Tuesday, February 7, 2012

கண்டுபிடி கண்டுபிடி


Share/Bookmark
இரவு 11 மணி..  கட்சி கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் M.L.A ராஜமாணிக்கமும், முல்லைவேந்தனும் ஹோண்டா சிட்டியில் ரெட்டேரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கத்தின் ட்ரைவர் குருமூர்த்தி 4 காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.முல்லை வேந்தன் ஆரம்பித்தான்... "நல்ல வேளை இன்னிக்கு நம்ம தானா ஊனா வரல... இல்லைன்னா கூட்டம் இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சிதான் முடிஞ்சிருக்கும்... மனுஷம் பேசியே கொன்னுருவாரு."

"ஹா ஹா... ஆமாய்யா.."

தலைவரே என்ன இருந்தாலும் அந்த இன்ஸ்பெக்டர் நீலகண்டன இன்னிக்கு செம காட்டு காட்டிடீங்க... பய ஆயுசுக்கும் இனிமே உங்கள கண்டா பயப்புடுவான்.."

"ஹாஹா...நா பதவிய விட்டு இறங்குனதுலருந்து  பய கொஞ்ச நாளு அதுப்பாவே திரிஞ்சான்... அதான் இன்னிக்கு பந்தோபஸ்த குறை சொல்ற மாதிரி அவன புடிச்சி நாலு காட்டு காட்டுனேன்.. அப்ப தான் நாள பின்ன நம்ம மேல பயம் இருக்கும். சொல்பேச்சு கேப்பான்..."

இருவரும் பேசுக்கொண்டு சென்றிருக்க "தலைவரே நா இங்க இறங்கிக்குறேன்.. அப்புடியே நடந்து போனா வீடு அஞ்சு நிமிஷம் தான்.. " என முல்லை வேந்தன் சொல்ல, கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு, அவனை
வெளியே கிடத்தியது. மேலும் இருபது நிமிட பயணத்தில் ராஜமாணிக்கத்தின் வீடு. அந்த தெருவின் இறுதியில் ராஜமாணிக்கத்தின் வீடு ப்ரம்மாண்டமான மாளிகை போன்று காட்சி அளித்தது. போனமுறை ஆட்சியில் இருக்கும் போது வளைத்து போட்டு கட்டியது. பக்க வாட்டில் நீச்சல் குளம் பின்புறம் சிறிய
தோட்டம் என அனைத்து வசதிகளும் நிறைந்து காணப்பட்டது.

வாசலுக்கு வெளியில் இருந்து ஹார்ன் அடிக்க செக்கியூரிட்டி அந்த பெரிய இரும்பு கேட்டை திறந்து காரை உள்ளே அனுமதித்தான். போர்டிக்கோவில் காரின் இஞ்சின் அணைய ராஜமானிக்கம் இறங்கி கதவை திறந்து வீட்டிற்குள் சென்றான். குருமூர்த்தி காரின் டிக்கியில் கிடத்தப்பட்ட பொனாடைகளையும், மாலைகளையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

வீட்டிற்குள் சென்ற ராஜமாணிக்கத்திற்கு தாகம் தொண்டையை அடைத்தது. எப்பொழுதும் வீட்டிற்கு வந்தவுடனே தண்ணீருடன் ஓடிவரும் மனைவியும் மகளும் மதுரைக்கு பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தனர். மெல்ல நடந்து சென்று கிச்சனில் உள்ள ஃபிரிட்ஜை திறந்து தண்ணீரை எடுத்து தொண்டையை நனைக்க, வீட்டின் பின்புறத்திலிந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்தான். காதை சற்று உன்னிப்பாக்க, யாரோ நடப்பது போலான சத்தம் நன்றாக கேட்டது. ஒரு வேளை குருமூர்த்தியா.. அவனுக்கு என்ன வீட்டுக்கு பின்னாடி வேலை.. என சற்று வேகமாக வந்து போர்ட்டிகோவை எட்டிப்பார்க்க குருமூர்த்தி காரின் டிக்கியில் ஏதோ குடைந்து கொண்டிருந்தான். அப்போ வேற யாரு பின்பக்கம் இருக்கது?

மெதுவாக பின் வாசல் கதவருகில் சென்று மெதுவாக லாக்கை விடுவித்து வெளியே உள்ள சுவிட்சை தொடப்போக, தட தட என்ற சத்ததுடன் கண் இமைக்கும் நேரத்தில் ராஜமாணிக்கத்தை கீழே தள்ளி விட்டு அந்த உருவம் வேகமாக தோட்டத்திற்குள் ஓடியது. முகத்தினை சரியாக பார்க்க முடியவில்லை.

"டேய் குருமூர்த்தி... டேய் குருமூர்த்தி..." ராஜமாணிக்கம் அடித்தொண்டையில் அலற குருமூர்த்தி அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தான்.. "என்னங்கையா ஆச்சு... என்னங்கையா ஆச்சு"

"டேய் யாரோ நம்ம வீட்டு கொல்லப்பக்கத்துலருந்து என்ன தள்ளி விட்டுட்டு ஓடுறாண்டா.. போய் பாரு"

"எந்த பக்கம்யா போனான்" எனக்கேட்ட குருமூர்த்தி ராஜமாணிக்கம் கை காட்டிய திசையில் அருகிலிருந்த சிறு மரக்கட்டையை எடுத்துக்கொண்டு ஓடினான். சுற்றும் முற்றும் தேடிப்பார்க்க எவரும் கண்ணில்  அகப்படவில்லை. சுற்றிகட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரில் பாட்டில் க்ளாஸ்கள் பதித்திருக்க ஒரு இடத்தில் மட்டும் லேசாக அகற்றப்பட்டிருந்தது.. அதில் கையை வைத்து லேசாக மேலேறி எட்டிப்பார்த்த குருமூர்த்தி அதன் பின்னர் இருந்த புறம் போக்கு இடங்களை மட்டுமே காண முடிந்தது. எவரும் கண்ணில் தென்பட வில்லை.

