகிக்கொள்பவர் மனதில் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கும் என்பதுதான் உண்மை.
இறுதியாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு மனிதரைப் பற்றி இந்த பதிவுக்கு சம்பந்தமான சில விஷயங்களைக் கூறி முடிக்கின்றேன். ஜேம்ஸ் கேமரூன் என்பவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும். இன்றும் உலக அளவில் பெரும் வசூலை குவித்த முதல் இரண்டு படங்களை இயக்கியவர் இவரே. ஆனால் அவரைப் பற்றி சிலருக்குத் தெரிந்த பலருக்கு தெரியாத சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
1990 களின் ஆரம்பத்தில் நீருக்கடியில் படம் பிடிக்கும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் இருந்த வசதிகளின் மூலம், சில கோணங்களில் மட்டுமே படம் பிடிக்க முடியும். நீருக்கடியில் வீடியோ கேமராக்களை எடுத்துக் கொண்டு நமக்கு தேவையான கோணங்களில் இயக்கி காட்சிகளை பதிவு செய்வது, அன்று பெரும் சவாலான ஒரு விஷயமாக விளங்கியது. தனது டைட்டானிக் படத்திற்குத் தேவையான சில காட்சிகளை எடுக்க அப்போதிருந்த வசதிகள் போதவில்லை என்பதை கேமரூன் உணர்ந்திருந்தார். உடனே தனக்கு தேவையான வசதி இல்லை என்றவுடன் சமரசம் செய்துகொண்டு இருக்கின்ற வசதியை வைத்துக் கொண்டு அந்த திரைப்படத்தை எடுத்துவிடவில்லை. அவருக்குத் தேவையான வசதிகளை அவரே உருவாக்கிக் கொண்டார்.
அவரும் அவரது சகோதரரும் இணைந்து நீருக்கடியில் கேமராக்களை எடுத்துக் கொண்டு, வெகு இலகுவாக தேவையான எந்த கோணத்திலும் இயக்கும் படியான ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதனை அமெரிக்காவில் பதிவும் செய்து அதன் பின்னரே டைட்டானிக் உருவாக்கதில் ஈடுபட்டிருக்கின்றனர். (Under water dolly – US patent No: 4,996,938)
அந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி், வெளியாகி 19 வருடங்கள் ஆன பின்னரும் இன்றும் மற்ற எந்த திரைப்படத்தாலும் நெருங்க முடியாத அளவு வசூல் சாதனை படைத்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கே இப்படி என்றால் முதலிடத்தில் உள்ள அவதார் திரைப்படத்தை பற்றி கூறினால் என்ன மனிதர் இவர் என்று தோன்றும். அவதார் திரைப்பட கதையை உருவாக்கி தேவையான தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் 10 வருடம் காத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அவதார் திரைப்படத்தின் கதை ”பேண்டூரா” என்ற ஒரு கிரகத்தில் வசிக்கும் ”நாவி” இன மக்களை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. நாவி இனத்தவர்கள் நமக்கு புரியாதது போல ஒரு மொழி பேசுகின்றனர் அல்லவா? அது எதோ புரியாத வார்த்தைகளை வைத்து எழுதப்பட்டது அல்ல. அது ஜேம்ஸ் கேமரூனால் அவதார் திரைப்படத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட, ஆயிரம் வார்த்தைகள் கொண்ட, இலக்கணத்துடன் கூடிய ஒரு புதிய மொழி. நாவி இனத்தவர் பேச ஒரு மொழி வேண்டும். ஆனால் அது பூமியில் பேசப்படும் எந்த மொழிகளுடனும் ஒத்துப் போகக் கூடாது. விளைவுதான் அந்த புதிய மொழியின் உருவாக்கம்.
அந்தப் படத்தில் தொடர்புடைய நடிகர்கள் அனைவருக்கும் அந்த மொழியை கட்டாயமாக கற்பித்த பின்னரே படப்பிடிப்பை துவங்கியிருக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதோ புரியாத சில வார்த்தைகளை உபயோகித்திருந்தால் கூட நாம் பார்த்து தான் இருப்போம். ஆனால் அவருக்கு தேவையான ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு படி மேலே போய் ஒரு புதிய மொழியையே உருவாக்கியிருக்கின்றார். எங்குமே சமரசம் செய்துக் கொள்ளாமல், தனக்கு விருப்பான ஒரு விஷயத்தை அடைய எத்தனை தூரம் உறுதியாக நின்றதால், பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றார்.
இதனை ஏன் கூறுகின்றேன் என்றால், சமரசம் செய்துகொள்வது சில இடங்களில் நன்மையை தந்தாலும், சமரசம் செய்துகொள்ளாமலிருப்பது பல இடங்களில், நீண்டகால அடிப்படையில் நன்மையை தரும். மாபெரும் வெற்றிகளைத் தரும். இந்த உலகத்தின் எந்த விஷயத்தை அடையவும் நமக்கு உரிமை உண்டு. அதற்குத் தேவையானவை சமரசம் இல்லாத தெளிவான நோக்கமும், கடின உழைப்பும் மட்டுமே.
No comments:
Post a Comment