Friday, April 27, 2018

மறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்- பகுதி 3


Share/Bookmark



இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும் இரண்டாவது பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும் மூன்றாவது பகுதியைப் படிக்க எங்கேயும் க்ளிக்க வேண்டாம். தொடர்ந்து படிக்கவும்.

மியூஸ்கா இன மக்களின் விநோதமான வழிபாட்டு முறையும், தங்க மனிதனைப் பற்றிய செய்தியும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, காலம் கடந்து மக்கள் விட்டு மக்கள் செல்லும் போது முதலில் தங்க மனிதனாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாகத் திரிந்து தங்க நகரமாக உருவெடுத்தது

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களின் முதல் குறி கவுடவிடா ஏரி.. அதனைச் சல்லடை போட்டுச் சலித்தார்கள். கிடைத்தது மிகச் சொற்பமான தங்கமே. கொலம்பிய அரசு கவுடவிடா ஏரியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. ஆனாலும் தேடுதல் வேட்டை நின்றுவிடவில்லை.  மியூஸ்கா இன மக்கள் வாழ்ந்த இடமெங்கும் தேடத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல தங்க நகரம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியின் பரப்பளவும் அதிகரித்தது. அமேசான் காடுகள், கொலம்பியா, கயானா, வெனிசுலா, ப்ரேசிலின் வடக்குப் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் தங்கம் கிடைத்ததோ இல்லையோ புதுப் புது இடங்களைக் கண்டுபிடித்து மனிதர்கள் தேடியதில் வரைபடத்தில் இல்லாமல் இருந்த பல பகுதிகள் வரைபடத்தில் சேர்க்கப்பட்டன.

கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக தங்க நகரம் என்ற ஒண்று உள்ளது எனத் தேடித் திரிந்தவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்கநகரம் என்பது ஒரு கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அந்த நிலையில் 1906இல் பிரேசில் மற்றும் பொலீவிய நாடுகளின் எல்லைகளை வரைபடமாக்கும் பணி நேஷனல் ஜாக்ரஃபிகல் சொசைட்டி எனும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இருந்து அதன் எல்லைகளை வரைபடமாக்கிக் கொடுப்பதே இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நேஷனல் ஜாக்ரஃபிகல் சொசைட்டியின் சார்பாக அந்த வரைபடமாக்கும் பணியை மேற்கொண்டவர் பெர்சி பாசெட் என்பவர். சில ஆண்டுகள் ப்ரேசில் மற்றும் பொலீவிய எல்லைகளில் பயணித்து அதன் எல்லைகளை வரைபடமாக்கிக் கொடுத்தார் பாசெட்.

1906 முதல் 1924 வர மொத்தம் ஆறு முறை பயணம் மேற்கொண்டிருந்த  பாசெட், அந்தப் பயணத்தின்  போது தான் 60 அடி நீள அனகோண்டா பாம்பைக் கண்டதாகவும் அதனை சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருந்தார். அதேபோல் வகைபடுத்தப்படாத சில விநோதமான விலங்குகளையும், இரண்டு மூக்குகள் கொண்ட நாய்களையும்  அமேசான் காடுகளில் கண்டாதாக் கூறினார். ஆனால் பெர்சி பாசெட்டின் இந்த கூற்றுக்கள் பெரும்பாலானோரை நகைப்புக்குத்தான் உள்ளாக்கியது. பெர்சி பாசெட் கூறிய இரண்டு மூக்குகள் கொண்ட நாய் என்பது ”Double-nosed Andean tiger hound” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும் என சிலர் கருதினர்.

1910 இல் ”ஹீத்” ஆறு உருவாகுமிடத்தைக் கண்டறிய ஒரு  பயணம் மேற்கொண்டார் பெர்சி.  ஹீத் ஆரு உருவாகுமிடத்தில் மனித சமுதாயம் வாழ்ந்திருப்பதற்கான சில ஆதாரங்கள் பெர்சிக்கு கிடைத்தது. பெர்சி தனது பயணத்தின் முடிவில் இதனை சக அறிஞர்களிடம் கூற யாரும் அங்கு மனித சமுதாயம் வாழ்ந்தாக நம்பவில்லை. நம்பவும் தயாராக இல்லை.

பெர்சி தனக்கு கிடைத்த ஆதாரங்களையும், தான் பயணத்தின் போது கண்டவற்றையும் ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல நூல்குறிப்புகளில் ஆதாரங்களைத் திரட்டினார்.  தான் சேகரித்த தகவல்கள் மூலம் ஒரு மிகப்பெரிய தங்க நகரம் அமேசான் பகுதிகளில் மறைந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தார். அதற்கு “Z” என்றும் பெயரிட்டார். மிகப்பெரிய மனித நாகரீகம் ஒண்று வாழ்ந்து மறைந்திருக்கலாம். அவர்கள் வாழ்ந்த பகுதியின் மீதமாக இந்த தங்க நகரம் இருக்ககலாம் எனவும் நம்பினார்.