திரும்பி வந்த குருமூர்த்தி "அய்யா ஒருத்தனையும் காணலையா.. எதயும் களவாங்க வந்திருப்பாய்ங்க  போலருக்கு. நல்ல வேளை நாம கரெக்டான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துட்டோம்.. கொஞ்சம் லேட் ஆயிருந்தா கதவுல ஓட்டை போட்டு  எதயாச்சும் எடுத்துட்டு போயிருப்பாய்ங்க. "

"ஆமாடா... சரி போலீஸுக்கு போன் போடு"

"சரிங்கையா" என சொல்லிவிட்டு செல்போனை எடுத்து நம்பரைத் தட்டி பேச ஆரம்பித்தான்..

மூன்று நிமிடம் கழித்து "அய்யா... நம்ம வீடு அந்த இன்ஸ்பெகடர் நீலகண்டன் ஏரியாலதான் வருது.. அந்தாளு தான் பேசுனான். கொஞ்சம் உங்க மேல கடுப்புல இருப்பான் போலருக்கு.. காலைல பாக்கலாம்... ஸ்டேஷன்ல எல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்கன்னு சொல்லி கட் பண்ணிடான்யா..."

"திருட்டுப்பய.. அவனுக்கு இன்னும் புத்தி வரலாயா..."

"சரிங்கையா... எதுக்கும் இன்னிக்கு நைட்டு நா பின்பக்கமே கட்டில போட்டு படுத்துக்குறேன்... நீங்க பத்தரமா தாழ் போட்டுட்டு படுங்கய்யா.. காலைல பாக்கலாம்" என குருமூர்த்தி சொல்ல, "சரி பாத்துக்க..எதுவும்னா குரல் குடு" என்று கூறிவிட்டு ராஜமாணிக்கம் உறங்கச்சென்றார்.

*********************************************************************************************

காலை 9 மணி. இன்ஸ்பெக்டர் நீலகண்டனும் இரண்டு கான்ஸ்டபிள்களும் ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்திரங்கினர். போர்டிக்கோவில் தினகரனை புரட்டிக்கொண்டிருந்த ராஜமாணிக்கம்

"வாங்க இன்ஸ்பெக்டர்... கொலை பண்ண வர்றாங்கன்னு கம்ப்ளைண்ட் பண்ணா அடக்கம் பண்றதுக்கு தான் வருவீங்க போல.."

"சாரி... நைட் ஸ்டேஷன்ல யாரும் இல்ல... எல்லாம் ரெய்டுக்கு போயிருந்தாங்க.,.. சரி நடந்ததை கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.. காண்ஸ்டபிள்ஸ் நோட் பண்ணிக்குங்க"
என்றவுடன் ஒரு 5 நிமிடத்தை விழுங்கி அனைத்தையும் சொல்லி முடித்தார் ராஜமாணிக்கம்.

"சரி பின்பக்கம் போகலாமா?" என நீலகண்டன் கேட்க, ராஜமாணிக்கமும் ட்ரைவர் குருமூர்த்தியும்  பின்புற தோட்டத்திற்கு வழிநடத்திச்சென்றனர்.

நீலகண்டன் தோட்டத்தை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டார். நீண்ட நாட்களாக நல்ல பராமரிப்பில் இருக்கும் தோட்டம் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. 20க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள். அவற்றில் ஐந்து ஆறு செடிகள் பூக்களுடன் அழகாக காட்சி அளித்தன. இரண்டு கொய்யா மரங்களும் காய்க்க ஆரம்பிக்காத 5 தென்னை மரங்களும் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருந்தன. சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பபட்டு சுவற்றின் மேல்
பாட்டில்கள் உடைத்து வைக்கப்பட்டிருந்தது.

குருமூர்த்தி சுவற்றில் பாட்டில்கள் ஒரு இடத்தில் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதையும், அந்த வழியாகவே அவன் வந்திருக்க வேண்டும் எனவும் நீலகண்டனிடம் கூற, நீலகண்டன் உள்ளே சென்று அந்த சுவற்று பகுதியை பார்வையிட்டு விட்டு ராஜமாணிக்கத்திடம் வந்தான்.

"வீட்டுல நீங்க வச்சிருந்த எதாது பொருள் காணாம போயிருக்கா? எதாவது திருட்டு பயலுகள வேலையா தான் இருக்கும்.. நாலு பேர புடிச்சி தட்டுனா உணமைய கக்கிருவாயிங்க"

"இல்லை... வீட்டுல எதுவும் காணாம போகல.... அநேகமா நேத்து கொஞ்சம் லேட்டா வந்துருந்தா  கூட எதயாச்சும் தூக்கிட்டு போயிருந்தாலும் போயிருப்பான்.."

"சரி நீங்க ஒரு கொலைமுயற்சின்னு ஒரு கம்ப்ளைண்ட் குடுங்க.. அத வச்சி நாலு பேர் தூக்கி உள்ள போட்டு விசாரிக்கலாம்.." என்ற நீலகண்டன் அந்த கம்ப்ளைண்ட் பேப்பரில் கையெழுத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

----------------------------

அடுத்த பதிவில் தொடரும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

குறையொன்றுமில்லை. said...

ஆரம்பமே எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருக்கு. தொடருங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...