Wednesday, July 26, 2017

மறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்!!!- பகுதி 2


Share/Bookmark








இந்தப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். 

காலம் காலமாகத் தொடர்ந்து வரும் புராணக்கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் அக்கதைகளில் ஒரு திரிவு ஏற்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் புராணங்களை எழுதும்போது அதில் தங்களது கற்பனைகளையும் சேர்த்துக்கொள்ள, பின்னால் வருபவர்கள் அதையே உண்மையெனவும் கொள்கிறார்கள். எழுத்துவடிவமே இப்படியென்றால் வாய்வழிச் செய்திகளைப் பற்றிக் கூறவே தேவையில்லை. ஒரு மனிதனிடம் நூறு சதவிகித செய்திகளைத் தெரிவித்து அதை மூன்றாவதாக ஒருவனிடம் தெரிவிக்கச் சொல்லும்போது அவனிடமிருந்து 60% செய்திகள் மட்டுமே மூன்றாவது ஆளைச் சென்றடையும் என ஒரு ஆய்வு கூறுகிறது. வடிவேலு சொம்பில் தண்ணீர் கேட்ட கதையை அனைவரும் அறிவோம். அதுபோலத்தான்.

சரி இப்பொழுது இந்த முன்னுரைக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. மியூஸ்க்கா என்பது  கொலம்பியாவின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்த ஒரு பழங்குடியினமாகும். மியூஸ்கா பழங்குடியினர் தங்களூக்கான ஒரு புதிய தலைவனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது விசித்திரமான சடங்குகளை நடத்துவது வழக்கம். அந்த சடங்கின்படி மியூஸ்கா இன மக்கள் அனைவரும் கவுடவிடா எனும் ஏரியில் கூடி, தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நிர்வாண உடலில் தங்கத் துகள்களால் பூசுவர். அப்படி வெற்று உடலில் அவர் மீது தங்கத் துகள்கள் படிந்திருக்கும்போது அவர் ஒரு தங்கத்தாலான மனிதன் போல காட்சியளிப்பார்.

பின்னர் அவரையும் அவருக்கான பணியாட்கள் சிலரையும் ஒரு அலங்கரிக்கப்பட்ட சிறிய படகில் ஏற்றி, ஏரியின் நடுப்பகுதிக்கு அனுப்புவார்கள். அந்த ஏரியின் நடுவில்  தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  படகிலிருந்து ஏரியில் குதித்து தன் மேல் படிந்துள்ள  தங்கத் துகள்களைக் நீரில் கழுவ வேண்டும். அதே சமயத்தில் அவரின் பணியாட்கள் விலையுயர்ந்த, தங்கத்திலான கலன்களையும், விலைமதிப்பற்ற கற்களையும் நீருக்குள் எரிவார்கள். இந்த சடங்கு மியூஸ்கா இனக் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையாகக் கருதப்பட்டது.

இந்த சடங்குகள் நடப்பதைப் பார்த்த எவரோ ஒருவர் இந்த செய்தியைப் பரப்பிவிட, தேடுதல் வேட்டை ஆரம்பமானது. மேலும் இந்த மியூஸ்கா இன மக்களிடம் தங்கம் சரளமாகப் புழங்குவதையும் “ஒரு பிச்சக்காரன்கிட்ட இவ்வளவு பணமா” என்பது போலச் சிலர் கவனித்து வந்தனர். 1545 ம் வருடம் கவுடவிடா ஏரியில்தானே அத்தனை சடங்குகளும் நடக்கின்றன.. அதனால் அந்த ஏரிக்குள்தான் மொத்த தங்கமும் இருக்கவேண்டும் என முடிவு செய்து லஸாரோ ஃபாண்டே மற்றும் ஹெர்மென் பெரெஸ் என்ற இருவர் கவுடவிடா ஏரியை வற்ற வைத்து தங்கத்தை அள்ளிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

எண்ணூர் துறைமுகத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்ட பொழுது அதை அதி நவீன இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினார்கள் அல்லவா? அதே இயந்திரத்துரத்துடன் ஏரியை வற்ற வைக்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த நவீன இயந்திரம் என்ன என்று புரியவில்லையா? நம்ம குளிக்க உபயோகிக்கும் வாளிதான் அந்த இயந்திரம்.