மேலும் பெர்சியின் ஆய்வின் போது இன்னொரு முக்கியக் குறிப்பையும் கண்டறிந்தார். அது ஜோவா டா சில்வா க்யாமாரஸ் என்பர் எழுதிய Manuscript 512 எனும் நூற் குறிப்பு. அதில் அவர் தான் 1753ம் ஆண்டு தன்னுடைய பயணத்தின் போது பல நுழைவாயில்கள், சிலைகள், கோவிலகளைக் கொண்ட ஒரு இடிந்து போன நகரத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். எந்தப் பகுதியில் கண்டார் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. பெர்சி தங்க நகரத்திற்குப் பிறகு பெர்சியின் அடுத்த இலக்கு இந்த நகரத்தைக் கண்டுபிடிப்பது தான்.

1920 இல் “Z” என்னும் தங்க நகரத்தைத் தேடி தனியாக ஒரு பயணத்தைத் தொடங்கினார். ஏற்கனவே பல முறை காடுகளில் வரைபடப் பணிக்காக சென்றதில் பல பழங்குடி இனத்தினரிடம் பெர்சிகு நல்லுறவு இருந்தது. ஆனால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் தங்க நகரத்தின் தேடுதல் வேட்டையை முழுமையாகத் தொடராமல் கைவிட்டார்.

அப்போது எஞ்சியிருந்த மியூஸ்கா இன மக்களைப் பொறுத்த வரை தங்கம் என்பது ஒரு விலை மதிப்பற்ற பொருளாக அவர்கள் கருதவில்லை. மாறாக அது அன்றாடம் புழங்கும், அடுத்தவர்களுக்கு வழங்கும் ஒரு பொருளாகவே அவர்களிடம் இருந்த காரணத்தினால் நிச்சயம் பெரிய அளவில் தங்கம் அவர்களிடம் புழங்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கநகரம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக பெரும்பாலானோர் நம்பினர்.

பெர்சி தங்க நகரத்தைத் தேடி அடுத்த பயணம் செலவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் பல மாதங்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்வது சாதாரண விஷயமல்ல. நிறைய பணமும், பொருட்களும் தேவை. 1925ம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தங்க நகரத்தைச் தேடும் பயணத்தை தனது மூத்த மகன் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவருடனும் தொடங்கினார்.

மேலும் ஒரு வேளை தான் இந்த பயணத்திலிருந்து திரும்பி வராவிட்டால் தன்னை தேடுவதற்காகவோ அல்லது மீட்பதற்காகவோ யாரையும் அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். காடுகளில் மாதக் கணக்கில் பயணம் என்பது எத்தகைய கொடூரமானது என்பதை தன்னுடைய முந்தைய பயண அனுபவங்கள் மூலம் அறிந்திருந்த பெர்சி, தான் படும் கஷ்டம் தன்னைத் தேடி வருபவர்கள் பட வேண்டாம் என நினைத்திருந்தார்.

பயணம் ஆரம்பித்த ஒரு மாதத்தில் தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ”இதுவரை யாருமே கண்டறியாத, சென்றிருக்காத ஒரு இடத்தில் நாங்கள் மூவரும் நுழையப் போகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். கடைசியாக Dead Horse Camp எனும் இடத்தில் இருந்து தன்னுடைய இருப்பிடத்தைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதினார். அதுதான் பெர்சியிடமிருந்து கிடைத்த கடைசி கடிதம். அதன்பிறகு அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.  பெர்சியும் அவருடன் சென்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பதும் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.

பெர்சி, அவர் தேடிக்கொண்டிருந்த தங்க நகரத்தை கண்டறிந்து அந்த மக்களுடனேயே தங்கிவிட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. பெர்சியையும்  அவருடன் சென்றவர்களையும் பழங்குடியினர் கொன்றிருக்கலாம் எனவும் இன்னொரு கருத்து நிலவுகிறது. அல்லது பருவநிலை காரணமாக பயணத்தை தொடரமுடியாமல் வழியில் அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் ஒரு கருத்து உண்டு. அப்டியென்றால் அவர்களது உடல்கள் கிடைத்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. சில வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்ட சில எலும்புத்துண்டுகள் பெர்சியுடையது என நம்பப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பெர்சியுடையது அல்ல என்பது நிரூபனமானது.



பெர்சி பாசெட்டின் இந்த பயணங்கள் The Lost City Of Z (2016) எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. உண்மைக்கதை என்றாலும் ஓரளவிறகு சுவாரஸ்யமாகவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. நேரமிருப்பவர்கள்  பார்க்கலாம்.

இந்த தங்க நகரத்தைப்பற்றிய ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. El dorado எனத் தேடி அதிலிருந்து ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கிறது. நேரமிருப்பவர்கள் ஆர்வமிருப்பவர்கள் படிக்கலாம்.
  



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...