மனிதர்களை சங்கிலி போல வரிசையாக நிற்க வைத்து வாளியின் மூலம் ஏரியின்  நீரை அள்ளி வெளியே இறைத்து, ஏரியை வற்ற வைப்பதுதான் அவர்களது திட்டம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இடைவிடாமல் ஏரி நீரை இறைத்ததில் வெறும் மூன்று மீட்டர் மட்டுமே ஏரியின் நீர் மட்டம் குறைந்திருந்தது. இன்னும் எத்தனை மாதம், எத்தனை வருடம் இறைத்தால் ஏரி வற்றும் என்ற யோசித்து தலை கிறுகிறுத்ததால் அத்துடன் அந்த திட்டத்தை ஏரக்கட்டினார்கள். ஆனாலும் அவர்களின் முயற்சிக்கு கொஞ்சம் பலன் இருக்கத்தான் செய்தது. மூன்று மீட்டர் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் ஏரிக் கரையோரங்களில் ஒதுங்கியிருந்த சில தங்கத்தாலான பொருட்களைக் கைப்பற்றினர். இன்றைய மதிப்பில் அவர்கள் கைப்பற்றிய தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் டாலர்.

அத்துடன் நிற்காமல் 1580 இல் இன்னொரு தொழிலதிபர் ஆண்டனியோ என்பவர் தலைமையில் கவுட்டவிடா ஏரியை வற்றவைக்கும் பணி மீண்டும் தொடங்கிது. ஆம். அதே வாளி.. அதே வாடகை. சென்ற முறை மூண்று மீட்டர் வரை வற்றவைக்கப்பட்ட ஏரி இந்த முறை 20 மீட்டர் வரை வற்றவைக்கப்பட்டது. (ரெண்டு மூணு வாளி சேத்து எடுத்துட்டு போயிருப்பாய்ங்க போல) ஆனால் இந்த முறையும் ஏரியை முழுமையாக வற்றவைக்க முடியவில்லை.

மாறாக போன முயற்சியில் கிடைத்ததை விட கிட்டத்தட்ட மூண்று மடங்கு அதிகமான தங்க அணிகலன்கள், தங்கக் கவசம் போன்றவை கைப்பற்றப்பட்டன.  அதன் இன்றைய மதிப்பு தோராயமாக மூண்று லட்சம் டாலர் அந்த முயற்சியில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு கணிசமான பகுதி அப்பொழுது ஸ்பெயினை ஆண்ட மன்னர் இரண்டாம் ஃபிலிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தொழிலதிபர் ஆண்டொனியோ தனது கடைசி காலத்தில் ஒரு ஏழையாக வாழ்ந்து மடிந்தார்.

1801 இல் அலெக்ஸாண்டர் ஹம்போல்ட் என்கிற ஒரு ஜெர்மன் ஆய்வுப்பணியாளர் கவுடவிடாவிற்கு சென்று வந்து, அந்த ஏரியில் புதைந்து கிடக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 2000 கோடிக்கு மேல் என ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

1898 இல் ப்ரிட்டீஷ் இந்த கவுடவிடா ஏரியை ஆய்வு செய்து அதிலிருக்கும் தங்கத்தை எடுப்பதற்காகவே தனிக் குழுவை அமைத்து, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் அந்தப் பணியை ஒப்படைத்தது. சிறப்பாக செயல்பட்ட அந்தக் குழு கவுட்டவிடா ஏரியின் நடுவில் இருந்த ஒரு குகை மூலமாக மொத்த நீரையும் வற்றச் செய்தது. ஏரி வெறும் நான்கடி ஆழத்திற்கு வந்தது. ஆனால் அந்த நான்கடியில் இருந்த்து நீர் அல்ல.. வெறும் சேரும் சகதியும்..

இந்த நிலையில் சேற்றுக்குள் இறங்கித் தேட இயலாது என முடிவு செய்தவர்கள் ஏரி உலர்வதற்காகக் காத்திருந்தார்கள். அங்கேதான் திருப்பம் நன்றாக உலர்ந்த பின்னர் அந்த சேறும் சகதியும் நிறைந்த பரப்பு கான்கிரீட் தரையைப் போல கெட்டியாக மாறிப்போனது. பழைய சோறு சட்டியோடு உடைந்த சோகத்தில், கிடைத்த ஒண்றிரண்டு பொருட்களை மியூசியத்திற்கும், சில பொருட்களை ஏலமிட்டும் கொஞ்சம் பணத்தைத் தேற்றிக்கொண்டு அந்த கம்பெனி கடையை மூடியது.

1965ம் ஆண்டு கொலம்பிய அரசு, கவுட்டவிடா ஏரியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அந்த ஏரியில் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற ஆய்வு நடத்துவதை தடை செய்த்து. குறிப்பாக ஏரியை வற்ற வைக்கும் செயல்களை தண்டனைக்குறிய குற்றமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

மியூஸ்கா இன மக்களின் தலைவன் குளித்த அந்த ஏரியிலேயே இத்தனை சோதனைகள் பலரால் நடத்தப்பட்டது எனும்போது அவர்கள் வாழ்ந்த தங்க நகரத்தை தேடாமல் இருந்திருப்பார்களா?


தொடர்வோம்..!!!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Anonymous said...

interesting ah irukku anna

Alex said...

Super bro

Thangaraj said...

Irumbukai mayavi story mathiri irukku sir

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...